கருட புராணத்தில் விஷ்ணுவின் அவதாரங்கள் குறிக்கப்படுகின்றன
அதில்...
மச்சாவதாரம் - மீன் - நீரில் வாழும் உயிரினமாக இருந்தோம்
கூர்மாவதாரம் - ஆமை - நீரிலிருந்து நிலத்திற்கு வரும் உயிரினமாக இருந்தோம்
வராகவதாரம் - பன்றி - முற்றிலும் நீரிலிருந்து விடுபட்டு நிலத்தில் வாழ்ந்தோம்
நரசிம்மாவதாரம் - தலை சிங்கம் - உடல் மனிதன் - உயிரனங்களிலிருந்து வித்தியாசப்பட்டோம். இது மனிதக் குரங்குகளைக் கூறுவதாக கருத்துக்கள் நிலவுகிறது.
வாமனவதாரம் - குள்ளமனிதன் - இது முழுக்க நியண்டர்தால் மனிதனைக் காட்டுகிறது.
பரசுராம அவதாரம் - கோடாரியுடன் மனிதன் - நவீன உலகில் புகுந்துகொண்ட முழு மனிதனைக் காட்டுகிறது. கையிலிருக்கும் கோடாரி அக்காலத்தைய நவீன ஆயுதம், மரங்கள் வெட்டி நவீன உலகம் படைத்தான்
ராமாவதாரம் - அரசன், நாடு, என நாகரீக உலகிற்கு வருகிறான். திருமணம், குழந்தைகள், பிரச்சனைகள் என எல்லாம் இராமன் கதையில் இருக்கிறது,
கிருஷ்ணாவதாரம் - மனிதனின் மனதில் இருக்கும் தந்திரங்கள், மாயங்கள், காமம், விளையாட்டு, குழந்தைமை போன்றவை மெருகேறிய காலம் இது. மஹாபாரத்தில் கிருஷ்ணன் தயவின்றி பாண்டவர்களால் ஜெயித்திருக்க முடியாது. ஏனெனில் சூழ்ச்சிகள்!! உண்மையில் கெளரவர்கள் பக்கம் பலம் இருந்தது. எனவே கிருஷ்ணவதாரம் மூலம் மனிதன் சூழ்ச்சிகளைக் கற்றுக் கொண்டான் என்று சொல்லலாம்.
புத்தாவதாரம்/பலராம அவதாரம் - வட இந்தியாவில் புத்தாவதாரம் குறிப்பிடப்படுகிறது. இராம, கிருஷ்ண அவதாரங்களிலிருந்து மனிதன் கற்றுக் கொண்ட பாடம் ”விளைவுகள்” மனிதன் ஆன்மவளத்தை வளர்த்துக் கொண்டான்.
கல்கி - இது இன்னும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதாவது மனிதனின் பரிணாம வளர்ச்சி ஒன்பது அவதாரங்களோடு நின்றுவிடுவதால் அடுத்து என்னவாக இருக்கும் என்ற யூகத்தின் அடிப்படையில் அவதாரம் எடுக்கப்படவில்லை என்று சொல்லலாம்..
எனில்..... மனிதனின் பரிணாம வளர்ச்சியைக் கண்டறிந்தது இந்தியாவா?? அல்லது ஒவ்வொரு பரிணாமத்தின் போதும் மாற்றத்தின் போதும் உண்மையிலேயே கடவுள் தோன்றினாரா?
ஒரு டவுட்டு.. கிளியர் பண்ணுங்களேன்.
அவதாரங்களை நாம் இப்படி வரிசைப்படுத்தினாலும் பாகவத புராணத்தில் காணப்படும் காலக்கணக்கு என்ன சொல்கிறது?
அக்காலக் கணக்கின் படி முதல் அவதாரம் மச்ச அவதாரம் அல்ல. கூர்ம அவதாரமும் அல்ல. வராக அவதாரத்தையே முதல் அவதாரமாக பாகவதப் புராணம் சொல்கிறது. அதனாலேயே வராக பெருமானுக்கு ஆதிவராகப் பெருமாள் என்றப் பெயரும் உண்டு.
அவதாரங்களப் பற்றிய ஒரு ஆலோசனை.. ஏன் பரசுராமனே இராவணனை கொன்றிருக்கக் கூடாது. இருவருமே சம காலத்தில் வாழ்ந்தவர்களாகவே தெரிகிறது. கோதண்டம் என்னும் தன் வில்லை இராமனுக்கு அளிக்கிறான் பரசுராமன்.
அவதாரங்களில் ஒரு அடுக்கு இருக்கிறது. இராவணன் பிறன் மனை கவர்ந்தான். அவனைத் தண்டிக்க முதலில் கடவுள் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டி இருந்தது. பிறன்மனைக் கவர்ந்தானை தண்டிக்க ஏகபத்தினி விரதனாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் இராமனாக பிறந்து வளர்ந்து வாழ்ந்துகாட்டி பிறகு தண்டனையைக் கையில் எடுக்கிறான்.
மச்ச அவதாரம் எடுத்துக் கொள்வோம்.
