மும்பையிலிருந்து பெங்களூருவிற்கு...
சுதாமூர்த்தி
வெயில் காலத்தொடக்கத்தின், குல்பர்கா தொடர்வண்டி நிலையத்தில் நின்றிருந்த உதயன் விரைவு வண்டியில் ஏறினேன். எனக்கு பெங்களூருக்கு செல்ல வேண்டி இருந்தது. முன்பதிவு செய்தவர்களுக்கான அந்த இரண்டாம் வகுப்பு பெட்டி மக்கள் கூட்டத்தால் நிரம்பி இருந்தது. மூன்று பேர் அமர்வதற்கான அந்த இருக்கையில் ஆறு பேர் அமர்ந்திருந்ததால் இருக்கையின் ஓரத்திற்கு நான் தள்ளப்பட்டேன்.சுதாமூர்த்தி
பயணச்சீட்டு பரிசோதகர் உள்ளே வந்து பயணிகளிடம் அவர்களது பயணச்சீட்டுகளையும், முன் வசதி செய்யப்பட்டதா என்பதையும் சோதனையிட ஆரம்பித்தார். என்னிடமும் பரிசோதித்த பின்னர் மற்றவர்களை சோதித்தார். திடீரென்று நான் அமர்ந்திருந்த திசையை நோக்கிய அவர், “உன் பயணச்சீட்டு எங்கே..?” என்று கேட்டார். “நான் ஏற்கனவே உங்களிடம் காண்பித்து விட்டேனே!” என நான் பதிலளித்தேன்.
“அம்மணி... நான் உங்களைக் கேட்கவில்லை. உங்கள் இருக்கையின் கீழ் ஒளிந்திருக்கிறாளே... அந்தப் பெண்ணைக் கேட்டேன். ஏய்... வெளியே வா.. எங்கே உனது பயணச்சீட்டு?” என அதட்டலாக கேட்டார்.
என் இருக்கையின் கீழ் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் என்பதை அப்போதுதான் நான் உணர்ந்தேன். பரிசோதகரின் மிரட்டலில் அந்தப் பெண் மெதுவே வெளியே வந்தாள். அவள் கறுப்பாக, ஒல்லியாக இருந்தாள்; பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தாள். அதற்கு முன்பும் கூட நீண்ட நேரம் அழுதிருப்பாள் போல தோன்றியது. அவளுக்கு 13 அல்லது 14 வயதிருக்கும். வாரிக்கொள்ளாத தலைமுடியுடனும், கிழிந்த பாவாடை சட்டையுடன் இருந்த அவள், இரண்டு கைகளையும் கட்டியவாறு நடுங்கிக்கொண்டிருந்தாள்.
பரிசோதகர் அவளை வலுக்கட்டாயமாக அப்பெட்டியில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்தார். அந்த நேரத்தில் ஏனோ எனக்கு ஒரு வித்தியாசமான உள்ளுணர்வு தோன்றியது. எழுந்து நின்று அவரிடம், “ஐயா, அப்பெண்ணிற்காக பயணச்சீட்டு கட்டணத்தை நான் தருகிறேன்” என்று சொன்னேன்.
என்னைப்பார்த்த அவர், “அம்மணி, பயணச்சீட்டை வாங்குவதைக் காட்டிலும், அவளுக்கு பத்து ரூபாய் தந்தால் மகிழ்ச்சி அடைவாள்” என்றார். அவரது பேச்சை பொருட்படுத்தாமல், அந்த வண்டி இறுதியாக அடையும் நிலையமான பெங்களூரு வரை பயணச்சீட்டு தருமாறு வேண்டினேன். ஏனெனில் அவள் எங்கே இறங்க விரும்புகிறாளோ, அங்கே அவள் இறங்கிக்கொள்ளலாமே என நினைத்தேன்.
கொஞ்சம் கொஞ்சமாக அப்பெண் பேச ஆரம்பித்தாள். அவளது பெயர் சித்ரா. பிடருக்கு (Bidar) அருகில் இருக்கும் ஒரு சிற்றூரில் அவள் வசித்து வருவதாக கூறினாள். அவளது தந்தை கூலி வேலை செய்பவராம். பிறந்த போதே தாயை இழந்து விட்டிருக்கிறாள் சித்ரா. அதன் பின்னர் அவளது தந்தை வேறொரு பெண்ணை மணம் செய்து கொண்டிருக்கிறார். இரண்டாம் தாரத்திற்கும் இரண்டு மகன்கள் இருக்கிறார்களாம். சில மாதங்களுக்கு முன்னர் அவளது தந்தை காலமாகி விட்டாராம். அதன் பின்னர் அந்த இரண்டாம் தாரம் அப்பெண்ணை அடிக்கடி அடிப்பார்கள் என்றும், சாப்பிட எதுவும் தருவதில்லை என்றும் சொன்னள். ஆதரிக்க யாருமே இல்லை என்பதால் வாழ்க்கையே வெறுத்துப் போய் விட்டதாகவும், அதனால் வீட்டை விட்டு வெளியேறி ஏதேனும் செய்யலாம் என்ற முடிவில் வந்திருப்பதாகவும் சொன்னாள்.
