பட்டிமன்றம் - வாழ்க்கை.

விக்ரம் கொஞ்சம் லேட்-ஆ வந்துட்டாரு....
இல்லையென்றால் அவர் கையில் கொடுத்து விட்டு ஜகா வாங்கி இருப்பேன்..
ஒரு நாள் ... ஐ மீன் இரவு... தூக்கமாவது மிச்சம் ஆகி இருந்திருக்கும்...

இப்போதைய சூழ்நிலையில் :eek::eek:... சாலமன் பாப்பையா எங்கு போனார் என்பது தான் கேள்விக்குறி....:rolleyes::rolleyes:

மேடை (!) யில் இருப்பவர்களை விட ஆடிட்டோரியத்தில் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைவு என்ற சூழ்நிலை... :mini023: யப்பாடி... கண்ணைச் சுற்றுகிறது..
 
Last edited:
செல்வா எங்கேய்யா.. சீக்கிரம் வாய்யா.. பாலும் பழமும் பயமுறுத்துதோ..
 
ஒப்பனிங்க் பாட்ஸ்மான் லாஸ்ட் ஓவர் விளையாட வேண்டிய சூழ்நிலை... செல்வாவுக்கு அரிய வாய்ப்பு... வெற்றி தோல்வி இல்லை என்று களத்தில் இறங்காமல் இருந்துவிடாமல் வெளுத்து விளாசுங்க... வாழ்த்துக்கள்:):)

நினைவுபடுத்தத் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.. அடிக்க வேண்டிய 'பாட்' அல்லது 'பேட்' ... தமிழிலேயே சொல்லி விடுவோம்.... மட்டை .....உங்கள் கையில்தான் இருக்கிறது..:aetsch013::aetsch013::aetsch013:
 
Last edited:
ஆன்றோர் நிறைந்த அவைக்கு மீண்டும் எனது வணக்கங்கள்.

இந்தப் பக்கமா வந்து கொஞ்சநாள் ஆச்சு…. என்னதான் நடக்குதுனு வந்துப் பார்த்தா… அதுக்குள்ள ஒரு மகாபாரத யுத்தமே நடந்து முடிஞ்சிருக்கு…

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சண்டை நடக்கும் போது இடையில மாட்டிக்கிட்ட மாதிரி முளிச்சிட்டுருக்கும் போதே…
என்னையும் பேசக் கூப்பிட்டுட்டாங்க…

இவங்க நடத்தின பாரத யுத்தத்திலருந்தே நான் ஒண்ணு சொல்ல வேண்டியதிருக்கு.

அதுக்கு முன்னால நான் ஒன்றை தெளிவாச் சொல்ல ஆசைப்படுறேன் கண்மணியக்காவுக்கும் நம்ம பால்ராஜ் அண்ணாவுக்கும்.

நான் திரும்பத் திரும்ப சொல்லிருக்கேன்…. வெற்றி என்பதே இல்லை… அது ஒரு மாயை இல்லாத ஒன்றை இருப்பதாக நினைக்க வைத்துள்ளார்கள் என்று.

வெற்றியே இல்லை என்று சொல்லும் நான் தோல்வியைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் என்ன?

தோல்வி என்றோ வெற்றி என்றோ ஏதேனும் இருந்தாலல்லவா பேசவேண்டும்?

ஐயா எனக்குத் தெரியும் வெற்றி தோல்வி என்று எதுவுமே இல்லை என்பது?

ஆனால் மற்றவர்களுக்கு வெற்றி தோல்வி இல்லை என்பதை எப்படிப் புரியவைப்பது?

வெற்றி என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பவற்றின் உண்மை நிலையை எடுத்துக் காட்டினால் தானே என்னால் வெற்றி என்ற ஒன்று இல்லை என்பதைச் சொல்ல முடியும்.

இதற்காக வெற்றி என்ன பதத்தை நான் பயன்படுத்தினால் உடனே வெற்றி இருப்பதாக ஒப்புக் கொண்டேனாக்கும்.

மஞ்சள் கண்ணாடி அணிந்து கொண்டு பார்ப்பதெல்லாம் மஞ்சள் நிறத்தில் இருப்பதாகக் கூறினால்?

