ஆதவா
New member
நடிகர்கள் : திரு. ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய் பச்சன், டேனி டென்ஜோங்பா
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு : ரத்தினவேலு
எழுத்து : சுஜாதா, ஷங்கர், கார்க்கி
பாடல்கள் : வைரமுத்து, கார்க்கி, பா.விஜய்.
இயக்கம் : ஷங்கர்
சில ஆங்கிலப் படங்களைப் பார்க்கும்பொழுதெல்லாம் எனக்குத் தோன்றுவது, ஏன் தமிழில் இம்மாதிரியான முயற்சிகள் இல்லை என்பதுதான். அதிலும் ஷங்கர் மாதிரியான பிரம்மாண்ட திரைப்பட பிரம்மாக்கள் அசட்டுத்தனமான பாடல் காட்சிகளில் பிரம்மாண்டம் எனும் பெயரில் அதிகம் செலவழிப்பதும் அவர் மீதும் அவர் ரசிகனின் விருப்பத்தின் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையை விவாதத்திற்குக் கொண்டுவரும்படியும் இருந்தது. ஆங்கிலப்படங்கள் பெரும்பாலும் அதிக செலவுள்ள படங்களையே வெகுஜன பார்வைக்குக் கொண்டுவருவதால் தமிழில் இதுமாதிரியான முயற்சி செய்யவே இயலாது என்று பலராலும் கூறப்பட்டு வந்தது. ஆனால் எல்லோரும் மறந்து போன ஒரு விஷயம். பிரம்மாண்டம் என்பது தொழில்நுட்பம் மாத்திரமன்று, கதையுள்ளும் இருக்கிறது. சொல்லப்படும் விதத்திலும் பிரம்மாண்டம் இருக்கிறது. நமது மக்கள் அதைப் புரிந்து கொள்வதில்லை. அதேசமயம் நல்ல படங்கள் என்பது மனதின் பகுதியை வெட்டும்படியாக இருக்கவேண்டிய அவசியமில்லை. வலியைத் தரும் படங்கள் நல்ல தரமான படங்கள் என்று ஒரு மாயை இருக்கிறது. ஒவ்வொரு தமிழ்படமும் வருகையில் ஏதாவது ஒன்று இயல்பு வாழ்க்கையைப் பிரதிபலிக்க யதார்த்தமான திரைப்படம் எடுத்திருக்க மாட்டார்களா என்று எதிர்பார்க்கவேண்டியிருக்கிறது.. தமிழில் அசட்டுத்தனமான ஃபேண்டஸி திரைப்படங்கள் பொதுவாக மசாலா திரைப்படங்கள் என்று அழைக்கப்பட்டு வந்தாலும் பலவும் ரசிகனின் மனதுக்காகவே படைக்கப்படுகிறது. வெகுசில விதிவிலக்குகளைத் தவிர்த்து... ஆகவே எதார்த்தம் வேண்டி அடுத்த கட்டத்திற்குள் நுழையும் சினிமா பார்வையாளன் வெகு எளிதாக ஆங்கிலப் படங்களையோ அல்லது வேற்று மொழிப் படங்களையோ ரசிக்கப் போய்விடுகிறான்....
எதிர்பார்ப்புதான் இத்தனைக்கும் காரணம். அப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அமர்ந்து பார்த்த படம்தான் எந்திரன். பல கோடிகள், உழைப்பு, தொழில்நுட்பம் என்று பலவாகப் பேசப்பட்டாலும் ரஜினிகாந்த் எனும் ஆளுமை இன்றி இது இத்தனைதூரம் வந்திருக்க வாய்ப்பில்லை. அது கிட்டத்தட்ட எல்லோருக்கும் தெரியும். கதையைப் பற்றி பெரிதாகப் பேச எதுவுமில்லை. சொல்லப்போனால் கதையைப் பற்றி பேசினால் சலிப்புதான் வருகிறது. ஆனால் தமிழ் சினிமாவுக்கு எந்திரன் எப்படிப்பட்டது என்பதையே நாம் பார்க்கவேண்டியிருக்கிறது.
