முகமூடி.... கழற்றி எறியப்பட்ட முகம்.

ஆதவா

New member
ஒரு சூப்பர் ஹீரோவுக்கு எப்பொழுதும் தருக்க ரீதியிலான காரணங்கள் உண்டு. அவன் ஏன் தேவைப்படுகிறான் என்பதன் மீதான மிக அழுத்தமான அல்லது மித அழுத்தமான ஒரு காட்சி நிச்சயம் இருக்கும். தங்களைக் காக்க ஒருவன் கடவுளென வரமாட்டானா எனும் பார்வையாளின் அசாத்திய கனவுகளின் வெளிப்பாடுதான் அசாதாரண மனிதன் எனும் கதைகள் தோன்றுவதற்கான காரணம். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் சூப்பர் ஹீரோ என்பவன் இன்று நேற்று முளைத்தவனல்லன், ஸ்டான்லீ, பாப் கேன் போன்ற மிகச்சிறந்த கற்பனாவாத சித்திர எழுத்தாளர்களின் வழியாக மெல்ல மெல்ல உருப்பெற்று இன்று வளர்ந்து நிற்கிறது. மேலும் அதன் மீதான மீள்பார்வையும் அவ்வப்போது வைக்கப்படுகிறது., அமெரிக்கர்களின் பொருளாதார சூழ்நிலைக்கொப்ப அத்திரைப்படங்களும் பிரம்மாண்டமாகவே வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

நமது தமிழ் சினிமாவிலும் சூப்பர் ஹீரோக்கள் உண்டு. மக்களை காப்பதுதான் ஒரு சூப்பர் ஹீரோவின் வேலை என்றால் நமது முதல் சூப்பர் ஹீரோ எம்.ஜி.ஆர் தான். ஒரே குத்தில் ஒன்பதடி தூரம் பறந்துவிழுமளவு திறமைமிக்க பாத்திரங்கள் வடிக்கப்பட்டு வெளிவரும் எல்லா படங்களுமே சூப்பர் ஹீரோ படங்கள்தான்.. நமது திரைப்படங்கள் நமது பார்வையைக் குலைத்து புரிதலை மாற்றியமைத்து வைத்திருப்பதுதான் ஆகப்பெரிய சாதனை என்று கருதுவேன்.

ஆனால் அமெரிக்க சூப்பர் ஹீரோ எப்படி மாறுபடுகிறான்?

அமெரிக்க படங்களில் வரும் சூ.ஹீரோ அசாத்திய சக்தியினை அடக்கிய ஒரு சாதாரண மனிதனாக இருக்க முயலுவான், அல்லது தனக்கேயுரிய கண்டுபிடிப்புகள் மூலமாக ஒரு சூப்பர் ஹீரோவாக முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றியும் பெறுவான், (பெரும்பாலும் ம்யூட்டண்டுகளைத்தான் இந்தியர்கள் ரசிக்கிறார்கள்) ஒரு கொலை, தன்னை உணரல், பழிவாங்கல், இறுதியில் மக்கள் நாயகனாக இருத்தல்.... இவையனைத்தும் ஒரு சூ.ஹீ படங்களில் நிச்சயம் எதிர்பார்க்கலாம்..

சரி.. ஓவராக பேசாமல் விசயத்திற்கு வருகிறேன்.

அமெரிக்க படங்களோடு எப்பொழுதும் நமது படங்களை ஒப்பிடவே மாட்டேன்... மிஸ்கினின் முகமூடி ஒரு சூ.ஹீ படம் என்பதால் ஒரு சூ.ஹி படத்திற்குண்டான அம்சங்களை சரிபார்த்துக் கொள்ளவேண்டியிருக்கிறது. காமிக்ஸ் படிக்கும் பழக்கமில்லாத (புத்தகம் அறவே படிக்கும் பழக்கமில்லாத) நம்மிடையே ஒரு புதிய சூப்பர் ஹீரோ உருவாவதற்கான சாத்தியங்களை நாம் எப்பொழுதும் கொடுத்ததேயில்லை. புத்தகங்களிலிருந்து சினிமா செல்வதற்கான வழியையும் நாம் கடைபிடிப்பதில்லை என்பதற்கான சாட்சியாக “முகமூடி” முகம் முழுக்க பேண்டேஜுகளைப் போட்டு கிடக்கும் நோயாளியைப் போல வந்திருக்கிறது. இது மிஸ்கினிடமிருந்து வந்திருப்பதுதான் ஆகப்பெரிய வியப்பு.

இரண்டு கதைகள் பேரலல்லாக நகர்கின்றன. ஒன்று, ஜீவா எனும் குங்ஃபூ மாணவன் காதலியைக் கவிழ்க்க முகமூடியணிந்து இரவில் திரிகிறான். இரண்டாவது ஒரு முகமூடி கும்பல் நகைகளை மட்டுமே கொள்ளையடிக்கிறார்கள். அவர்களை பிடிக்க முடியாமல் திணறும் போலிஸ்.. இவர்கள் சந்திக்கும் ஒரு புள்ளியிலிருந்து கதை துவங்குகிறது... அதற்குள் இடைவேளை வேறு.. யாருமில்லாத இடத்தில் முகமூடி அணிந்துகொண்டும், யாராவது பார்க்கும்பொழுது முகமூடி கழற்றும் கொடூரமான வில்லன் நரேன் தான் இதற்கு முக்கிய காரணம் என்றறிந்த பிறகு தான் தப்பிக்க பள்ளி வாகனத்தைக் கடத்தி டிமாண்ட் செய்கிறான். கூடவே காதலியையும்.. காதலிக்கு ஒரு ட்விஸ்டெல்லாம் இருக்கிறது. அந்த கண்றாவியைப் பற்றி எழுத விரும்பவில்லை இவர்களை எப்படி மீட்கிறான் என்பது மீதிக் கதை

ஒரு சூ.ஹீ படத்தினை இயக்கப்போவதாக அறிவித்து விட்டோம்... முதலில் என்ன செய்யலாம்... நமது பட்ஜெட்டுக்கு நம் ஹீரோவை ஸ்பைடமேனாகவோ சூப்பர்மேனாகவோ மாற்றமுடியாது.. மிகப்பிரச்சித்தமான பேட்மேன் தான் சரியான தேர்வு. ஏற்கனவே நிறைய சூ.ஹீ படங்கள் வெளிவந்துவிட்டமையால் நகலெடுக்கக்கூடாது.. அல்லது நகலெடுத்தது தெரியக்கூடாது.. டார்க் நைட் தான் என்று முடிவாகிவிட்ட பிறகு படத்தில் ஒரு கொள்ளை இருக்கவேண்டும், ஹீரோ ப்ரூஸ் வேய்ன் மாதிரி பணக்காரனாக இருந்தால் அது காப்பி, ஏழையாக்கிவிடலாம். ஆனால் அவரது தாத்தா லூஸியஸ் ஃபாக்ஸாக இருக்கலாம். பெரிதாக தெரியாது. மேக்கப் கூட பாதி பேட்மேன், முகத்தில் ஐஸ் வைட் ஷட்டில் படத்தில் வரும் முகமூடி.. வில்லன் க்ரூப்புகளுக்கு மோர்டல் காம்பாக் ஸ்கார்பியன் மாதிரி முகமூடி!! வில்லன் ஒரு ஜோக்கர்... ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒன்பதுமாதம் தங்குபவன் ஒரு குங்ஃபூ பள்ளியைக் கட்டி சம்பாதிக்கிறான்... டார்க்நைட் ஜோக்கர் எப்படி காரணமில்லாமல் பேட்மேனை எதிர்கிறானோ அதைப்போல நரேன் காரணமில்லாமல் கொள்ளை அடிக்கலாம்.. அதுசரி கொள்ளையடிக்க ஏது காரணம்? ஜோக்கர்தான் நரேன் என்று முடிவாகிவிட்ட பிறகு ஜோக்கரின் சில குணாதிசயங்களைப் பொருத்திவிடலாம். மனதினை குழப்பிவிட்டு வெறியேற்றி அடிப்பது ஜோக்கரின் வேலை என்றால் நாமும் அதையே செய்வோம். யாராவது ஒருவரின் இறப்பில்தான் சூ.ஹீ தோன்றுவார்.. அதை அப்படியே காப்பியடிக்கக் கூடாது, இறப்பது போல காட்டிவிட்டு உயிர்த்தெழ செய்திடவேண்டும். கப்பல் நிறைய பயணிகளைக் கடத்தினால் நம் பட்ஜெட்டுக்கு ஆகாது. தவிர டார்க் நைட்டையே காப்பியடித்தல் கூடாது. சட்டென ஸ்பைடர்மேனுக்குத் தாவுவோம். ஒரு வேனைக் கடத்துவோம். முகமூடியின் காதலியையும் கடத்துவோம்.. ஆங்... ஓவர் காப்பி உடம்புக்கு நல்லதல்ல... ஜோக்கர் எப்பொழுதும் பேட்மேனோடு சண்டையிடமாட்டார். நாம் சண்டையிட வைப்போம். ஹீரோவைவிட வில்லன் சக்தி மிகுந்தவனாக்கிவிடுவோம்.. பிறகு எப்படி வெல்வது?? கராத்தே கிட்டிலிருந்து கொஞ்சம் கடன் வாங்குவோம். வித்தியாசமான ஏணி ஃபைட், வில்லனுக்குத் தெரியாது ஆனால் ஹீரோவுக்குத்தான் தெரியும்.. கண்ணை மூடிக்கொண்டு அடிப்போம். எல்லா சூப்பர்ஹீரோ படங்களிலும் வில்லன்கள் எப்படி செத்தொழிந்தார்கள்?? தற்கொலைதான்... அந்த ஃபார்முலாவை நாமும் கடைபிடிப்போம்...