அவளது நீண்ட கதை முடியும் நேரத்தில் வண்டி பெங்களூருவை வந்தடைந்திருந்தது. சித்ராவிடம் விடை பெற்றுக்கொண்டு வண்டியில் இருந்து இறங்கினேன். என்னுடைய வாகன சாரதி வந்து நான் கொண்டு வந்திருந்த பெட்டிகளை எடுத்துக்கொண்டார். யாரோ என்னைப் பார்ப்பதாக தோன்றியது. திரும்பிப் பார்த்தால் சோகம் நிறைந்த கண்களுடன் சித்ரா நின்று கொண்டிருந்தாள்.
அவளுக்கு பயணச்சீட்டை வாங்கித்தந்ததை விட வேறு என்ன என்னால் செய்து விட முடியும். ஒரு பரிவில்தான் அவளுக்கு பயணச்சீட்டை வாங்கிக் கொடுத்தேனே ஒழிய அவளை கவனிப்பது என்னுடைய பொறுப்பாகி விடும் என்பதை நான் ஒரு கணமும் நினைக்கவில்லை.
எனது மகிழுந்தில் ஏறுமாறு அவளிடம் சொன்னேன். சாரதி சித்ராவை வியப்புடன் பார்த்தார். என் நண்பரான ராம்மினுடைய இடத்திற்கு செல்லுமாறு அவரைப் பணித்தேன். ராம் ஆதரவற்ற சிறுவர், சிறுமிகளுக்கு தனித்தனியே இல்லங்களை நடந்தி வந்தார். இன்போசிஸ் நிறுவனம் அந்த இல்லங்களுக்கு நிதியுதவி செய்து வந்தது. சித்ரா அங்கே சில காலம் தங்கி இருக்கலாம் என்றும், எனது சுற்றுப்பயணத்திற்கு பின்னர் அவளது எதிர்காலத்தைக் குறித்து பேசலாம் என்றும் நான் நினைத்தேன்.
என்றாலும் கூட அதுவரை சித்ரா அங்கே இருப்பாள் என்று எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் சித்ரா முன்பை விட மகிழ்ச்சியாக காணப்பட்டாள். சித்ராவை அருகில் இருந்த உயர்நிலைப்பள்ளிக்கு அனுப்பலாம் என்று ராம் யோசனை தந்தார். உடனே அதற்கு சம்மதித்த நான், அவள் படிக்கும் வரை அவளுக்காக ஆகும் செலவுகளை நான் ஏற்றுக்கொள்வதாகவும் அவரிடம் சொன்னேன். சித்ராவிற்கு இருக்க இடமும், படிப்பு மூலம் வாழ்க்கையில் புதிய நம்பிக்கை உண்டாகும் என்பதையும் அறிந்து கொண்டு அங்கிருந்து கிளம்பினேன்.
பணிப்பளு அதிகமானதால், அந்த இல்லத்திற்கு செல்வது வருடத்திற்கு ஒரு முறையாக குறைந்தது. ஆனாலும் எப்போதும் சித்ராவின் நலம் குறித்து தொலைபேசியில் விசாரிப்பேன். அவள் நன்றாக படித்து வருவதையும் தெரிந்து கொண்டேன். அவள் மேற்கொண்டு கல்லூரியில் படிக்க விரும்பினால் அதற்கான செலவுகளை ஏற்பதாகவும் அவளிடம் சொன்னேன்.
அதற்கு அவள், “இல்லை அக்கா. நான் எனது நண்பர்களுடன் ஏற்கனவே கலந்துரையாடி ஒரு முடிவெடுத்திருக்கிறேன். கணினி அறிவியல் தொழில்நுட்ப கல்வியை படிக்க விரும்புகிறேன். ஏனெனில் மூன்று வருட படிப்பிற்கு பின்னர் உடனே வேலை கிடைக்கும்” என்றாள். பொருளாதார ரீதியில் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தன்னிறைவு அடைய அவள் விரும்பினாள்.
அந்தப்படிப்பிலும் மிகச்சிறப்பாக தேர்ச்சியைப் பெற்றாள். ஒரு மென் பொருள் நிறுவனத்தில் உதவி சோதனை பொறியாளராக அவளுக்கு வேலையும் கிடைத்தது.