கண்ணன் சொன்னார் எதை நீ எடுத்தாயோ அது இங்கேயே எடுத்தது அப்படின்னெல்லாம்… கண்மணியக்காவும் பால்ராஜா அண்ணாவும் சேர்ந்து வாதம் எல்லாம் பண்ணாங்க…

நான் ஒன்று கேட்க விரும்புகிறேன்…

ஐயா… நீங்கள் மகாபாரதத்தின் வெற்றி நாயகன் என்று சொல்லிக் கொள்ளும் அந்தக் கண்ணன் செய்த சகுனித்தனமான வேலைகள் எத்தனை?

அதற்கு நீங்கள் என்னதான் காரண காரியங்களைக் கூறிக் கொள்ளுங்கள்… தர்மம் அதர்மம் என்று ஆயிரம் காரணங்கள் கூறினாலும்…

கண்மணியக்காவைக் கேட்டால் கர்ணனிடம் வரத்தை வாங்கி… தேரைச் சாய்த்து இன்னும் அசுவத்தாமா பெயரைச் சொல்லி ஏதேதோ செய்து பாண்டவர் வெற்றிபெற வேண்டிய சூழலைக் கண்ணன் உருவாக்கியதால் வென்று விட்டார் என்று சொல்வார்கள்…

பால்ராஜ் அண்ணாவோ கண்ணன் தானே பாண்டவர்கள் வெற்றிபெற வேண்டிய சூழலை உருவாக்கிக் கொடுத்தான் அதைப் பயன்படுத்தி பாண்டவர்களின் வீரத்தால் வெற்றி பெற்றனர் என்று சொல்லுவார்.

ஆனால் எல்லோரும் மறந்து விட்ட ஒன்று இருக்கிறது…

தனது படைகளை கெளரவர்களுக்குக் கொடுத்து விட்டு

தான் பாண்டவர்களுக்கு உதவியாக போர்செய்து

தனது தன்னை நம்பியிருந்த தனது நாட்டு மக்கள் அழியத் தானே காரணமாக இருக்கிறார்.

இதை யாரும் கேள்வியாகக் கேட்டுவிடக் கூடது என்பதால் அதை வெற்றி என்ற மாயையால் மறைத்து விடுகிறார்.

(இங்கே நான் கண்ணனை ஒரு அரசன் என்ற அடிப்படையிலேயேப் பார்க்கிறேன். எனவே கடவுள் மதம் தொடர்பான எந்த விவாதமும் இங்கே தேவையற்றது…)

இப்படி எந்த வீரபுருசர்களின் வரலாற்றை எடுத்தாலும் அதில் மறைக்கப்பட்ட அவதூறுகள்.. அதிகார வெறி… ஆர்ப்பரிப்புகள் எண்ணிலடங்கா..

கண்மணியக்கா சொன்னாங்க…
தீப்பெட்டி தீக்குச்சி எல்லாத்துக்கும் எத்தனையோ பேரோட வெற்றி காரணமாயிருக்குண்ணு…

அது வெற்றியல்ல…. உழைப்பும், சிந்தனையும் அனுபவத்தால் கிடைத்த அறிவுகளும்.

தனது பசிக்காக கைக்கு எட்டாமல் தொங்கிக் கொண்டிருக்கும் கனியைக் கொய்ய கல்லையோ அல்லது உடைந்த குச்சியையோ எடுத்து எறிந்தும் அடித்தும் பறிக்கத்துவங்கிய நாளிலிருந்தே மனிதனின் அறிவும் சிந்தனையும் வளரத்துவங்கிவிட்டது.

அந்த சிந்திக்கும் ஆற்றலும் அனுபவம் கொடுத்த அறிவும் இணைந்து மனிதகுல வரலாற்றின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கிறது.

ஒரு செடி வளர்கிறது ..

ஒரு மலர் மலர்கிறது

ஒரு குழந்தை வளர்கிறது

இப்படித்தான் சொல்கிறோமே தவிர

ஒரு செடி வளர்ந்து மரமாவதை… செடி வெற்றி பெற்று விட்டது என்று யாரும் சொல்வதில்லை..

இங்கே வளர்ச்சி என்ற பதம் தான் பயன் படுத்துகிறோமேத் தவிர வெற்றி என்ற பதம் அல்ல .. அது தான் இயல்பானது.