- மிஸ்கினின் பேட்டி ஒரு கண்ணாடிக்கு முன்...

ஒளிப்பதிவு ஒன்றுதான் படத்தில் சொல்லத்தகுந்த திரையம்சமாக இருக்கிறது. மிஸ்கினின் மெளன இசை காட்சிகள் இதில் இல்லை... படம் நெடுக வாசித்துக் கொண்டேயிருக்கிறார்கள். எப்போதுதான் நிறுத்துவார்கள் என்றிருந்தது. சண்டை காட்சிகள் சட்டென முடிந்துவிடுகிறது. சாதா காட்சிகள் நீளுகின்றன. லோ ஆங்கில், வைட் ஆங்கில், லாங் ஷாட் (ரொம்ப லாங் இல்லாததால் தப்பித்தோம்) போன்ற மிஸ்கின் கிளிஷேக்கள் இருந்தாலும் வழக்கமான மிக அழுத்தமான மிஸ்கின் திரைக்கதை இதில் சுத்தமாக இல்லை.. ஆஃப் கோர்ஸ் அசுத்தமாகவும் இல்லை!

ஜீவாவை வீணடித்துவிட்டார், கதாநாயகி பூஜாவுக்கு அடுத்த பட வாய்ப்புகளே வராது. நரேனும் ரொம்ப பாவம்...

ஒன்றரை மணிநேரத்தில் மிகச்சிறப்பான திரைக்கதையமைத்து தந்துகொண்டிருக்கும் அமெரிக்கர்களின் படங்களை காப்பி செய்வதைக் காட்டிலும் அவர்கள் எப்படி எடுக்கிறார்கள் எனும் யுக்தியை காப்பியடிப்பதில் தவறில்லை.. திரைக்கதை என்ற ஒரு வஸ்துவை திரைமுழுக்கத் தேடவேண்டியிருக்கிறது. டார்க்நைட் போல நோலனே எடுக்க முடியாது என்பதுபோல வித்தியாசமான இயக்குனர் என்று பெயரெடுத்த மிஸ்கின் கமர்ஷியல் படங்களை எடுக்க முடியாது போலும். இப்படம் ஒரு கலைப்படத்தையும் கமர்ஷியலையும் கத்தரித்து தைத்ததுபோல இருக்கிறது. கலைப்படம் என்றதும் ஓவராக எடுத்துக் கொள்ளவேண்டாம்..இந்த படத்தில் முகமூடி என்ற பாத்திரமே தேவையில்லை. ஒரு சாதாரண மனிதனாகவே இருந்திருக்கலாமே? ஒரு விஜய், அஜித் கம்ர்ஷியல் படங்களில் முகமூடி அணிந்து நடித்திருந்தால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது. ஒரு சூ.ஹீ படம் மற்ற படங்களிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கவேண்டும்.. அதன் அம்சம் ஒன்றுகூட இங்கே இல்லை! . Kick Ass எனும் லோ பட்ஜெட் படம் ஒன்று வந்தது.. ஒருமுறை பாருங்கள் மிஸ்கின். முகமூடி 2 எடுக்கலாம்.

எப்போது படம் முடியும் என்று நோகவைத்த இப்படம் தோல்வியுற என் ஆழ்ந்த அனுதாபங்கள்!


இறுதியாக...

தயவு செய்து தியேட்டருக்குப் போய் பார்க்காதீர்கள்.. திருட்டு விசிடியில் கூட பார்க்கத் தகுதியற்ற திரைப்படம் இது.!
எனக்கு கந்தசாமியைப் பார்க்க ஆவலாக இருக்கிறது!!
 
