அனைவருக்கும் மீண்டும் வணக்கம்.....
மீண்டும் வாய்ப்பளித்த சூழ்நிலைக்கும் சம்பந்தப் பட்ட எல்லோருக்கும் நன்றி....
பட்டிமன்றங்களில் ஒரு சுவாரசியமான விஷயம், ஒருவர் வாதம் செய்து முடித்தவுடன் அவர் சொன்னது எல்லாம் சரி என்று கேட்பவர்களை நம்ப வைப்பது...
அடுத்தவர் வாதம் தொடங்கியவுடன் ஒவ்வொரு பாயிண்டும் தவிடுபொடியாகக் கூடும்..
அற்புதமான சூழல்.. சற்றே வெட்டியாக இருக்கும் வேளைகளில் தற்போதைக்கு குடும்ப சூழ்நிலையில் இருப்பதால் வழக்கமாகத் திரியும் மற்ற பல இடங்களுக்கு உலவ முடியாததால், இங்கு கொஞ்சம் அதிகமாகவே வந்ததில், தற்செயலாக பார்த்த பட்டிமன்றம்... கேட்டவுடன் கிடைத்த வாய்ப்பு... ஆழமாக நம்புகிற தலைப்பு.. எல்லாம் சூழ்நிலைதான் அமைத்துத் தருகிறது... ஆனால் கால் மேல் கால் போட்டுக் கொண்டு ஹாய்யாக உட்கார்ந்து கொண்டிருந்தால் வாதங்கள் வந்து விடுமா?? இருக்கிற தம்மதூண்டு மூளையைக் கசக்கி விரல் நுனிகளை விசைப்பலகையில் தவழ விட்டு ஒவ்வொரு வாதத்தையும் எழுதிக் கொண்டிருக்கிறவன் "நான்" அல்லவா?? சீனத்தில் சுவர் நீளத்துக்கு ஒரு சூழல் கோட்டையை உருவாக்கியிருக்கிறார் கண்மணி.. அவருக்குக் கிடைத்த சூழலை நன்றாக பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்... அவரது வாதங்களை உருவாக்கியிருப்பது "அவர்" .... சூழ்நிலை அல்ல...!! எனவே சூழ்நிலைகள் சில வாய்ப்புக்களை உருவாக்கித் தருமே தவிர அதை உபயோகிப்பதும் உபயோகிக்காமல் இருப்பதும் "அவரவர்" கைகளில் .. அல்லது மனதில் அல்லவா உள்ளது??
'வேற்றுமைகளில் ஒற்றுமை' .. அடிக்கடி கேட்கும் ஒரு வாக்கியம்... ஆனால் இங்கு நான் காணும் 'ஒற்றுமைகளில் வேற்றுமை'.. அதாவது ஒரே விஷயத்தை மேற்கோள் காட்டி பல வித வித்தியாசமான தீர்வுகளை அளித்திருப்பது பிரமிக்க வைக்கிறது..குட்டிக் கதைகளைக் கூறி போதனைகளைக் கூறுவது பல பெரியவர்களின் வழக்கம்.. தென்கச்சி கோ சுவாமிநாதன் ஒரு நல்ல உதாரணம். ஆனால் பட்டி மன்றங்களிலும் பல இடங்களிலும் கதைகளை வைத்து பல விதமான வியாக்கியானங்களைத் தரும்போது சற்று சிந்திக்க வைத்து விடும்..
பலரும் பல முறை கேட்டிருக்கக் கூடிய ஒரு 'புட்டி'ப் பாட போதனை.
இரண்டு செடிச் சட்டிகளை எடுத்துக் கொள்ளவும்
ஒன்றில் தினமும் ஒரு குவளை தண்ணீர் ஊற்றவும்.
அடுத்த சட்டியில் தினமும் 90 சிசி டாஸ்மாக் ஊற்றவும்.