இங்கே கண்மணியக்கா வந்து சொல்லலாம் இயற்கையின் பல்வேறு நியதிகளை கடந்து அந்தச் செடி வளர வேண்டியிருக்கிறது போராட வேண்டியிருக்கிறது அதனால் அது வெற்றி என்று…

வாதத்திற்குத் தான் அது பயன்படுமேயன்றி அது இயல்பு அல்ல…

செடி வளர்கிறது என்பது தான் இயற்கை .. இயல்பு.

கண்மணியக்கா எப்படி வாதத்திற்காக செடி வெற்றி பெற்றது என்று பல காரணங்களைக் காட்டிச் சொல்ல முயல்கிறார்களோ அதே போல் தான் சமுதாயத்தில் தன் கொளரவத்தையும் அதிகாரத்தையும் பலத்தையும் காட்டிக் கொள்ள நடத்தப் படும் நாடகமே வெற்றி என்பதும்.

எந்த விளையாட்டையும் எடுத்துக் கொள்ளுங்கள்…

ஒலிம்பிக்க்கில் கூட…

எத்தனை நாடுகள் அதை விளையாட்டாகப் பார்க்கின்றன.

சமீபத்தில் சீனாவில் நடந்த ஒலிம்பிக்கில் எல்லாப் பதக்கங்களையும் தாங்களே வாங்கி விடவேண்டும் என்ற முனைப்பில் தாங்கள் தான் பெரியவர்கள் என்பதைக் காட்ட வேண்டும் என்ற அதிகார வெறியில் மனித உரிமைமீறல்கள் எத்தனையோ செய்த சீனாவை உலக நாடுகள் கண்டித்ததும் நமக்குத் தெரியும்.

இங்கே விளையாட்டு விளையாட்டாகவா இருக்கிறது?

ஒலிம்பிக்கில் பெரும் பதக்கங்களைப் பெற்றுத் தங்கள் நாட்டுப் பெருமையை, தாங்கள் தான் பெரியவர்கள் என்ற ஆதிக்கத்தைக் காட்டுவதற்கு உருவாக்கிக் கொண்டவையே.. வெற்றி என்பதும் பதக்கங்கள் என்பதும்.

மனிதன் விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்த நேரத்தில் அவனுக்கு உடலில் வலு தேவைப்பட்டது. வேகமாக ஓடவும், தாவிக் குதிக்கவும் , ஈட்டி எறியவும் என… இது வாழ்வின் தேவை…

தான் அனுபவத்தில் கற்றுக் கொண்டதை தனது குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கிறான் இதற்காக உருவானது பயிற்சி.

இதையேப் பொழுது போக்கிற்காகவும் செய்யும் போது விளையாட்டுக்களாக மாறியது…

இதில் வெற்றியைப் புகுத்துவதால் இன்னும் விளையாடுபவர்கள் ஊக்கமாக ஆடுகிறார்கள்..
வென்றவனுக்குப் பாராட்டு பரிசு என்ற ஒரு மாயையைப் புகுத்தி…

விளையாடுபவர்கள் அனைவரையும் அந்த வெற்றியை நோக்கி ஓடச் செய்வதன் மூலம் பார்வையாளர்களுக்கு நல்ல பொழுது போக்கு கிடைக்கிறது.

ஆனால் விளையாட்டு மட்டும் வாழ்க்கையல்ல…

விளையாட்டில் பெருவெற்றி பெற்றாலும் வாழ்வில் அடிப்படைத் தேவைகள் கூட நிறைவுசெய்ய முடியாத நிலையில் தான் பெற்ற பதக்கத்தை விற்று சாப்பிடும் எத்தனையோ வீரர்களின் வாழ்க்கை… வரலாறுகள் பெரும் சோகம் நிரம்பியவை.

இவர்கள் வாழ்வில் வெற்றிபெற்று விட்டார்களா?

இவர்கள் அனைவரும் இவர்களுக்குத் தெரியாமலே வாழ்வில் வெற்றி என்ற மாயைக்குப் பலியாடுகளாக்கப் பட்டார்கள் என்பதே நிஜம்.

வரலாற்றில் வாழ்பவர்கள் தான் வெற்றிபெற்றவர்கள் என்றுச் சொன்னார்கள் கண்மணியக்கா…

வரலாற்றில் வாழ்பவர்கள் வெற்றி பெற்றவர்கள் இல்லையக்கா..

சாதனை புரிந்தவர்கள்

தியாகம் செய்தவர்கள்

அல்லது பெருங் கொடுமை செய்தவர்கள்…

அறிவியல் அறிஞர்கள்….