Last edited:
தயவு செய்து தியேட்டருக்குப் போய் பார்க்காதீர்கள்.. திருட்டு விசிடியில் கூட பார்க்கத் தகுதியற்ற திரைப்படம் இது.!
எனக்கு கந்தசாமியைப் பார்க்க ஆவலாக இருக்கிறது!!
அப்படியா....நல்லது முன்னாடியே சொன்னதிற்க்கு...
 
முகமூடியைக் கிழித்து விட்டது ஆதவாவின் எழுத்து.

ஹொலிவோட் படங்கள் தமிழில் டப் செய்யப்படும்போது அவைக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்தாவது திருந்தலையே..
 
முகமூடியை கிழித்த அருமையான விமர்சனம்...!!!
 
நல்லா இருக்கும் படங்களை ஒரு வரியில் சொல்லலாம் சூப்பர் என.. ஆனால் கடுப்படிக்கும் படத்தை ஒன் லைன் விமர்சனம் செல்லாது . ஆனால் அப்படி அல்லாமல்

நல்லா இல்லை என்பதை ஏன், எதற்க்கு , எப்படி ? எதனால் ? என ஆராய்ந்து தந்த உங்கள் விமர்சனத்துக்கு ஒரு ராயல் சல்யூட் .

மற்றும் நன்றிகள்
 
மீண்டும்மோர் அருமையான விமர்சனம் வாழ்த்துகள் ஆதவா அவர்களே .

எப்போது படம் முடியும் என்று நோகவைத்த இப்படம் தோல்வியுற என் ஆழ்ந்த அனுதாபங்கள்!
உங்கள் வேதனை என்னில் உணர முடிகிறது அதேநேரம் இந்த விமர்சனம் அதீதமானது என்று தோன்றுகிறது ...

தயவு செய்து தியேட்டருக்குப் போய் பார்க்காதீர்கள்.. திருட்டு விசிடியில் கூட பார்க்கத் தகுதியற்ற திரைப்படம் இது.!
அவரவர்களுக்கு தோன்றும் வகையில் விமர்சனம் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது அதேநேரம் இந்த திரைப்படம் பார்க்கவேண்டாம் என்று கூறுவது சரியானதாக தெரியவில்லை ..தமது கருத்தை மற்றவர்கள் மீது திணித்து இது சரிதான் என்று வாதட வைப்பது போன்று உள்ளது ...இது போல் இல்லாமல் இருந்தால் நன்று என்பது என் கருத்து ...
 
இங்கு எதிர்த்து கருத்துரைக்க மன்னிக்கவும்!முகமூடி இந்த அளவுக்கு மோசமானதல்ல !
எனக்கு தவறான பதிவர் ,பிளாக்கர் கலாசாரம் ஒன்று உருவாக்கி இருப்பதாய் தோன்றுகிறது !எப்படி சன் டிவி திரைக்கு வரும் படங்களின் அறிமுகத்தை தீர்மானிக்கும் சக்தியாய் இருந்ததோ !அதை போல் தான் இந்த பிளாக்கர் கலாசாரமும் சினி பதிவுகளை பொறுத்தவரை !முதலில் வரும் விமர்சன பதிவு தான் தொடர்ந்து வரும் பதிவுகளை தீர்மானிக்கிறது!இது புறகாரணி செல்வாக்கு செலுத்த கூடிய ஒன்று!சற்று இந்த blogger கள் சிந்திக்க வேண்டும் !ஒரு ஆக்க கட்டுரை எழுதவே ஒருநாள் போதாது !எப்படி VIP ஷோ பார்த்த இரவே விமர்சனம் எழுதி தொலைக்கிறார்கள் !.இப்படி அவசரத்துக்கு எழுதும் விமர்சனம் எப்படி சரியான வழிகாட்டியாய் இருக்க முடியும் !


என்னை பொறுத்தவரை ஏன் வெளி சட்டம் ஒன்றில் நின்று பார்க்கும் எவருக்குமே இது முகமூடி நல்ல ஒரு பரிணாமம் என்றே என்ன தோன்றும்! கலையின் மீள் எடுத்தாள்கை ,பார்ந்து பறந்து அடிக்கிற சாதாரண ஏமாற்ற வழமையான ஹீரோ க்கள் மத்தியில் ,இந்த சுப்பர் ஹீரோ சரியான ஹீரோ தான் ,ஹெலியில் இருந்து பாய வில்லை ,பைக் இக்கு bike தாவ வில்லை ,கொஞ்சம் அசாத்திய வேலைகளை செய்ய batman உடை என்ற சாயத்தை சரியாக தான் பூசி இருக்கிறார்கள் .கதவை முட்டி உடைக்கும மொக்கு தனத்தில் இருந்து வட்ட தகட்டை ஒட்டி வெட்டி கை போட்டு திறக்கும் புத்தி சாலி தனத்துக்கு மாறி இருக்கிறது தமிழ் சினிமா !