எனக்குத் தெரிந்து இதுவரை எந்தவொரு முழுக்க அறிவியல் சார்ந்த தமிழ்படமும் பார்த்ததேயில்லை.. அப்படி ஏதாவது எடுத்திருக்கிறார்களா என்றும் தெரியவில்லை. ஏலியன்களை வைத்தோ, வருங்காலத்தைக் குறித்தோ எந்தவொரு திரைப்படமும் தமிழில் கிடையாது. (எம்.ஜி.ஆரின் ஒரு படத்தில் மட்டுமே ஏலியனாக வருவதாக அறிந்தேன்.) முதலில் விஞ்ஞான திரைப்படங்கள் என்றால் ரோபோக்களால் நிறைந்த உலகம் என்றவொரு மாயை இருக்கிறது. எதிர்காலம் என்பது ரோபோக்களை நம்பித்தான் இருக்கப் போகிறது என்று ஆரூடம் பார்த்த யாரோ ஒரு கதாசிரியனின் வேலை அது. இருக்கலாம் இல்லாமலும் போகலாம்; ஆனால் எந்திரன் என்பது உலோகங்களால் ஆன இயந்திரம் மட்டுமேயல்ல, மனிதனாகவும் இருக்கலாம்.. ஏனெனில் இன்றைய உலகம் அப்படித்தான் சென்றுகொண்டிருக்கிறது.
நாம் இன்னும் இருபது வருடங்கள் பின் தங்கியிருக்கிறோம் என்று சொல்லுவது உண்மைதான் என்பது எந்திரன் திரைப்படத்தைப் பார்க்கையில் நினைவுக்கு வந்தது. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்னரே தயார்செய்ய எத்தனிக்கப்பட்ட பதார்த்தம், வெகுநாட்கள் கழித்து சமைக்கப்பட்டு பரிமாறியிருந்தாலும் ருசி இன்னும் நாக்கின் நுனியில் இருக்கிறது. ரஜினி என்ற கட்டமைப்பை கிட்டத்தட்ட சிவாஜியில் உடைத்துவிட்டாலும் இன்னுமிருக்கும் மிச்சமீதிகளை எந்திரனில் உடைத்திருக்கிறார்கள். ஒரு சாதாரண படத்தில் அசாதாரண மனிதராக வந்த ரஜினி, ஒரு அசாதாரண படத்தில் சாதாரணமாக வந்திருக்கிறார். வசீகரன் எனும் ஒற்றை விஞ்ஞானியின் பத்துவருட உழைப்பில் உருவாகும் சிட்டி எனும் எந்திரம், மனிதனாக மாற முயற்சி செய்தால் என்னவாகும் என்பதுதான் கதை. இதற்குள் என்னவேண்டுமானாலும் பூசி கதையை மெருகுபடுத்தலாம். சங்கர் எடுத்துக் கொண்டது காதல். சனா என்ற பெண்ணைக் காதலிக்கும் எந்திரம், சனாவுக்காக என்னவேண்டுமென்றாலும் செய்யத் துணிகிறது. வழக்கமான சங்கர் இம்முறை சற்றே மாறுபட்டிருக்கிறார். அவரது அரசியலை தன்னிரு கையால் தூக்கி நிறுத்துவது, ஊழல் பேய்களைத் தூக்கிலிடுவது போன்ற அரதப்பழசான முட்டாள்தனத்தை மீண்டும் செய்ய அவர் முன்வரவில்லை என்பதிலிருந்தே முதன்முறையாக சங்கர் மீது ஒரு சிறு அபிப்ராயம் ஏற்படுகிறது. ஷங்கர், ஷங்கராகவே இல்லாமல் தனது பழைய முகங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கிழித்திருக்கிறார். கிராஃபிக்ஸ் காட்சிகள் முந்தைய தமிழ்படங்களைப் போன்று அரைகுறையாக இல்லாமல் கிட்டத்தட்ட முழுமையாக இருக்கிறது. தீவிபத்து ஏற்படுவதாக இருக்கும் காட்சியைத் தவிர மற்ற இடங்களில் திருப்திகரமான கிராஃபிக்ஸ் காட்சிகள். எந்திரன்கள் நிறைய இருப்பதாகக் காண்பிக்கும் காட்சியில் ஒருசில எந்திரங்களைப் பார்க்கும் பொழுது அது பொம்மைப் போன்ற தோற்றமளிக்கிறது. எந்திரன்கள் நிறையபேர் இணைந்து சுடுவதும் விதவிதமான தோற்றத்தில் வருவதும் நன்றாக இருக்கிறது. இடைவேளைக்குப் பிறகு கொசுவோடு பேசும் காட்சியை மட்டும் தவிர்த்திருக்கலாம். அது திணிக்கப்பட்டதைப் போன்று உணர்கிறேன். பாடல்காட்சிகளில் “காதல் அணுக்கள்” பாடல் படமாக்கப்பட்டது நன்றாக இருக்கிறது. ஒருவேளை செயற்கையான செட்டுகளின்றி எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட உணர்வாக இருக்கலாம். கருணாஸ் மற்றும் சந்தானம் போன்ற அரைவேக்காட்டு இன்ஜினியர்களை வைத்து எந்தவொரு விஞ்ஞானியும் எந்த வேலையும் செய்யப்போவதில்லை. ஆனால் அவர்கள் ஒரு சில காரணங்களால் படத்துக்குத் தேவைப்படுகிறார்கள். அத்தோடு அதிக காட்சிகளிலும் வருவதில்லை. மூன்றாவது ரஜினியாக வரும் எந்திரனின் சிரிப்பு, ரஜினியின் வில்லத்தனத்தை மீண்டுமொருமுறைப் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. ஐஸ்வர்யா ராய்க்கு அநேகமாக இதுதான் தமிழில் பெரிய ஹிட் படமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. கதாநாயகிக்காகத்தான் படமே நகர்கிறது. அதில் ஓரளவு நடித்திருக்கிறார். நடன அசைவுகள், நன்றாக இருக்கின்றன. நிறையபேர் அவரின் கவர்ச்சியைப் பற்றி பேச வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எனக்கு அப்படித் தெரியவில்லை. நான் ஐஸ்வர்யாராயை மட்டுமேதான் பார்த்தேன். அவரின் கவர்ச்சியை அல்ல. படத்தில் பல கேள்விகளுக்கு விடையும் இருக்கிறது...
படம் முழுக்க இருப்பது நான்கு பேர். முதலாவது ரஜினிகாந்த். அறுபது வயதிலும் முகப்பூச்சுக்களால் இளமையான புறத்தோற்றத்தைக் கொண்டுவந்திருந்தாலும் படம் முழுக்க இளமை அவரது முகத்தில் துள்ளுகிறது.. அது அகம்சார்ந்தது. நன்கு உழைத்திருக்கிறார் என்று ஒற்றை வார்த்தையில் சொல்லமுடியாது. ஒரு சராசரி தமிழ்ப்படத்துக்கும் மேலாக பணி செய்திருக்கிறார். சில இடங்களில் பிரம்மிக்க வைக்கவும் செய்கிறார். இப்படிப்பட்ட ஒரு ஆளுமைக்குப் பின்னைய அரசியலைப் பற்றி எனக்குப் பெரிதாக அக்கறையில்லை. மாறாக தமிழ் சினிமா என்ற மசாலாக்கிடங்கை மேலும் பலர் அறிய திறந்து காட்ட வழிசெய்திருக்கிறார் என்று நினைப்பதே உசிதமாகப்படுகிறது. ரஜினிகாந்த் என்ற ஒரு