மருத்துவ வல்லுநர்கள்..

இன்னும் மனிதகுல வளர்ச்சிக்காக வாழ்ந்தவர்கள்…

சக்கரத்தைக் கண்டறிந்த அடையாளம் தெரியாத மனிதனிலிருந்து இன்னும் பலப்பலக் கண்டுபிடிப்புகளால் மனித வாழ்க்கைக்கு வளம் சேர்த்தவர்கள் .. அனைவரும் சாதித்தவர்கள். தங்களது அறிவைப் பயனபடுத்தியவர்கள்.

உங்கள் கரங்களை அசைப்பது எத்தனை சாதாரணமானச் செயலோ அதேபோல் தான் மனிதகுல வளர்ச்சிக்காக (அ) வீழ்ச்சிக்காக ஒவ்வொரு நாளும் எத்தனையோ பேர் தங்கள் அறிவையும் வாழ்க்கையையும் அர்ப்பணிப்பது அது வெற்றியல்ல..

வரலாற்றில் தங்கள் பெயரைப் பொறித்தவர்கள் சிலர் ஆனால் பொறிக்காமல் பலச் சாதனைகளைச் சத்தமில்லாமல் நிகழ்த்திவிட்டு மாண்டவர்கள் பலர்.

அப்படியிருக்க வரலாற்றில் வாழ்பவர்கள் வெற்றிபெற்றவர்கள் என்ற வாதமே அடிபட்டுப் போய்விடுகிறது அல்லவா?.

வரலாற்றில் பெயர் குறிப்பிடப்படாத பலரும் பலவித வளர்ச்சிகளைச் சேர்த்துள்ளனர்.

நமது தமிழ் மொழியை எடுத்துக் கொள்வோம்….

பழைய நூலான தொல்காப்பியத்துக்கு முன்பே பல நூல்கள் இருந்திருக்கின்றன.

திருவள்ளுவர் பெயர்கூட ஒரு கற்பனையே… அறுதியிட்டுச் சொல்ல இயலாதது.

இன்னும் எத்தனையோ அறிஞர்கள் தங்கள் தங்கள் பங்களிப்பால் வளர்த்த மொழி…

வார்த்தைகளை உருவாக்கியது யார்?

இலக்கணங்களை உருவாக்கியது யார்?

எத்தனை எத்தனையோ நாட்டுப் புறக்கலைகள்… பாடல்கள்…

உருவாக்கியது யார் என்பது தெரியாமலேயே.. வளர்ந்து வரவில்லையா…

கலைகள் ஆனால் என்ன?

கவிகள் ஆனால் என்ன?

இவை ஒவ்வொரு மனிதர்களின் சாதனைகள்….

மனிதகுலத்தின் வளர்ச்சியில் அவர்கள் அளித்த பங்கு…

இதற்கும் வாழ்வின் வெற்றிக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை…

வெற்றி என்று மனித வரலாற்றில் நினைவு கூறப்படுபவை எல்லாம்…

மண்ணாசை பெண்ணாசை பொன்னாசையால் விளைந்தப் பூசல்களும் … போர்களும் அவற்றின் முடிவுகளும் மட்டுமே.

இதுவல்லாமல் மனிதனின் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் வெற்றி என்று

கொண்டாடப் பட்டிருக்குமானால் மனிதகுலம் ஒவ்வொரு பொருளைக்

கண்டுபிடித்தவனையும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

ஆக வெற்றி என்பது இடையில் ஏற்பட்ட மாயையே தவிர நிரந்தரம் அல்ல.

மனித வாழ்க்கையில் வெற்றி என்பது எதுவுமே இல்லை…

மனிதன் தன் இயல்புக்குத் தகுந்தபடி வாழ்கிறான்…

தன் அனுபவங்களையும் அறிவையும் சிந்தனைத் திறனையும் பயன்படுத்தி வாழ்கிறான்.

பிறவிலங்குகளைப் போலவே தான்…

ஒரே வித்தியாசம் அவனது அறிவை வளர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தாமல் இதுபோன்ற வெற்றி தோல்வி… என்ற மாயையை உருவாக்கி தனிமனித வளர்ச்சிக்கும் தனிமனித அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் பிறரை அடிமைப்படுத்தவும் உருவாக்கிக் கொள்கிறான். இதைவைத்து அவன் செய்யும் தீயச்செயல்களையும் மறைக்கிறான்.

