தினசரி தியானம்

ஒன்று எனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற

நன்றெழில் நாரணன் நான்முகன் அரன் என்னுமிவரை

ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இருபசை அறுத்து

நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே.

நம்மாழ்வார்


கமல நான்முகனும் கார்முகில் நிறத்துக் கண்ணனும் நண்ணுதற்கரிய

விமலனே எமக்கு வெளிப்படாய் என்ன வியந்தழல் வெளிப்பட்ட எந்தாய்

திமில நான்மறைசேர் திருப்பெரும் துறையில் செழுமலர்க் குருந்தம் மேவிய சீர்

அமலனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்றருளாயே

திருவாசகம்
 
மண்ணிற் பிறந்து மண்ணாகும் மானிடப் பேரிட்டு அங்கு

எண்ணமொன்றெண்ணியிருக்கும் ஏழை மனிசர்காள் !

கண்னுக்கினிய கருமுகில் வண்ணன் நாமமே

நண்ணுமின் நாரணன் தம்மன்னை நரகம்புகாள்காண்.

பெரியாழ்வார்


பேசும் பொருளுக்கு இலக்கிதமாம் பேச்சிறந்த

மாசின் மணியின் மணிவார்த்தை பேசிப்

பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல

மருந்தினடி என் மனத்தே வைத்து.

திருவாசகம்
 
கடைந்து பாற்கடல் கிடந்து காலநேமியைக் கடிந்து

உடைந்த வாலிதன் தனக்கு உதவவந்து இராமனாய்

மிடைந்த ஏழ்மரங்களும் அடங்க எய்து வேங்கடம்

அடைந்த மாலபாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ

திருமழிசைப்பிரான்


குலம் பாடிக் கொக்கிறகும் பாடிக் கோல்வளையான்

நலம் பாடி நஞ்சுண்ட வா பாடி நாள்தோறும்

அலம்பார் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற

சிலம்பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ.

திருவாசகம்
 
Last edited:
நின்றவரையும் கிடந்தகடலும் திசையும் இருநிலனும்

ஒன்றும் ஒழியாவண்ணம் எண்ணிநின்ற அம்மானார்

குன்றுகுடையா எடுத்த அடிகளுடைய திருநாமம்

நன்று காண்மின் தொண்டீர் சொன்னேன் நமோ நாராயணமே.

திருமங்கையாழ்வார்


விண்ணாளும் தேவர்க்கு மேலாய வேதியனை

மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்

தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானைப்

பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையில்

கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட

அண்ணாமலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்

திருவாசகம்
 
பூ நிலாய ஐந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய்

தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்த காலிரண்டுமாய்

மீநிலாயது ஒன்றுமாய் வேறுவேறு தன்மையாய்

நீநிலாய வண்ணம் நின்னை யார் நினைக்கவல்லரே ?

திருமழிசைப்பிரான்


ஆன அஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்

ஆன அஞ்செழுத்துளே ஆதியான மூவரும்

ஆன அஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்

ஆன அஞ்செழுத்துளே அடங்கலாவலுற்றதே

சிவவாக்கியர்
 
தூயாய் சுடர் மாமதிபோல் உயிர்க்கெல்லாம்

தாயாய் அளிக்கின்ற தண்தாமரைக்கண்ணா

ஆயா அலைநீர் ஏழுலகும் முன்னுண்ட

வாயா உன்னை எங்கணம் நான் மறக்கேனே

திருமங்கையாழ்வார்


பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப் போகமும் திருவும் புணர்ப்பானைப்

பின்னை என்பிழையைப் பொறுப்பானைப் பிழையெலாந் தவிர்ப்பானை

இன்ன தன்மை என்று அறியவொண்ணா எம்மானை எளிவந்த பிரானை

அன்னம் வைகும் வயல் பழனத்து அணி ஆரூரானை மறக்கலுமாமே.

ஏழாம் திருமுறை
 
காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக

வாய்மையே தூய்மையாக மனமணி லிங்கமாக

நேயமே நெய்யும் பாலா நிறையநீர் அமைய ஆட்டிப்

பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே.

அப்பர்

இறைவா, நீ உறைவதற்கு ஏற்ற புனிதமான இல்லமாக என் காயத்தைத் திருத்தியமைக்க நீ துணைபுரிவாயாக.
 
அன்பென்று கொட்டு முரசே ! அதில் ஆக்கமுண்டாம் என்று கொட்டு

துன்பங்கள் யாவுமே போகும் - வெறும் சூதுப் பிரிவுகள் போனால் !

அன்பென்று கொட்டு முரசே ! மக்கள் அத்தனைபேரும் நிகராம்........

அறிவை வளர்த்திடல் வேண்டும் மக்கள் அத்தனைபேருக்கும் ஒன்றாய்

சிறியாரை மேம்படச் செய்தால் - பின்பு தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்....

ஒன்றென்று கொட்டு முரசே ! அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே !

நன்றென்று கொட்டு முரசே ! இந்த நானில மாந்தருக்கெல்லாம்

பாரதியார்
 
திருவளர் வாழ்க்கை, கீர்த்தி, தீரம், நல்லறிவு, வீரம்

மருவு பல்கலையின் சோதி வல்லமை என்பவெல்லாம்

வருவது ஞானத்தாலே வையக முழுதும் எங்கள்

பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞானபானு......