மனிதர் இல்லாமல் இவ்வளவு பெரிய படத்தை யாராலும் எடுத்திருக்கமுடியாது. எந்திரனில் அவருக்கு குத்து வசனங்கள் கிடையாது, அதிரடியான முதல் பாடல் கிடையாது, மனிதரைக் காண்பிப்பதே வெகு இயல்பாக ஆர்ப்பாட்டங்களற்றேதான் காண்பிக்கிறார்கள். தமிழ்சினிமாவில் அறிமுகக் காட்சிகள் என்ற வழக்கமுண்டு. ஒரு கதாநாயகனைக் காண்பிக்கையில் அவருக்கென்ற ஒரு நடைமுறையை முன்னிருத்திதான் காண்பிப்பார்கள். எந்திரனில் அப்படியேதும் நிகழ்ந்துவிடாமல் நேரடியாக கதைக்குள் நுழைந்தது மகிழ்ச்சியைத் தருகிறது. ஒரு சூப்பர் ஸ்டார், கீழறங்கிவந்து தான் ஒரு சாதா ஸ்டாராக இருக்கமுடியும் என்று காண்பித்து மேலும் உயர்ந்துவிடுகிறார் மற்ற கதாநாயகர்கள் இதைப் பார்த்தாவது திருந்துவார்களென.
இரண்டாவது சுஜாதா. படத்தின் களம், தமிழுக்கு முற்றிலும் புதியது. அறிவியல் சங்கதிகளை மிக எளிமையாக இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னரிருந்தே சொன்னவர் சுஜாதா. படம் முழுக்க அவரேதான் தெரிகிறார். மிக எளிமையாகவும் புரியும்படியும் பெரும்பாலான எலட்ரானிக் குறியீட்டு வார்த்தைகளைத் தவிர்த்து மக்கள் மனதில் பதியும்படியும் செய்திருக்கிறார். ரோபோ என்றதும் அதன் உள்கட்டமைப்பைப் பெரும்பாலும் சொல்லமாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். அதைவிட, ஒரு சாதாரண ரஜினியே அத்தனை ஆர்ப்பாட்டம் செய்யும் பொழுது அசாதாரண ரஜினி என்னென்னல்லாம் செய்வார் என்றும் பலர் சொல்லக் கேட்டேன். ஒரு மனித உணர்வுள்ள எந்திரனால் என்னமுடியுமோ அதைமட்டுமேதான் சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக சொல்லவேண்டுமெனில் எந்திரன் நடமாட அது மின்சாரத்தை சுயமாகச் செலுத்தி சார்ஜ் செய்யப்படவேண்டும். அதை இறுதிவரைக்கும் காட்டியிருப்பது சிறப்பானது. என் இனிய இயந்திராவில் ஜீனோ, வெயில்கதிர்களை உபயோகப்படுத்தும். அந்த நாவலின் பாதிப்பும் பல இடங்களில் உண்டு என்றாலும் அந்த நாவலைப் படிக்கும் பொழுது நான் சமகாலத்தில் இல்லாமல் இருந்தேன் என்பது வேறுவிஷயம். சுஜாதா ஒரு படத்துக்கு வசனம் எழுதுகிறார் என்றால் அதனை ஒரு நாவலைப் போன்று எழுதிக் கொடுத்துவிடுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியேதும் இருந்தால் எந்திரன் எனும் சுஜாதாவின் நாவலை நிச்சயம் எதிர்பார்ப்பேன். ஒரு அறிவியல் களத்தை சினிமா வடிவில் நமக்கு அளித்துவிட்டு இறந்து போயிருக்கிறார். இந்த படம் பார்த்தபிறகாவது இறந்திருக்கலாம் என்று ஆதங்கப்படுகிறேன்.