ஒட்டுமொத்த மனிதச் சமுதாயத்திற்கு வெற்றி தோல்வி என்ற ஒன்றே தேவையில்லை…

வெற்றி தோல்வி என்பது மனிதகுலத்தைப் பிளவுபடுத்தி வீழ்ச்சிக்கு அடிகோலுமேயல்லாமல்

அதனால் எந்த வளர்ச்சியுமில்லை…


மனிதனுக்கு வாழ்வு என்பது இயற்கை கொடுத்த வரம் அங்கே வெற்றி என்பது எதுவுமே இல்லை..

வெற்றி இருப்பதாகச் சொல்வது கண்மணியக்கா போன்ற அறிவு ஜீவிகள் கட்டிவைத்த கட்டுக்கதையே அன்றி வேறெதுவும் இல்லை…

வாய்ப்புக்கு நன்றி… வணக்கம்.
 
ஒவ்வொரு ஆளும் பேசி முடிச்சதும்.. அவங்க சொல்றதுதான் சரின்னு நம்பளை நம்ப வைக்கிற அளவுக்கு ஆணித்தரமாகவும் ஆதாரமாகவும் பேசுறாங்கப்பா...!! கடைசியில இப்ப யார் சொன்னது சரின்னு அமருதான் வந்து அமர்ந்து தீர்ப்பு சொல்லோனும்..?!
 
அந்தக்காலத்தில் வெள்ளித்திரை கண்ட புராண இதிகாச*ங்களில் போர் நடக்கும் காட்சி காண்பதுக்கு அழகாக இருக்கும். கந்தன் கருணை என்று நினைக்கிறேன். இந்தப்பக்கம் முருகப்பெருமான் நிற்பார். அந்தப்பக்கம் சூரபத்மன் பரிவாரம் நிற்கும். வேலன் வேலேவ* சூரன்குழு பலவகை ஆயுத தளபடங்களை ஏவ விண்ணில் வேடிக்கை காட்டுவார்கள். எரியும் வேலைக் காட்டுவார்கள். பிறகு அனல்கக்கும் அம்பைக் காட்டுவார்கள். பிறகு மறுபடியும் வேல்.. மீண்டும் அம்பு. இப்படி மாறி மாறிக் காட்டி கடைசியில் இரண்டும் மோதி வெடிப்பதைக் காட்டுவார்கள். அப்போது அதைக் கண்டு கைகொட்டி இருக்கிறேன்.

பிறகு கொஞ்ச வயசு கூடினப்பிறகு கர்ணன் படம் பார்த்தேன். பாரதம் தொடங்கும். தேர்களும் குதிரைகளும் காலாட்படையும் களத்தை நிறைக்கும். கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் சண்டை தொடங்கும். காண்டீபத்திலிருந்து அம்பு புறப்படும். கர்ணனின் வில்லிலிருந்தும் அம்பு புறப்படும். அர்ஜுனரு அம்பு.. கர்ணரு அம்பு என்று மாறி மாறிக் காட்டுவார்கள். அதில ஒன்றிரண்டு பாதியில உருவம் மாறும்.. பாம்பாக மாறும்.. கருடனாக மாறும். இப்படி ஏதேதோ உருவம் கொள்ளும். அதை எல்லாம் கண்கொட்டாமல் வாய் பிளந்து பார்த்தது சின்னத்திரை இதிகாசங்களையும் புராணக்களையும் பார்க்கும் போது ஞாபகம் வரும். அதே போன்றதொரு நிலையில்தான் இப்போதும் நான் இருக்கிறேன். முத்தரப்புக் கணைகள் மோதி, முறிந்து, மாறி ஜாலம் காட்டியதில் மனம்மயங்கி நிற்கிறேன் சிறுவனாக. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட கதை வேறு நினைவுக்கு வருகிறது. எடுத்தததுதான் எடுத்தாச்சு பால் சிந்தினாலும் குருதி சொட்டினாலும் காவடியை ஆடி முடிக்கத்தானே வேண்டும்.

இன்றைக்கு விட்டால் இனிமேல் நேரம் கிடைக்காத என்ற சூழலில் நடுவர் என்ற ரீதியில் தீர்ப்புச் சொல்லவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. நான் இப்படிச் சொன்னதும் கன்மணி, சோதிகள் மனமகிழ்வார்கள். திடீரென ஒருத்தர் முந்தோன்றி அஞ்சு மணிக்கு வேலை முடிஞ்சு ஆறுக்கு வீட்டுக்கு வந்து பத்துக்கு உறங்கப் போகிற நேரத்துக்குள் தீர்ப்புச் சொல்லலாமே என்றார். யாருடா அவர் என்று கூர்ந்து பார்த்தால்.. வேறு யார்.. நம்ம பால்ராசுதான். அய்யனாராட்டம் நிற்கிறாரு. ஏன் வீண்சோழி. பேசாமால் ஒளிந்து விடலாம் என்று பர்த்தால் எலேய் இது ஒன்றும் வாழ்க்கை இல்லை. வெற்றி தோல்வி அறிவிக்காமல் விட.. பட்டி மன்றம்தான்.. கண்டிப்பாக தீர்ப்புச் சொல்லியே ஆகவேண்டும் என்று பங்காளி செல்வாவும் மதுர அண்ணனும் முண்டாசு கட்டுறார்கள். இப்போது நான் எந்த நிலைப்பாட்டில் இருக்கேனோ அந்த நிலைப்பாட்டில்தான் பட்டிமன்ற முடிவும் இருக்கிறது.

முடிவுக்கு வரும் முன் முதலுக்குப் போவோணும். தங்கி தொண்டையில் முள்ளாகத் தங்கி கண்மணி வாயிலாக தண்ணியைத் தருகிறது. எங்க தங்கி இருக்கீங்க என்று கேட்பது போன்ற கருத்தில் தங்கியை தங்க வைக்கவில்லை தலைப்பில். தொலைக்காட்சியை திறந்தால் நமீதாவும் ரம்பாவும் பேசு தமிழ் சுவைத்து சௌவைத்து நாக்குழறி காரணம் என்பதுக்குப் பதிலாக தங்கி வந்து தங்கி விட்டது. மன்னிக்க..

வாழுதல் என்றால் என்ன? உயிருடன் இருத்தலா? உயிரற்ற பிறகும் உயிருடன் இருத்தலா? தோமஸ் அல்வா எடிசன் இன்றைக்கு எல்லா வீடுகளிலும் வாழ்கிறார். தனது பெயரை அழிக்க முடியாத படி வலராற்று ஏடுகளில் எழுதியுள்ளார். காற்றில் தன் பெயரைக் கரைத்துள்ளார். இப்படி எல்லாம் தான் புகழுற வேண்டும் என்ற நினைப்பில் அவர் ஆய்வுகள் செய்தாரா.. இல்லை எதைப்பற்றியும் யோசிக்காமல் ஆய்வுகள் செய்து வென்று இந்நிலைப்பில் இருக்கிறாரா. இவரே எத்தனை தடவை தோற்றிருக்கிறார். இவரைப் போல் எத்தனையோ பேர் வேறு விடயங்களில் தோற்றுள்ளார்கள். அந்தத் தோல்வியிலிருந்து வேறு ஒருவர் வெற்றி பெற்ற சரித்திரம் நம்மிடையே இல்லையா. அப்போ வேற்றி தோல்வி வாழ்க்கையில் உள்ளது என்று நிரூபணம் ஆகின்றது என்று ஆணித்தரமாகச் சொல்லி இருக்கிறார்கள் பாரா அவர்களுடம் கண்மணி அவர்களும் பரஞ்சோதி அவர்களும்.

இந்த ஊட்டில் புகுந்து நீள அகலம் அளந்தால் ஒருவனுடைய தோல்வி இன்னொருவனுடைய வேற்றிக்கு வழி சமைத்திருக்கிறது. இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மேதைகளில் பலர் தம் மூதாதையருடைய தோல்விகளிலுருந்து தொடங்கி சிகரம் தொட்டவர்கள்தான். அப்படிப் பார்த்தால் அவர்களை எப்படி வெற்றியாளர்கள் எனக்கொள்ள முடியும். வெற்றிகளுக்கு எப்படி அவர்கள் சொந்தங் கொண்டாடலாம்? தோல்வியாளர்கள் எனப் பட்டியல்படுத்த இயலும். இன்னும் கொஞ்சம் ஆழம் போனால் வென்றவர்கள் தோற்ற சம்பவங்கள் எத்தனையோ உளதே. அப்படி இருக்க சம்பவக்கோர்வைகளாலான வாழ்க்கையில் எப்படி வெற்றி தோல்வி இருக்கும். என்று திறமையாக வாதாடினார்கள் செல்வாவும் மதுரமைந்தன் அவர்களும். ஆனால், மரணம் தாண்டியும் வாழ்பவர்கள் மரணத்தை வென்றவர்கள். ஆக இவர்கள் வாழ்க்கையை வென்றவர்கள் என்று அடித்துச் சொல்லத் தவறி விட்டார்கள். வாழ்க்கையில் வென்றிருக்கிறார்கள் என்று எதிர்ப்பக்கச் சார்பு செய்திருக்கிறார்கள்.


