பிறிது மொழிதல் அணி :
இஃது ஒட்டணி என்றும் நுவலாநுவற்சி என்றும் சொல்லப்படும். இதில் நான்கு வகை உண்டு.
1. அடையும் பொருளும் அயல்பட மொழிதல்:
வெறிகொ ளினச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக்
குறைபடுதேன் வேட்டுங் குறுகும் - நிறைமதுச்சேர்ந்
துண்டாடும் தன்முகத்தே செவ்வி யுடையதோர்
வண்டா மரைபிரிந்த வண்டு.
இதன் பொருள் :
தன்னிடத்தில் அழகையும் வளப்பத்தையும் உடைய தாமரையிடம் குறைவற்ற நிறைமதுவைச் சேர்ந்து உண்டு களித்து விளையாடுகின்ற வண்டும், களித்த பல வண்டுகள் சேர்ந்து உண்டு வெறுத்துவிட்ட குறைபடு செங்கழுநீர்ப்பூவின் மதுவை விரும்பியும் சேரும்.
இப் பாடலில், தாமரை - தலைவி, காவி என்ற செங்கழுநீர்ப்பூ - பரத்தை, வண்டாமரை பிரிந்த வண்டு - தலைவன்.
இது, பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்கு வாயினேர்ந்த தோழி சொல்லியது.
2. அடை பொதுவாக்கிப் பொருள் வேறுபட மொழிதல் :
உண்ணிலவு நீர்மைத்தா யோவாப் பயன்சுரந்து
தண்ணளி தாங்கு மலர்முகத்துக் - கண்ணெகிழ்ந்து
நீங்க லரிய நிழலுடைத்தாய் நின்றெமக்கே
ஓங்கியதோர் சோலை யுளது.
இதன் பொருள் :
மனத்துள்ளே உண்டாகிய குணமுடைத்தாய்ப், பலருக்கும் மிகவும் உதவித் தண்ணளி யுடைத்தாகிய விரிந்த முகத்தையும், கண்ணோட்டத்தையு முடைத்தாய்ப் பிரிதற்கரிய சாயலோடு கூடி நிற்பதென ஒரு வள்ளல் மேலும்,
நடுவுண்டாகிய நீரை யுடைத்தாய் மாறாது பல வளங்களைக் கொடுத்துத் தட்பமுடைய வண்டுகளைத் தாங்கிய மலர்களைத் தோற்றத்திலே யுடைத்தாய் மதுச் சோர்ந்துவிட்டுப் போதற்கரிய நிழலுடைத்தாய் ஓங்கி நிற்பதென்று சோலை மேலுஞ் செலுத்துக.
3. அடை விரவிப் பொருள்வேறுபட மொழிதல் :
தண்ணளிசேர்ந் தின்சொன் மருவுந் தகைமைத்தாய்
எண்ணிய வெப்பொருளு மெந்நாளும் - மண்ணுலகில்
வந்து நமக்களித்து வாழு முகிலொன்று
தந்ததான் முன்னைத் தவம்.
இதன் பொருள் :
குறிர்ந்த அருளையும் இன்சொல்லையு முடைத்தாய், எல்லாரும் விரும்பிய எல்லாப்பொருளையும் காலம் வரையாது மண்ணுலகிலே பிறந்து எம்போல்வார்க்கு அளித்து வாழும் என்று ஒரு வள்ளல் மேலும்,
உலகத்தார்க்குக் குளிர்ச்சியோடு கூடக் கொடுக்கின்ற கொடை சேர்ந்து நன்றாம் புகழ் மருவி, எண்ணப்பட்ட எல்லாப் பொருளையும் எக்காலமும் உலகிற்குச் சேர்ந்து கொடுத்து வாழுமென, மேகத்தின் மேலுஞ் செலுத்துக.
உலகில் தோன்றும் பொருள்களுக்கு முதற் காரணம் நீராதலால் அக் காரணத்தை மேகங் கொடுப்ப அதன் செயலாகிய பொருளெல்லாம் புலப்படும்.
4. அடையை பெரு மாறுபாடுபடுத்துப் பொருள் வேறுபட மொழிதல்:
கடைகொ லுலகியற்கை காலத்தின் றீங்கால்
அதைய வரிதாயிற் றன்றே - அதைவோர்க்
கருமை யுடைத்தன்றி யந்தேன் சுவைத்தாய்க்
கருமை விரவாக் கடல்.
இதன் பொருள் :
மிகவும் தாழ்வுடைத்துப்போலும் உயர்ந்தோர் செய்தி, காலவியற்கையாலே மிடியாய்ய்ச் சென்று இரப்பவும் வறுமையுற்றது; சேர்வோர்க்குஅருமையின்றித் தேன்போலுங் கிளவியுமுடைத்தாய் வெகுளியில்லாக் கடல்.
இது வறுமையுற்றான் ஒரு வள்ளலைக் கொள்ள நின்றது. சேர்வோர்க்கு அருமையும், இனிமையில்லாமையும் கருமையும் கடலுக்கு உண்டென்க.
மேலே தந்தது தண்டியலங்காரத்தில் பிறிது மொழிதல் அணி பற்றிக் காணப்படும் பகுதியாகும்.
எளிய விளக்கமாகக் கூறினால்,
உவமானத்தை விளக்கிக் கூறி விட்டு உவமேயத்தைக் கூறாமல் உய்த்தறிய விட்டுவிடுவது பிறிது மொழிதல் அணியாகும்.
இதற்கான எளிய எடுத்துக்காட்டு :
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுந்துப் பெயின்!