மூன்றாவது ஏ.ஆர்.ரஹ்மான். விண்ணைத்தாண்டி வருவாயாவில் ஓமனப் பெண்ணே பாடலைக் கேட்டபொழுது உண்மையில் 80களில் வந்த இளையராஜாவின் இசையைக் கேட்டு சுயத்தை இழந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. அந்த படத்தில் மனிதர் பின்னியிருப்பார். ஆனால் அது ஒரு பயத்தையும் கொடுத்தது. அதற்கடுத்தடுத்த படங்களில் ஒருசில படிகளில் ஏறாவிட்டாலும் இறங்கிவிட்டால் என்னாவது என்று நினைப்பேன். ஆனால் தான் எப்போதும் இசைப்புயல் என்பதை ஒவ்வொரு படத்திலும் நிரூபித்தே வருகிறார். எலக்ட்ரானிக் ராக் வகையில் பாடல்கள் அமைந்திருப்பதால் வி.தா.வ படத்தைப் போல உடனே பாடல்கள் ஒட்டவில்லை என்றாலும் பிறகு கேட்டபொழுது நன்றாக இருக்கிறது என்று சொல்லமுடிந்தது. ஆனால் பிண்ணனி இசையில் எப்பொழுதும் போல கலக்கிவிட்டார். ஒருசில இடங்களில் இளையராஜா போன்ற உணர்வு ஏற்பட்டது. இறுதி காட்சிகளில் அரிமா அரிமா பாடல் மேம்போக்காக கலந்த இசை சற்று புதுமையாக இருந்தது. எந்திரனுக்கு என்ன இசை தரமுடியுமோ அதைத் தர அவரால் முடிந்திருக்கிறது.
நான்காவது ஷங்கர். ஷங்கர் படங்கள் அனைத்தையுமே தியேட்டரில் சென்று (கிட்டத்தட்ட முதல் மூன்றுநாட்களுக்குள்) பார்த்தாலும் அவர்மீது ஒரு நல்ல அபிப்ராயம் கிடையாது. பாடல்களில் புதுமை என்றபெயரில் கண்றாவித்தனமான செட்டுகளில் வித்தியாசம் என்ற பெயரில் நடனம் புரிவது, மிகப்பழமையான கதைக்கு புதிய சாயம் பூசி பிரம்மாண்டம் என்ற பெயரில் விற்பது போன்ற அற்ப யானையைத்தான் நம்மிடையே காட்டி பிச்சை எடுத்துவந்திருக்கிறார் இதுவரைக்கும்... ஆனாலும் இன்னொருவிதத்தில் அவரைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அது தொழில்நுட்பம். ஜீன்ஸில் இரு பிரசாந்தும் (பிரசாந்த்களும்?) இயல்பாக வருவதைப் போன்ற தொழில்நுட்பம் கண்டபொழுது வியப்பு ஏற்பட்டது. ஏனெனில் அப்பொழுது ஆங்கிலப்படங்களை அதிகம் நான் பார்த்திருக்கவில்லை. அது புதிதாகத் தெரிந்தது. தொடர்ந்து ஒவ்வொரு படத்திற்கும் ஏதாவது ஒன்றை புதுமையாகக் காட்டிவருவார். பெரும்பாலும் அவரோடைய படங்கள் அப்படிப்பட்ட புதுமைக்காகத்தான் ஓடியதே தவிர வேறெந்த காரணங்களும் இல்லை. இதில் பாய்ஸை விதிவிலக்காக்கலாம். எந்திரனில் அவரது அபார உழைப்பு படத்தை சலிப்பில்லாமல் எடுத்துச் செல்வதிலிருந்து தெரிகிறது. ரஜினியை வேறுவிதத்தில் காட்டியிருப்பதும் அவருடைய வெற்றி என்றே சொல்லலாம். கடுமையாக வேலை செய்வதைக் காட்டிலும் எல்லோரிடமும் வேலை வாங்குவதே மிகப்பெரிய பணியாகும். அதை திறமையாகச் செய்திருக்கிறார். ரோபோக்களின் வடிவமைப்பிலிருந்து அது யதார்த்த உலகில் நடமாடினால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக்கும் வழிசெய்கிறார். இந்திய சினிமாத் துறையில் இப்படம் பேசப்படும். நிறைய பட்ஜெட் இருந்தால் யார்வேண்டுமானாலும் சிறந்த படம் கொடுக்கமுடியும் என்று உணரவைத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு தனது மிகச்சிறந்த பணியை எப்பொழுதும் போல வழங்கியிருக்கிறார். வைரமுத்துவின், கார்க்கியின் வரிகள் அவ்வளவாகக் கவரவில்லை. அதற்குப் பதில் வாலியை எழுதச்சொல்லியிருக்கலாம். அவர் சிறப்பாகக் கையாண்டிருப்பார். அதேபோல இன்னொருவரை குறிப்பிடாமல் இருக்கமுடியவில்லை... அவர் சாபுசிரில். கலைநுணுக்கம் நன்கறிந்தவர்களால் மட்டுமே எதையும் சிறப்பாக செய்யமுடியும் என்பதை அவரது உழைப்பு இப்படத்தில் சொல்லாமல் சொல்லுகிறது!
