தினசரி தியானம்

தடுங்கோள் ! மனத்தை விடுங்கோள் ! வெகுளியைத் தானம் என்றும்

இடுங்கோள் ! இருந்தபடி இருங்கோள் ! எழுபாரும் உய்யக்

கொடுங்கோபச் சூருடன் குன்றம் திறக்கத் துளைக்க வைவேல்

விடுங்கோன் அருள் வந்து தானே உமக்கு வெளிப்படுமே.

கந்தர் அலங்காரம்
 
புள்வாய் பிளந்த புனிதா! என்று அழைக்க

உள்ளே நின்று என்னுள்ளம் குளிரும் ஒருவா

கள்வா ! கடல்மல்லைக் கிடந்த கரும்பே

வள்ளால் ! உன்னை எங்ஙனம் நான் மறக்கேன் ?

திருமங்கையாழ்வார்
 
பார்க்கின் அணுப் போற் கிடந்த பாழ்ந்சிந்தை மாளின் என்னை

யார்க்குச் சரியிடலாம் ஐயா பராபரமே ?

தாயுமானவர்

ஒரு மனிதனுக்குப் பகை வெளியுலகில் இல்லை.

மனதினுள் இருக்கும் காமம், குரோதம், மதம், மாச்சரியம் முதலியவைகளை வென்றவன், உலகையே வென்றவன் ஆவான்.

பிறரை வென்றவனுக்குத் தோல்வி ஏற்படலாம்; தன்னையே வென்றவனுக்குத் தோல்வியே இல்லை.

அவன் அனைத்தும் அடையப் பெற்றவன் ஆகிறான்
 
கொடியே! இளவஞ்சிக் கொம்பே! எனக்கு வம்பே ! பழுத்த

படியே ! மறையின் பரிமளமே ! பனிமால் இமயப்

பிடியே ! பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே !

அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே.

அபிராமி அந்தாதி
 
இளைய பாரதத்தினாய் வா வா வா எதிரிலா வலத்தினாய் வா வா வா

ஒளியிழ்ந்த நாட்டிலே நின்றேறும் உதயஞாயிறொப்பவே வா வா வா

களையிழ்ந்த நாட்டிலே முன்போலே கலை சிறக்க வந்தனை வா வா வா

விளையு மாண்பு யாவையும் பார்த்தன் போல் விழியினால் விளக்குவாய் வா வா வா

பாரதியார்
 
கருமான் மருகனைச் செம்மான் மகனைக் களவுகொண்டு

வருமா குலவனைச் சேவல் கைக் கோளனை வானம் உய்யப்

பொருமா வினைச்செற்ற போர்வேலனைக் கன்னிப் பூகமுடன்

தருமா மருவு செங்கோடனை வாழ்த்துகை சால நன்றே

கந்தரலங்காரம்
 
ஈசனெனக் கருதி எல்லாவுயிர்களையும்

நேசத்தால் நீ நினந்துகொள்.

ஔவை குறள்

தன்னிடத்தில் இருப்பதையெல்லாம் ஓயாது எடுத்து வழங்குவது அன்பு.....கைம்மாறு கேட்பது அன்பல்ல.

பழிக்குப் பழி வாங்குவது அன்பின் செயல் அல்ல.
 
Last edited:
கைப்போது கொண்டு உன் பதப்போது தன்னில் கணப்போதும் அர்ச்சிக்கிலேன்

கண்போதினால் உன் முகப்போது தன்னையான் கண்டு தரிசனை புரிகிலேன்

முப்போதில் ஒருபோதும் என் மனப்போதிலே முன்னி உன் ஆலயத்தின்

முன்போதுவார் தமது பின்போத நினைகிலேன்; மோசமே போய் உழன்றேன்

மைப்போதகத்திற்கு நிகரெனப்போது எருமைகடா மீதேறியே

மாகோரகாலன் வரும்போது தமியேன் மனங்கலங்கித் தியங்கும்

அப்போது வந்து உன் அருட்போது தந்தருள் ஆதிகடவூரின் வாழ்வே

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே.

அபிராமி பதிகம்
 
வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்

நெருங்குதீ நீருருவும் ஆனான் - பொருந்தும்

சுடராழி ஒன்றுடையான் சூழ்கழலே நாளும்

தொடராழி நெஞ்சே தொழுது.