கவர்சி விட்டு போய் இருக்குது!dooyat கனவுக்கு கொடுத்த முக்கியம் குறைவு என்பதற்காய் ஓரம் கட்ட சொல்வது மகா குற்றம்!


காப்பி அடித்த குற்ற சாட்டு உண்மை தான் !மாறுபட்ட கதையை புதிதாய் எடுத்தால் புரிந்து கொள்ள கூடிய நிலையில் தமிழ் சினிமா ரசிகர்கள் இல்லை ,அவர்களுக்கு இப்படி தான் ஆரம்பித்து செல்ல வேண்டும்!இல்லாவிட்டால் தசாவதாரம் என்ற நல்ல கதை பலருக்கும் புரியாதது போல் ஆகி விடும் !
ரசிக்க தக்க முயற்சிகள்
  • ஜீவாகுங்பூ ஐ கற்க வைக்க கலையின் முக்கியத்தை படத்தில் புரிய வைக்கும் விதம்
  • சாதாரண தாத்தா கூட்டம் பணய கைதிகளை பின்னணியில் காப்பாற்றும் விதம்
  • batman dress எங்கோ பொருக்கி எடுக்க பட வில்லை ,இலத்திரனியல் தாத்தாவாலும் ,டிசைன் வடிவமைப்பு தாத்தாவாலும் தான் வடிவமைக்க படுகிறது
  • எந்த கலையின் இறுதி நுட்பமும் தேர்ந்தெடுத்த சிஷ்யர்களுக்கு சொல்லி கொடுக்க படும் ,ஒரே வாரத்தில் பழிவாங்கும் ஹீரோக்களுக்கல்ல என்ற உண்மை சொல்ல பட்ட விதம்
  • அடிதடி காட்சி ஏற்க கூடியதாய் ,சில இடங்களில் சிரிப்போடுஏற்க கூடியதாய் இருக்கிறது

பிழை என்று சொல்ல கூடியவை
  • தொடர்சியான பின்னணி இசை இறுதி பாதியின் வேகமான காட்சி ரசிக்க விடாமல் இழுத்து செல்கிறது
  • ரௌத்திரம் ஜீவா வின் விறைப்பின் சாயல் தெரிகிறது!
  • ஜீவாவின் மாஸ்டர் இன்,அசட்டை போக்கு அழுக்கு இடம் -குடிலை இருப்பினும் கலையோடு இருப்பின்தெளிவாய் இருக்கும் !


முகமூடி ஆரோக்கியமான ஆரம்பம் ,கண்டிப்பாய் தியட்டரில் முதல் முறை பார்க்க வேண்டிய படம்
 
அச்சலா, அமரன், ஜெயந்த், வெற்றி, த.க.ஜெய், குருதவசி, குளகூத்தன். ஆகியோருக்கு நன்றி.

@ஜெய்.

மேலோட்டமாகப் பார்த்தால் தவறாகவே தோன்றும். ஆனால் ஒரு படைப்பின் விமர்சனத்தின் முடிவில் அது வாசிக்கப்படலாமா கூடாதா என்ற கேள்வி எழும். என்னைப் பொறுத்தவரையில் கூடாது.. ஏனெனில் நான் வாசிக்கப்பட்டே ஆகவேண்டும் என்று சொன்ன ஒரு படைப்பை (உதா: வழக்கு எண்) எப்படி ஏற்றுக் கொண்டார்களோ அதைப் போலத்தான் இதுவும்!!

@ குளக்கூத்தன்

எதிர்கருத்துரைக்கு மன்னிப்பு கோருவது அவசியமேயில்லை. நீங்கள் என்னவேண்டுமானாலும் இங்கே எழுதலாம். படைப்பை மட்டும் விமர்சித்தால் போதுமானது.

நீங்கள் வேறொரு தளத்தில் பதிந்த பதிலை இங்கே பதிந்துவிட்டீர்களோ என்று தோணுகிறது. நான் ப்ளாக்கில் இயங்குவதைக் காட்டிலும் தமிழ்மன்றத்தில்தான் அதிகம் இயங்குகிறேன். எனக்குப் பிடித்த சினிமா பற்றி சிலவரிகளேனும் எழுதுகிறேன். மேலும் நேரம் அமைந்தாலொழிய பெரிதாக எழுதுவதில்லை.

சரி... எந்தவொரு படத்தையுமே நான் எதிர்பார்த்து செல்லுவதில்லை. (சமீபமாக) சமீப காலங்களில் வந்த படங்களிலேயே மிக வறட்சியான தட்டையான திரைப்படம் முகமூடி என்பதை ஆழமாக அழுத்திச் சொல்லமுடியும். வெளிச்சட்டம் உள்சட்டம் என்பதெல்லாம் படத்தை எதிர்பார்ப்பவர்களுக்குத்தான். ஒரு படத்தை நான் படைப்பாகப் பார்க்கிறேன். அது எவ்வளவு தூரம் சுத்தமாக இருக்கிறது, மழுப்பப்பட்டிருக்கிறது என்பதையும் காண்கிறேன். இதனடிப்படையில்தான் விமர்சனம்.

மாறுபட்ட கதையை புதிதாய் எடுத்தால் புரிந்து கொள்ள கூடிய நிலையில் தமிழ் சினிமா ரசிகர்கள் இல்லை

அப்படியல்ல.. முதலில் மாறுபட்ட கதையை எடுங்கள்.. பிறகு ரசிகர்களை குறைசொல்லுவோம்! நீங்கள் சொன்ன “ரசிக்கத் தக்க முயற்சிகள்” தான் படத்தின் ஆகப்பெரிய மைனஸ் பாயிண்ட். முகமூடி என்ற படத்தின் முகமூடி என்ற பாத்திரத்திற்கு முக்கியத்துவமே தரப்படவில்லை என்பது என் வாதம்..

///ரெளத்திரம் ஜீவாவின் சாயல் தெரிகிறது. ///

நீங்கள் வெளிச்சட்டத்திலிருந்து பார்க்கவில்லை என்பது இதிலிருந்தே தெரிகிறது. மிகச்சிலர் என்னிடம் ரொம்பவும் இளமையாக பொடியனாக இருக்கிறான் என்றார்கள். ஒரு படத்தின் கேரக்டர் ஜஸ்டிபிகேஷன் செய்வது படைப்பாளிதானே தவிர நாமல்ல.. அமேசிங் ஸ்பைடர்மேனில் ஆண்ட்ரூ கார்ஃபீல்டை ரசிக்கிற நாம் ஏன் ஜீவாவை ரசிக்க முடிவதில்லை?? மிகப்பெரிதாக ஊதப்பட்ட பலூன் போல இருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். உள்ளேயிருப்பது பற்றி கவலையில்லை, பிரம்மாண்டம் முக்கியம்.

நீங்கள் பட்டியலிட்ட முயற்சிகளைப் பற்றி நான் என்ன கருத்து கொண்டேன்?

1. ஜீவா குங்ஃபூ கற்பதற்கான அழுத்தமான காரணமோ மாஸ்டரை நேசிப்பதற்கான காரணமோ தெளிவில்லை. ஜீவா குங்ஃபூ கற்பதே பின்னாளில் அவர் முகமூடியாக வரவேண்டும் என்ற படைப்பாளியின் நோக்கம் தான். மீனவர்களை சண்டைக்கு இழுக்கும் பொழுதே குங்ஃபூவின் நோக்கம் தோற்றுவிடுகிறது.. கராத்தே கிட்டில் ஜாக்கி சொல்வார், குங்ஃபூ என்பது தற்காப்புக் கலைதான்.. அடுத்தவரை எதிர்த்து சண்டைபோடும் கலை கிடையாது” இதனை ஆரம்பத்திலேயே உடைத்துவிடுகிறார்கள்.

2. சாதாரண தாத்தா கூட்டம் வெகு சாதாரணமாக பயணிகளைக் காப்பாற்றிச் செல்லுகிறார்கள். கொள்ளையடிக்கும்பொழுது அத்தனைபேர் வந்தார்கள், கிளைமாக்ஸில் எங்கே போனார்கள்? வெகு அபத்தமான கேரக்டர் அவர்கள் இருவரும்... லூஸியஸ் ஃபாக்ஸ் மற்றும் ஆல்ஃப்ரட் ஆகியோரின் அப்பட்டமான காப்பி. அவர்கள் ஸ்ப்ரே அடிப்பதைத் தவிர வேறொன்றையும் செய்யவில்லை.