என்னதான் முயன்றாலும் எப்பேர்ப்பட்ட ரோபோவாக இருந்தாலும் அதனால் மனிதனின் மனதை அறியமுடியாமல் போகிறது.. சனாவைக் காதலிக்கும் எந்திரன் சிட்டி, அதனை தன் வலையில் சிக்கவைக்க சனாவின் மனதிற்குள் நுழைய முடியவில்லை. அதேசமயம் இப்படம் நம் மனதிற்குள் ஆக்கிரமித்துக் கிடக்கும் எந்திரத்தனத்தையும் அது வெளிப்பட்டால் ஏற்படும் சிக்கல்களையும் விளைவுகளையும் குறிப்பதாக படம் முடிகிறது. நமது வாழ்க்கை இனி புதிதாகத் தொடங்கவேண்டும் என்பது படத்தில் மறைந்து கிடக்கும் உண்மை. இயந்திரங்களின் விபரீதமான செயல்பாடுகள் ஏற்படுத்தும் விளைவுகள் என்று ஒற்றை வரியில் கதையை முடித்துவிடலாம். நாம் நமது இயந்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நவீனத்துவத்திலிருந்து விலகினால் எந்திரங்கள் மையங்களை ஏற்படுத்திக் கொண்டு நம்மை விளிம்பில் தள்ளி பின்னவீனத்துவம் ஆகிவிடும்! அதன் விளைவுகள் மோசமடைந்த பிறகு மீள்நவீனத்துவத்தை நாடவேண்டியிருக்கும் (ரொம்ப சொல்லிட்டேனோ?

இறுதியாக.... இந்த விமர்சனம் முழுக்க சாதக அம்சங்களை மட்டுமே சார்ந்து எழுதவேண்டும் என்று நினைத்து எழுதினேன். ஏனெனில் Sci fi படங்கள் எத்தனையோ பார்த்திருந்தாலும் தமிழில் முதல்முறை என்பதால் அதை முதலில் வரவேற்போம். அல்லது ரஜினியின் எதிரியாகவோ, மசாலா படங்களின் எதிரியாகவோ அல்லது இத்தனை கோடிகளைக் கொட்டி எடுக்கவேண்டுமா என்று குமுறுபவராகவோ இருந்தால் இந்த படத்தைப் பார்ப்பதைத் தவிர்த்துவிடலாம். அதற்குப் பதிலாக காமன்வெல்த் போட்டிகளைப் பார்த்து நமக்கே தெரியாமல் கொள்ளை போன நமது பணத்தைப் பற்றியோ அல்லது நம்நாட்டில் போட்டிகள் நடப்பது பற்றியோ பெருமையாகப் பேசிக் கொள்ளலாம்.....
அன்புடன்
ஆதவா.