பேயாழ்வார்
 
நடக்கினும் ஓடினும் நிற்கினும் வேறொரு நாட்டமின்றிக்

கிடக்கினும் செவ்வி திருக்கினும் நல்லருட் கேள்வியிலே

தொடக்கும் என் நெஞ்சம் மனமற்ற பூரணத் தொட்டிக்குள்ளே

முடக்குவன் யான் பரமானந்த நித்திரை மூடுமுன்னே.

தாயுமானவர்

இவ்வுலகம் பேரின்பத்தை ஒருநாளும் கொடாது.

மாலையில் மலர்ந்த மலர் போன்று இளமையானது வாடுகிறது. சிதறடைந்த மேகம் போன்று வலிவு குன்றுகிறது.

உடலழகு நமனுக்கு இரையாகிறது...உள்ளிருக்கும் ஆத்ம சொரூபம் ஒன்றே நிலையானது.

சித்பவானந்தர்
 
Last edited:
எண்ணித் தம்மை நினைத்திருக்கேனுக்கு

அண்ணித்திட்டமு தூறுமென் நாவுக்கே.

அப்பர்

சிற்பி ஒருவன் சிலையைச் செதுக்கி உருவாக்குவது போல் உன்னைப் பற்றிய எண்ணத்தாலேயே என்னை நான் உருவாக்குவேனாக.

முன் எண்ணியது பின் விளைகிறது.வல்வினை என்பது முன் எண்ணிய தீய எண்ணங்களாகும். நற்பயன் என்பது முன் எண்ணிய நல்லெண்ணங்களாகும்.

நலத்தையே பேசி, நலத்தையே செய்பவன் தன்னை நல்லானாக்கும் சிற்பியாகிறான்.

சித்பவானந்தர்
 
Last edited:
துகளறு சங்கற்ப விகற்பங்கள் எல்லம் தோயாத அறிவாகிச் சுத்தமாகி

நிகரில் பசுபதியான பொருளைநாடி நெட்டுயிர்த்துப் பேரன்பால் நினைதல் செய்வாம்

தாயுமானவர்



பெரிய லட்சியத்திற்கேற்ற பெருவாழ்வு இப்பூவுலகில் வாழவேண்டும்.

அனைவரிடத்தும் அன்பு செலுத்தவேண்டும்...ஏனெனின் ஆத்மா அனைவர்க்கும் பொதுவானது.

தன்னலம் கருதாமல் அனைவர்க்கும் அரும்பணியாற்று...ஏனெனின் ஆத்மா ஒன்றே உள்ளது.

ஆசையையும் சினத்தையும் அகற்று...ஏனெனின் இவை ஆத்ம சொரூபத்தை மறைக்கின்றன.

பேரும் புகழும் ஆதிக்கமும் செல்வமும் விரும்பப்படும் பொருள்களன்று...ஏனெனின் இவை ஆத்மாவை அடைவதற்கு தடைக்கற்கள்.

சித்பவானந்தர்
 
பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னை, பிரபஞ்சம் என்னும்

சேற்றைக் கழியவிட்டவா, செஞ்சடாவிமேல்

ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்

கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் கிருபாகரனே

கந்தர் அலங்காரம்
 
உள்ள மலம் மூன்றும் மாய உகுபெருந்தேன்

வெள்ளந் தரும்பரியின் மேல்வந்த - வள்ளல்

மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக்

கருவுங் கெடும் பிறவிக் காடு.


காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பமெனப்

பேணும் அடியார் பிறப்பகல - காணும்

பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும்

பிரியானை வாயாரப் பேசு.

திருவாசகம்
 
எவ்வடிவும் பூரணமாம் எந்தையுரு என்றிசைந்த

அவ்வடிவுக்குள்ளே அடங்குநாள் எந்நாளோ ?

தாயுமானவர்


பொருளில் எல்லாம் மிகப்பெரிய பொருள் கடவுள்...ஆனால் அது யார்க்கும் புலப்படுவதில்லை

பெரும் கூச்சலிட்டு அழைப்பவன் கடவுள்....ஆனால் அவன் அழைப்பை யாரும் கேட்பதில்லை

மிக அருகில் இருப்பவன் கடவுள்...ஆனால் யாரும் அவனை உணர்வதில்லை

எல்லோருக்கும் அவன் தன்னைப் பங்கிட்டுக் கொடுத்திருக்கிறான்...ஆனால் அவன் பெயர் யாருக்கும் தெரியாது.

கடவுளைக் காணமுடியாது என்று சொல்லிக்கொண்டு அவனிடமே மக்கள் ஓடுவது அதிசயமன்றோ...?