3. முகமூடி உடை அப்பட்டமான பேட்மேன் காப்பி... என் நண்பர் சொன்னது போல முதுகில் உள்பாவாடை கட்டிக் கொண்டு பேட்மேன் திரிந்தால் நாமும் அப்படியேவா எடுப்பது? சரி... முகமூடிக்கு கேட்ஜெட்கள் பொருத்துகிறார்கள்.. அதனை எங்கே உபயோகிக்கிறார்கள்??

4. ஒரு கலைக்கு இறுதி நுட்பம் என்று எதுவுமே கிடையாது.. கலையின் உச்ச நுட்பங்களில் ஒன்று என்று சொல்லலாம்.. அந்த நுட்பத்தை நமக்குக் காண்பிக்கிறார்களா?? அந்தரத்தில் நின்றுகொண்டு கண்மூடி அடிப்பதுதான் குங்ஃபூ கலையின் உச்ச நுட்பமா? கராத்தே கிட்டில் ஆளை வசியப்படுத்தும் நுட்பம் ஒன்று இருக்கிறது. அதை வைத்துத்தான் ஜேடன் ஸ்மித் ஜெயிப்பான்... அந்த வசியப்படுத்துதலைத் தெளிவாகக் காட்டுவார்கள் (அது கூட எட்ஜில் நின்றுகொண்டுதான் கற்பாள்) இதில் எங்கே இருக்கிறது??

5. அசல் குங்ஃபூ காட்சிகளை இதுவரையிலும் தமிழில் எடுக்கப்படவேயில்லை. முகமூடி ஒரு முயற்சி என்று சொல்லலாம். அதிலும் தெளிவின்மையே அதிகம். முன்பே சொன்னது போல சண்டைக் காட்சிகள் குறைவாகவும், சோதா காட்சிகள் நீளமாகவும் இருக்கின்றன, குறிப்பாக சண்டைக்காட்சிகளில் அடர்த்தி கிடையவே கிடையாது. குங்ஃபூ சண்டைக்காட்சிகள் அடர்ந்து இருக்கவேண்டாமா?

பதிலுக்கு நன்றிங்க குளக்கூத்தன்.
 
விமர்சித்ததற்காக குளக்கோட்டனை குளக்கூத்தன் ஆக்கி விட்டீர்கள் !
உங்கள் விமர்சனத்தை நான் தவறு என்று சொல்லவில்லை

ஆனால் உங்கள் விமர்சனத்தில் பதிவுலகினால் வேகமாய் பரப்ப பட்ட கருத்துரையின் செல்வாக்கு தெரிகிறது என்பதே என் கருத்து!

அப்படி பாதிப்பு இன்றி எழுத பட்டு இருப்பின் வாழ்த்துக்கள்.

முதலில் ஒருபடத்தை பற்றி பதிவர் ஒருவர் விமர்சனம் இடுவார் அதும் VIP Show அன்றே !
இது மூலம் வேகமாய் பரவும் ,சினிமா பார்வையாளரிடம் அரை நாளுக்குள் பரவி விடும் ,நீங்கள் படத்தை பார்க்க முன்னே செவி வழி துணுக்கு செய்திகள்! உங்கள் எதிர்பார்ப்பின் நிர்ணயித்து கொண்டு தான் திரைக்குள் அனுமதிக்கிறது! இந்த கலாசாரம் ஆரோக்கிய மல்ல என்பதே என் கருத்து!
அதன் பாதிப்பே ரெண்டாம் நாளே வந்த உங்கள் விமர்சனத்தில் இருந்த்ததாய் நான் கருதினேன் !

முகமூடி ஒரு முயற்சி என்று சொல்லலாம்
நீங்களே ஒத்து கொண்டு இருக்கிறீர்கள் ,தமிழ் சினிமாவுக்கு புதுசு!இப்படி தான் தமிழ் சினிமா போக்கு மாற்ற பட வேண்டும்!
பொருத்த பட்ட கட்சத் உபயோகத்தை காட்டி இருந்தால் என்னை படிபிகிரியா எண்டு இயக்குனரை ஐ பார்த்து கேட்டு இருப்பார்கள் !

குங்-பூ மட்டு மல்ல எந்த கலையையும் அப்பட்ட மாய் திரையில் ,ஏன் நேரில் கூட குரு-சிஷ்யன் உறவின்றி காட்ட முடியாது,
 
விமர்சித்ததற்காக குளக்கோட்டனை குளக்கூத்தன் ஆக்கி விட்டீர்கள் !
உங்கள் விமர்சனத்தை நான் தவறு என்று சொல்லவில்லை

ஆனால் உங்கள் விமர்சனத்தில் பதிவுலகினால் வேகமாய் பரப்ப பட்ட கருத்துரையின் செல்வாக்கு தெரிகிறது என்பதே என் கருத்து!