மனித உடலின் நரம்பு மண்டலம் இரு பெரும் கடத்தல்களை செய்கிறது. தூண்டலையும் துலங்கலையும் தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி இச்சையுடனோ இச்சை இன்றியோ உடலுக்கு இயக்கத்தைக் கொடுக்கிறது. வாழ்க்கையில் நாம் கடந்து வரும் நாம் கடத்தும் வாழ்க்கையும் அத்தகையதுதான். இந்தப் புள்ளியில் இழுவை 'ஆரம்'பிக்கிறது.

தூண்டல் எங்கிருந்து கிடைக்கிறது. அகத்திலிருந்தா? புறத்திலிருந்தா? இந்தக்கேள்விக்கு சின்னப்பிள்ளையும் பதில் சொல்லும் இரண்டிலும் இருந்து என்று. சின்னப்பிள்ளைகளே சொல்லும் போது நம்ம வல்லுன நண்பர்கள் சொல்ல மாட்டார்களா.. அவர்களும் சொல்லி இருக்கிறார்கள். அதிகமாகச் சொன்னவர் பால்ராசு. அது மட்டுமல்லாமல் துலங்கல் தனிஒருவன் திறனால் காண்பிக்கப்படுகிறது என்றும் மிகவலுவாக வாதங்களை ஊன்றி இருக்கிறார்.

இதையே கவசமாக்க்கி கவசத்தை ஆயுதமாக்கி உந்துதல் கொடுத்ததும் மூலதனம் தந்ததும் ஊக்கம் கொடுத்ததும் சூழல் என்று எதிர்வாதம் செய்திருக்கிறார்கள் கண்மணி அவர்களும் பரஞ்சோதி அவர்களும்.

முன்னர் எடிசனைப் பார்த்தோம். அவரையே இங்கும் எடுத்துக்காட்டலாம் ஆனாலும் காந்தியை இங்கே இழுப்போம். அகிம்சையே வலிமையான ஆயுதம் என்று காந்தியை எண்ண வைத்தது எது? அவருடைய எதிரிகளா? அவருடைய நண்பர்களா? அவருடைய சிந்தனையா?

இன்றைய காலத்தில் காந்தி இருந்தால் வெற்றி அடைந்திருப்பாரா. அந்த மாதிரியான சூழல் இப்போது இல்லவே இல்லை. காந்திக் காலத்தில் இளகிய மனதுடையோருக்குப் பதிலாக வேறு ஒருவன் இருந்திருந்தால் காந்தியின் வெற்றிக் கனவு வண்ணம் கொண்டு விண்ணைத் தொட்டிருக்குமா என்பதும் சந்தேகமே. ஒவ்வொருவருக்கும் சுதந்திர வேட்கை என்ற இயங்குவிசை இல்லாவிட்டால் அதை ஒருங்கிணைக்கும் இயங்குதளச் சூழல் இல்லாவிட்டால் காந்தியின் சுதந்திரப் போராட்ட வெற்றி எட்டாக்கனியாகவே இருந்திருக்கும்.

ஆக வாழ்க்கையில் வெற்றி தோல்வி உள்ளது. அதற்குச் சூழலும் அவனும் காரணம் என்று வாதங்களின் அடிப்படையில் தீர்ப்புச் சொல்லி ஒத்துழைத்த அனைவருக்கும் நன்று கூறி விடை பெறுகிறேன்.

வணக்கம்.
 