சித்பவானந்தர்
 
" எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய்

அங்கங்கு இருப்பது நீ அன்றோ பராபரமே. "

தாயுமானவர்"

பிறர்க்கு நான் கேடு செய்யும்போது உண்மையில் எனக்கே கேடு செய்துகொள்கிறேன்.

உயிர்களிடையேயுள்ள அடிப்படை ஒற்றுமையை அறியாதவன் பிற உயிர்களுக்க தீங்கு செய்கிறான்.

ஒரு கையானது மற்றொறு கையை அடிக்கும்போது அது தனக்கே கேடாய் முடியும்.

எல்லா உயிர்க்கும் அன்பாயிருக்கும் பாங்கை இறைவா நீ நல்குவாயாக."

சித்பவானந்தர்
 
" ஆடுகின்றிலை கூத்துடையான் கழற்கு அன்பிலை என்புருகிப்

பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர்

சூடுகின்றிலை சூட்டுகின்றதுமிலை துணையிலி பிணநெஞ்சே

தேடுகின்றிலை தெருவுதோ றலறிலை செய்வதொன்றறியேனே. "

மாணிக்கவாசகர்

" அடுப்புக்கரி, தன்னளவில் கன்னங்கறேரென்று கிடக்கிறது; ஆனால் அதைத் தீயுடன் சேர்த்தால், அது தேஜோமயமாகத் திகழ்கிறது.

மனதும் அதைப் போன்றதே.....உலக விஷயங்களில் சேர்ந்தால் அது பிணநெஞ்சு, பரம்பொருளைச் சார்ந்தால் அது சித் சொரூபம் ஆகிறது. "

சித்பவானந்தர்
 
" பெற்றார் அநுபூதி பேசாத மோன நிலை

கற்றார் உனைப் பிரியார் கண்டாய் பராபரமே."

தாயுமானவர்

"உலகத்தவர் பொருளையும் போகத்தையும் விரும்புவது போல, பரம்பொருளே உன்னை நான் விரும்புவேனாக.

அறிவும் அமைதியும் வேண்டுமென்று விழைகின்ற நாம், அதைப் பெறவில்லை என்றால், அதற்குக் காரணம் உண்டு.

நாம் வாக்கால் வேண்டுவது ஒன்று, மனதாலும் காயத்தாலும் வேண்டுவது மற்றொன்று..... இந்த முரண்பாட்டை அகற்றவேண்டும்

நாம் முற்றிலும் பரம்பொருளுக்குச் சொந்தமாகிவிட்டால், பரம்பொருளும் நமக்குச் சொந்தமாகிவிடும்."

சித்பவானந்தர்
 
அறிவும் அமைதியும் வேண்டுமென்று விழைகின்ற நாம், அதைப் பெறவில்லை என்றால், அதற்குக் காரணம் உண்டு.

நாம் வாக்கால் வேண்டுவது ஒன்று, மனதாலும் காயத்தாலும் வேண்டுவது மற்றொன்று..... இந்த முரண்பாட்டை அகற்றவேண்டும்

இந்நிலை அவ்வளவு சுலபமானதல்ல!

கி. வா. ஜ அவர்களின் பின்வரும் வரிகள் இது எங்கனம் சுலபமல்ல என விளக்கக்கூடும்.

"நமக்கும் சில சமயங்களில் அம்பிகையினிடம் அன்பு மின்னற் கீற்றுப்போலத்தோன்றுவதுண்டு. பெரிய பக்தர்களைக் கண்டாலும் சைத்தன்யம் மிக்க சந்நதிகளுக்குச் சென்று தரிசித்தாலும் சிறந்த நூல்களைச் சொல்லக் கேட்டாலும் அன்னையின் திருவடி ஒன்றே பற்றுக்கோடு என்ற உண்மை நமக்குப்புலனாகும். ஆனால் அடுத்த கணத்தில் அந்த எண்ணத்தை மாற்ற நூறு நூறு உலகியலெண்ணங்கள் வந்து மோதும். ஆயிரம் எண்ணங்களுக்கிடையே அம்பிகையின் திருவடி எண்ணமும் ஒன்றாக வந்து மறைந்து விடும். - அபிராமி அந்தாதி விளக்கவுரை - கி.வா.ஜ
 
இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும்

துன்பம் தொடர்வறுத்துச் சோதியாய்- அன்பமைத்துச்

சீரார் பெறுந்துறையான் என்னுடைய சிந்தையே

ஊராகக் கொண்டான் உவந்து.

திருவாசகம்
 
Back
Top