எண்ணிய முயற்சியெல்லாம் பயனுற ஓங்கும், ஆங்கே

திண்ணிய கருத்தினோடும் சிரித்திடு முகத்தினோடும்

நண்ணிடும் ஞானபானு, அதனை நாம் நன்கு போற்றின்.

பாரதியார்
 
காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டாகார சிவ

போகமெனும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய்

ஏக உருவாய்க் கிடக்குதையோ இன்புற்றிட நாம் இனியெடுத்த

தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேரவாரீர் சகத்தீரே

தாயுமானவர்
 
ஓடும் இருநிதியும் ஒன்றாகக் கண்டவர்கள்

நாடும் பொருளான நட்பே பராபரமே.

தாயுமானவர்

செல்வத்தில் பற்றுவைக்கும் மக்கள் செம்பொருளான தெய்வத்தைப் புறக்கணிக்கின்றனர்

பொருள்பற்று நீங்குமாறு, நல்ல உறவாக சித்தமிசை குடிகொண்டிருக்கும் பரமனது பராமரிப்பு புலனாகவேண்டும்.

பின்னர் அவனுக்கு நிகரான துணை வேறொன்றுமில்லை எனும் தெளிவு வருகிறது. அவனது நட்பு ஒன்றே நாடத் தக்கது.
 
சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம்

வ்ந்து அரி சிந்துர வன்ணத்தினாள் மகிடன் தலைமேல்

அந்தரி, நீலி, அழியாத கன்னிகை ஆரணத்தோன்

சுந்தரி, கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.

அபிராமி அந்தாதி
 
அருமையான பகிர்வு..... உண்மையே..... தெய்வத்துக்கு நிகர் யாரும் எதுவும் இல்லை...

அன்பு நன்றிகள் ஜானகி....
 
கொதியாது கொதித்தெழுந்த
....கோட்டெருமத் தலையின் மிசை
மிதியாத சீறடி மிதித்தனபோல் தோன்ற... (பழம்பாடல்)

அகிலாண்ட கோடி யீன்ற அன்னையே
பின்னையும் கன்னியென மறைபேசும்
ஆனந்த ரூபமயிலே..... (தாயுமானவர்)



நீலியின் தோற்றம்!
நெஞசினில் நிலைகொண்டாலே போதும்
இப்புவியில் வேறேது வேண்டும்.
 
மகிடன் தலைமேல்

அந்தரி

கொதியாது கொதித்தெழுந்த
....கோட்டெருமத் தலையின் மிசை
மிதியாத சீறடி மிதித்தனபோல் தோன்ற... (பழம்பாடல்)

அழியாத கன்னிகை

அகிலாண்ட கோடி யீன்ற அன்னையே
பின்னையும் கன்னியென மறைபேசும்
ஆனந்த ரூபமயிலே..... (தாயுமானவர்)


நீலியின் தோற்றம்!
நெஞசினில் நிலைகொண்டாலே போதும்
இப்புவியில் வேறேது வேண்டும்.
 
அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய்

ஒத்து ஒவ்வாத பல்பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்

முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்

எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ? ஏழை நெஞ்சமே

திருமழிசைப்பிரான்
 
நன்றென்றுத் தீதென்று நானென்றுந் தானென்றும்

அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே- நின்றநிலை

தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்

போனவா தேடும் பொருள்.

ஔவையார்

மனிதனே கடவுளை எங்கெங்கோ தேடுகின்றாய், அது, நல்லது என்றும் தீயது என்றும், கடவுள் இல்லை என்றும் உண்டு என்றும் பேதப்படுத்திப் பார்த்து புத்தி பேதலிக்கிறாய் !

தானே அதுவாகும் தத்துவத்தை நினைத்துப் பார் ! அதுவே உண்மையான நிலையாகும் !

உன் உயிரின் உள்ளேயிருக்கும் கடவுளை வேறு எங்கெங்கோ தேடி அலைகிறாய் !

சம்பை அறுத்தவர்கள், அதுவே கட்டுவதற்கும் பயன்படும் என்பதனை அறியாமல், கயிற்றுக்கு வேறு எங்கோ தேடிப்போன கதை போன்றதுதான் அது !
 
மனிதம் இருக்கும் இடத்தில் தான் கடவுளும் குடியிருக்கிறார்...

மிக அருமையான பகிர்வு ஜானகி.. அன்பு நன்றிகள் தொடருங்கள்....
 
அல்லும் பகலும் பேரன்புடனே தானிருந்தால்

கல்லும் உருகாதோ கல் நெஞ்சே- பொல்லாத

தப்புவழி ஏன் நினந்தாய் சந்ததமும் நீ இறந்த

வெப்பிலே ஆனந்தமே.

தாயுமானவர்

காயைக் கனியாக்குவது வெப்பம்; கல்நெஞ்சைப் பிசைந்து கனிந்த நெஞ்சமாக்குவது உள்ளுணர்ச்சி; பரத்தை நாடி உருக உருக, நெஞ்சம் பண்படுகிறது.

மேன்மையை நாடி உருக இயலாதவர்களே கல்நெஞ்சமுடையவர்களாவர்.

இறைவா, உன் அருளால் என் நெஞ்சம் உருகுவதாகுக !
 
Back
Top