ஆயிரம் சதுர் யுகங்கள் சேர்ந்ததே ஒரு மன்வந்தரமாகும். ஒவ்வொரு மன்வந்தரமும் முடியும் நேரத்தில் ஒரு பிரளயம் (பேரூழிக் காலம்) ஏற்படுமாம். அத்தகைய பிரளயம், ஆறாவது மன்வந்தரத்தின் முடிவிலும் ஏற்பட்டது. பொதுவாக ஒரு மன்வந்தரத்தின் முடிவில்தான் படைப்புக் கடவுளான நான்முகன் ஓய்வெடுப்பாராம். அவ்வாறு அவர் ஓய்வெடுக்கும் தருணத்தில், "ஹயக்ரீவன்' (சோமுகாசுரன் என்றும் சொல்வது உண்டு) என்ற அசுரன், அவருடைய வாக்கிலிருந்து வேதங்களைத் திருடிவிட்டான். (பிரம்மதேவனுடைய வாக்கிலிருந்து வேதத்தை அபகரிப்பது என்பது அவருடைய வாக்கிலிருந்து வரும் வேத சப்த உச்சாரணத் திறனைக் கவர்வது).
அசுரனை அழித்து, வேதங்களை திரும்பவும் பிரம்மனிடம் ஒப்படைக்கத் திருவுள்ளம் கொண்டார் பகவான். உடனே பிரம்மாண்டமான "மச்ச' உருவம் எடுத்தார். ஏனெனில் வேதங்களைக் கவர்ந்த அசுரன், ஆழ்கடலில்தான் சென்று பதுங்கியிருந்தான்.
திருமால், மீனாக அவதரிக்க வேறொரு காரணமும் இருந்தது. சத்தியவரதன் என்ற அரசனுக்கும், அவனைப் போன்ற மற்ற பக்தர்களுக்கும் பிரம்ம ஞானத்தை உபதேசிப்பதற்காகவும் இந்த மத்ஸ்யவதாரம் காரணமாக அமைந்தது. இதை ஸ்ரீமத் பாகவத புராணம் இயம்பும்.
யோசித்து பாருங்கள் மீனுக்கு இமைகள் கிடையாது. உறக்கத்தில் தொலைந்ததை மீட்க விழி மூடா மச்சமாக அவதாரம்.
அதே போல் அமிர்தம் கடைந்தெடுக்கத் தேவைப்பட்டது பொறுமை. அப்பொறுமையின் வடிவாக கூர்ம அவதாரம்.
வராக அவதாரம் பற்றிய இரு கதைகள் உண்டு. ஒன்று பிரம்மனுக்கும் விஷ்ணுவிற்கும் யார் உயர்ந்தவர் என்ற போட்டி. இரண்டு இரணியாட்சன் கடலில் அமிழ்த்திய உலகை மீட்பது. உலகை அழிவிலிருந்து காக்க தேவையானவை என்னென்ன என்பதை பன்றியிடம் இருந்து நம்மால் கற்க முடியும். அவை எதையும் தின்னும் ஆனால் பசி வந்தால் மட்டுமே. எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளாது. சில சமயம் தன்னுடைய குட்டியையே கூட உண்டுவிடும். இப்படி வாழ்க்கைப் போராட்டத்தில் பன்றியின் அளவிற்கு எந்த உயிரினத்திற்கும் அக்கறை கிடையாது. வாழவேண்டும் என்பதன் சின்னமே பன்றி என்று கூட சொல்லலாம்.
அதேபோல் மனித மிருகமாக வாழ்ந்த இரணியகசிபுவை (தன் மகனையே கொல்லத் துணிந்தவனை) அழிக்க மிருக மனிதனாகவும், 100 அசுவமேத யாகம் செய்து உயர்ந்து அனைத்தையும் ஆள நினைத்த மாவலியை வாமன ரூபமாக குள்ளனாகவும், நாட்டை ஆண்டாலும் காட்டாச்சி செய்வோரை அழிக்க காட்டில் பிறந்து வாழ்ந்த பரசு இராமனாகவும், சூழ்ச்சிகள், சதிகள் செய்வோரை அழிக்க அதில் தேர்ந்த கிருஷ்ணனாகவும் இப்படி ஒவ்வொரு முறையும் தன்னைத் தகுதி படுத்திக் கொண்ட பிறகே தீமையைத் தட்டிக் கேட்பதாக இருக்கின்றன் அவதாரக் கதைகள்.
அவதாரங்கள் பிற்காலத்திலேயே வரிசை படுத்தப்பட்டன, கருட புராணமும் பாகவதமும் 22 அவதாரங்கள் என்கின்றன. அவதாரங்களை நாலு வகைப்படுத்தவும் செய்கின்றன. மோகினி, தன்வந்திரி, வியாஸ, தத்தாத்ரேய, சனக, ஹயக்ரீவ அவதாரங்கள் பல புராணங்களிலும் உண்டு.
எனவே பத்து அவதாரங்கள் என வரிசைப் படுத்தப்பட்டது பிற்காலத்தில் ஆகும்.