அவளுக்கு முதல் மாத சம்பளம் கிடைத்தவுடன், புடவை மற்றும் இனிப்புகளை வாங்கிக்கொண்டு எனது அலுவலகத்திற்கு வந்தாள்!
நான் டெல்லியில் இருந்த போது, ஒரு நாள் சித்ராவிடம் இருந்து அழைப்பு வந்தது. மிக்க மகிழ்ச்சியுடன், “அக்கா, எனது நிறுவனம் என்னை அமெரிக்காவிற்கு அனுப்புகிறது. உங்களை சந்தித்து உங்கள் ஆசிர்வாதத்தைப் பெற விரும்புகிறேன். ஆனால் நீங்கள் இங்கே, பெங்களூருவில் இல்லையே..?” என்றாள்.
வருடங்கள் உருண்டன. எப்போதாவது சித்ராவிடம் இருந்து மின்னஞ்சல் வரும். அவள் வாழ்க்கையில் நன்றாக முன்னுக்கு வந்து கொண்டிருந்தாள். அமெரிக்காவில், பல நகரங்களில் உள்ள கிளைகளில் அவள் பணிக்கு அமர்த்தப்பட்டாள். அவள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று அமைதியாக வழிபட்டு வந்தேன்.
சில வருடங்களுக்கு முன்னர், சான்பிரான்சிஸ்கோ நகரில் கன்னடர்கள் கூட்டத்தில் உரையாற்ற வேண்டுமென எனக்கு அழைப்பு வந்திருந்தது. அங்கே கன்னட மொழி பேசும் மக்கள் ஒன்று கூடி, ஒரு அமைப்பை உருவாக்கி சில பணிகளையும் நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தனர். அந்த கூட்டம் ஒரு ஹோட்டலில் நடைபெறுவதாக இருந்தது. ஆகவே அதே ஹோட்டலிலேயே நானும் தங்கி விடலாம் என்று முடிவு செய்தேன். கூட்டமும் நடந்தேறியது.
சொற்பொழிவிற்கு பின்னர் வானூர்தி நிலையத்திற்கு செல்ல வேண்டுமென்பது என் திட்டம். தங்கி இருந்த அறையை காலி செய்து விட்டு, அறை வாடகையை செலுத்துவதற்காக ஹோட்டலின் வரவேற்பறைக்கு சென்றேன். அங்கே இருந்த வரவேற்பாளர், “அம்மா.. நீங்கள் பணம் எதுவும் கட்ட வேண்டியதில்லை. அங்கே நிற்கும் பெண் உங்களுக்கான செலவுகள் அனைத்திற்கும் பணம் செலுத்தி விட்டார். அவருக்கு உங்களை நன்றாகத் தெரியுமாமே..?” என்றார்.
நான் திரும்பிப்பார்த்தேன். அங்கே சித்ரா நின்று கொண்டிருந்தாள்! ஒரு இளம் வெள்ளைக்கார வாலிபனுடன் நின்று கொண்டிருந்தாள்; அழகிய சேலையை அணிந்திருந்தாள். முடியை அளவாக வெட்டி மிக அழகாக காட்சியளித்தாள். அவளது கண்களில் மகிழ்ச்சியும், பெருமையும் பொங்கி வழிவதை என்னால் காண முடிந்தது.
அடக்க முடியாத சிரிப்புடனும், மகிழ்ச்சியுடனும் அப்படியே என்னை கட்டிக்கொண்டாள்; என் காலைத் தொட்டு வணங்கினாள். எல்லையற்ற மகிழ்ச்சியில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சித்ராவின் வாழ்க்கையில் நல்லவையே நடப்பது எனக்கு நிம்மதியைத் தந்தது.
சித்ராவிடம்,“நீ ஏன் என் அறைக்கட்டணத்தை செலுத்தினாய்..? அது சரியல்ல..” என்றேன்.
ஒரு கணத்தில் அழ ஆரம்பித்த அவள் மீண்டும் என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு “ஏனெனில் நீங்கள் மும்பையில் இருந்து பெங்களூருவிற்கு பயணச்சீட்டு எடுத்துக்கொடுத்திருக்கிறீர்களே..!” என்றாள்.
நன்றி : பால் குடிப்பதை நான் நிறுத்திய நாள் புத்தகத்தை எழுதிய சுதா மூர்த்திக்கும், அந்தப்புத்தகத்தில் இருந்து மும்பையில் இருந்து பெங்களூருவிற்கு என்ற கதையின் இப்பகுதியை ஆங்கிலத்தில் எனக்கு அனுப்பிய நண்பருக்கும்.
நன்றி : பென்குயின் புக்ஸ் - இந்தியா.
Last edited: