மானம் பாத்தப் பொழப்பும்
மலையேறிப் போச்சி.
என் மானம் காத்த ஒழவும்
மண்ணாப்போச்சி.
தானமா வந்த தண்ணியும்
திடுக்குனு நின்னுபோச்சி.
வறண்ட பூமி பாத்து
திரண்ட கண்ணீரப் பாத்தும்
இறங்கலையே அந்த ஆகாசமேகமும்.
இரங்கலையே எந்த அரசாளும்மனசும்.
வக்கத்த போக்கு பாத்து
நான்பெத்த மக்களெல்லாம்
வெக்கமத்து என்னை வெட்டிவுட்டு
கக்கத்துப் பொட்டியோட காரேறிப் போயாச்சி.
கெக்கலிக்கிற புழுதிக்காடு பாத்தும்
எக்களிக்கிற எந்திரவிவசாயம் பாத்தும்
துக்கத்தால் தொண்ட விக்கித்துப் போச்சி.
சொல்லி அழவும் நாதியத்தவனா
ஒட்டுத்துணியும் ஒட்டுனவயிறுமா
இத்துப்போன ஏத்தக்காலோரம்
இடிஞ்சிபோயி உக்காந்திருக்கேன்.
மாடா உழைச்ச கழனியெல்லாம்
காடாக்கிடக்கிறதக் காணச்சகியாம,
என்னயக் காடுகொண்டுபோவ
வாடா காலான்னு வழியிலயே காத்திருக்கேன்.
*******
படத்தைப் பார்த்து கவிதை எழுதுவதற்குள் மனசுக்குள் பெரும்பாரம் அழுத்திஎடுத்துவிட்டது. படமே ஆயிரம் கவிதைகளுக்குச் சமம். உங்களுடைய இந்த முயற்சிக்குப் பாராட்டுகள் அண்ணா.
முதுமை..
மரணத்தை வரவேற்கும் மனசைத் தரும். வறுமை, ஆற்றாமை, கவலை என பலதும் சுற்றிச் சுழன்றடித்தால், சொல்லவா வேண்டும்.
அதையே செய்கிறது உங்கள் கவிதை..
ஒரு சொல்லோவியமாக விரியும் கவிதையில், இயற்கை, அரசாங்கம், சொந்தம் எல்லாத்தையும் சொல்லி, மண்ணுக்குள் புதைந்த வேரினைப் போன்று தனிமனிதத் தவறை மறைத்துச் சொல்லி உயர்ந்து நிற்குது உணர்வு மரம்.
பாராட்டுகள்.