Last edited:
வாதப்பிரதிவாதங்களை அலசிச் சொல்லப்பட்ட தீர்ப்பில் சிலருக்குத் திருப்தி இல்லாமல் இருக்கலாம். சிலர் தொடர்ந்து கருத்தாட விரும்பலாம். நான் கூட விரும்பலாம். எனவே இதை ஒட்டிய புதிய மன்றம் மேன்மிறையீட்டுக்காக மக்கள் தீர்ப்புக்காக திறக்கப்பட்டுளது.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21484
 
என்னைப் பொறுத்தவரை இதுதான் முதல் முறை இத்தகைய ஒரு களத்தில் வாதாடுவது என்பது.

இத்தகைய ஒரு களத்தை அமைத்துத் தந்த மன்றத்திற்கு எனது நன்றிகள்.

கூடவே வெட்டியும் ஒட்டியும் விவாதித்த மன்ற உறவுகளுக்கும் எனது நன்றிகள்.

சிறப்பாக நடுவர் பணியாற்றிய பங்காளி அமரனுக்கும் எனது நன்றிகள்.

எல்லாவற்றிற்கும் மேலாக... உடனுக்குடன் உங்கள் விமர்சனங்களைப் பதிந்து ஊக்கமூட்டிய மன்ற உறவுகளுக்கு பலப்பல நன்றிகள்.
-------------------------------------------------------------------------
அப்படியே அடுத்த நடுவரை அழைக்கலாமே... அமரன்

எனக்கென்னமோ நம்ம பாஸை அழைக்கலாம் எனத்தோன்றுகிறது....
என்ன சிவாஜி அண்ணா நான் சொல்றது சரிதானே...?
 
அருமய்ய்யாய் நடத்திச் சென்ற நடுவருக்கு வாழ்த்துக்கள்..
என்னைப் பொறுத்தவரை சற்றே மாறுபட்ட அல்லது முரண்பாடான கருத்துக்களைக் கூறும்போது தலையில் நச் என்று ஒரு குட்டு விழும்.. இது திருமணமான நாளில் இருந்து நடந்து கொண்டிருக்கிறது...

இதற்கு மகுடம் சூட்டுவதுபோல பல இடங்களிலும் நடப்பதால், இந்தக் களம் மாற்றுக் கருத்துக்களையும் சில தத்துவங்களையும் சுதந்திரமாக சொல்வதற்கு அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி...
 
பிரமாதம்!!!!!

வாதப்பிரதிவாதங்களாகட்டும், அதற்கான அவர்களது உழைப்பாகட்டும், அதனை சரளமாய் எழுதி, மேடைப் பேச்சு போன்றே ஒரு அருமையான தோற்றத்தைத் தந்ததிலாகட்டும்....அனைத்திலுமே பங்காளர்கள் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

தன் திறமையும், நன்றாய் அமைந்த சூழலும் வெற்றியைத்தருமென்றாலும், அது ஒரு மாயத் தோற்றமே என எண்ண வைத்தது பேச்சாளர்களின் வெற்றி.

இடையிடையே தன் ஆழ்ந்தக் கருத்துக்களோடும், கனத்தை லேசாக்க சற்று நகைச்சுவையுடனும், பின் இறுதியில் அனைத்து வாதங்களையும் அலசி அருமையாய் தீர்ப்பு தந்த அமரப் பெருமானை வாழ்த்தி பாராட்டுகிறேன்.

அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
 
ஆக வாழ்க்கையில் வெற்றி தோல்வி உள்ளது. அதற்குச் சூழலும் அவனும் காரணம் என்று வாதங்களின் அடிப்படையில் தீர்ப்புச் சொல்லி ஒத்துழைத்த அனைவருக்கும் நன்று கூறி விடை பெறுகிறேன்.

வணக்கம்.

ஒரு வழியா முடிஞ்சுதா? சுகந் அண்ணா சொன்னமாதிரி ஒவ்வொருத்தருடைய வாதமும் அவர் சொன்னது தான் சரின்னு என்ன வைக்குதே அது எப்படி? நம்மாளுக திறமையானவுங்க தான்.... பின்னி பெடலேடுகுறாங்க.... செல்வா மகாபாரத காலத்துக்கே கொண்டு போய்ட்டாரு....

அருமையா தீர்ப்பு வழங்கின அமர் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்...:icon_b:

நடுவருக்கும் பரிசு கொடுக்கனுமில்ல......
 
குறைந்தது 100 பேர்களாவது ஆக்டிவ் ஆக இருந்தாலேயே பட்டி மன்றங்கள் சிறப்பாக இருக்கும்.
 
Back
Top