அப்படி பாதிப்பு இன்றி எழுத பட்டு இருப்பின் வாழ்த்துக்கள்.

முதலில் ஒருபடத்தை பற்றி பதிவர் ஒருவர் விமர்சனம் இடுவார் அதும் VIP Show அன்றே !
இது மூலம் வேகமாய் பரவும் ,சினிமா பார்வையாளரிடம் அரை நாளுக்குள் பரவி விடும் ,நீங்கள் படத்தை பார்க்க முன்னே செவி வழி துணுக்கு செய்திகள்! உங்கள் எதிர்பார்ப்பின் நிர்ணயித்து கொண்டு தான் திரைக்குள் அனுமதிக்கிறது! இந்த கலாசாரம் ஆரோக்கிய மல்ல என்பதே என் கருத்து!
அதன் பாதிப்பே ரெண்டாம் நாளே வந்த உங்கள் விமர்சனத்தில் இருந்த்ததாய் நான் கருதினேன் !


நீங்களே ஒத்து கொண்டு இருக்கிறீர்கள் ,தமிழ் சினிமாவுக்கு புதுசு!இப்படி தான் தமிழ் சினிமா போக்கு மாற்ற பட வேண்டும்!
பொருத்த பட்ட கட்சத் உபயோகத்தை காட்டி இருந்தால் என்னை படிபிகிரியா எண்டு இயக்குனரை ஐ பார்த்து கேட்டு இருப்பார்கள் !

குங்-பூ மட்டு மல்ல எந்த கலையையும் அப்பட்ட மாய் திரையில் ,ஏன் நேரில் கூட குரு-சிஷ்யன் உறவின்றி காட்ட முடியாது,

சாரிங்க ”குளக்கோட்டன்”!

பதிவுலகத்தில் குறிப்பிட்ட சிலரை மட்டுமே வாசிக்கிறேன்.
எனது எண்ணம் மட்டுமே எனது வலையில் இருக்கும். அடுத்தவர் கருத்தை எழுதுவதற்குப் பதிலாக அவர்களையே படித்துவிட்டுப் போய்விடலாமே?

பதிலுக்கு நன்றிங்க.
 
எப்போது படம் முடியும் என்று நோகவைத்த இப்படம் தோல்வியுற என் ஆழ்ந்த அனுதாபங்கள்!"

நன்றாக இப்படத்தை அலசி உள்ளீர்கள் ஆதவா, இப்படிபட்ட
படத்திற்கு எல்லாம் எதற்கு அனுதாபம், அதாகவே காணாமல்போகி விடும் அதன் தடம் கூட.
 
என்னால் முழுப்படமும் இருந்து பார்க்க இயலவில்லை. அபத்தங்களின் குவியலாகத்தான் திரைப்படம் அமைந்திருக்கிறது. காதுகளைக் கிழிக்கும் சப்தம், முழுக்க முழுக்க இருட்டுகளில் காட்சிகள், கேனைத்தனமான ஹீரோ கட்டமைப்பு , சலிக்க வைக்கும் காட்சிகள் குங்ஃபூவை அபத்தமாகக் காட்டும் விதம்.. இப்படி எவ்வளவோ சொல்லலாம்.

சத்தியமாக கந்த சாமி படம் இதற்கு பத்துமடங்கு தேவலை.

- சாதாரண ரசிகன்
 
முழுக்க முழுக்க இருட்டுகளில் காட்சிகள்,

இது பரவாயில்லைங்கண்ணா... சில படங்கள்ல இருட்டுனு பகலை காண்பிப்பாங்க, இன்னும் சில படங்கள்ல இருட்டைக் காண்பிக்கிறேன்னு மழையில நெனஞ்ச பிலிமை ஓட்டுவாங்க... இந்த படத்தில இருட்டு, தெளிவா இருக்கு!

சத்தியமாக கந்த சாமி படம் இதற்கு பத்துமடங்கு தேவலை.

குத்துப்பாட்டெல்லாம் இருந்துச்சாம்.. பார்க்காம விட்டுட்டேன். அந்த படம் ஒரு ரசிகனை இழந்திட்டிருக்கு..
 
மிஷ்கினா இந்த படத்தை எடுத்தார் என யோச்கிக்க வைத்த படம் வேறென்ன சொல்ல ?
 
Back
Top