சில நாட்கள் கழிந்து என்ன நடந்திருக்கும்?? தண்ணீர் ஊற்றிய செடி நன்றாக வளர்ந்திருக்கும். டாஸ்மாக் ஊற்றிய செடி வாடிப் போயிருக்கும்..
இதில் இருந்து என்ன தெரிகிறது...?? மாரல் ஆஃப் தி ஸ்டோரி..
"தினமும் சற்று டாஸ்மாக் வயிற்றில் ஊற்றா விட்டால், வயிற்றில் செடி வளரும்"
சோம பானம் தாவரநாசினி என்பதும் ஓரளவுக்கு அறிவியல் ரீதியில் உண்மையும் ஆகும் என்றும் வாதாடுபவர்களும் இருக்கக் கூடும்.
நடுவர் சார்... ஜாக்கிரதை.. ஊற்றிக் கொடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் அவ்வப்போது 'உள்ளே'யும் கொஞ்சம் ஊற்றிக் கொள்வது சாலச் சிறந்தது..
இப்படித்தான் பல வாதங்களும் அமைந்திருக்கின்றன.. நமது 'வெற்றி தோல்வி' பற்றிய விவாதங்களிலும்... சில விஷயங்களை பிரித்துப் பின்னலாம்... பல விஷயங்களையும் 'திரி'த்தும் பின்னலாம்... !! தவறான லாஜிக்குகளை வைத்து என்னமா வாதாட்றாங்க நம்ம மக்கள்ஸ்...!!!
சரி.. இனி உள்ளே செல்வோம்....!!
வெற்றி தொல்வி இல்லை என்ற கட்சி எனக்குக் கொடுக்கப் பட்டிருந்தால், சும்மா நச்சுன்னு மூன்றே வரிகளில் முடித்திருப்பேன்."வெற்றி தோல்வி என்பது இல்லை.. அதானால் வேறு ஒன்றும் பேசுவதற்கு இல்லை.. நன்றி' என்று.....
இல்லாத ஒன்றை இல்லை என்று நிரூபிக்க இருக்கு என்று நறுக்குன்னு பல தடவை சொல்லி, பின்னர் இருக்கு ஆனால் இல்லை... அடடா... தலை சுற்றுகிறது....
சாதனையையும் வெற்றியையும் குழப்புகிறேன் என்ற வாதம் வைக்கப் பட்டிருக்கிறது.. குழப்புவதில் நான் மன்னன்.. அதிகம் குழப்பினால் தெளிவு பிறக்கும் என்பது எனது அனுபவம்.. ஸோ... ஒரு கை பார்க்கலாமா??
ஒரு வகுப்பில் 50 பேர் இருக்கிறார்கள்.. மதிப்பெண்கள் 40க்கும் மேல் பெற்றவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப் படுகிறார்கள். முதல் மூன்று அதிக மதிப்பெண் வாங்கினவர்கள் ராங்க் என்னும் சாதனை படைத்தவர்களாக கருதப் படுகிறார்கள். 40க்கு கீழ் மதிப்பெண் பெற்றவர்கள் வெற்றியைத் தவற விட்டவர்கள்.. அடுத்த வாய்ப்பில் வெற்றி பெற முடியும். சாதனை படைத்தவர்கள் வெற்றியாளர்கள் பட்டியலில் சேர்த்தி.. இங்கு 40 என்ற எல்லைக் கோடு சரியா தவறா? அல்லது கருணை மதிப்பெண்கள் கொடுப்பது பற்றி பல வித கண்ணோட்டங்கள் இருக்கக் கூடும். அந்தந்த விஷயத்தைப் பொறுத்தவரை இவற்றை மாற்ற வேண்டிய சூழ்நிலை உண்டாகலாம்.. ஆனால் வெற்றி தோல்வி என்று ஒன்றில்லை என்ற விதத்தில் பார்த்தால், எல்லாமே வெற்றிடம் ஆகிவிடும். இது பரீட்சையில் மட்டும் அல்ல அன்றாட வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நடப்புகளிலும் செயல் படுகிறது.
இன்னும் குழப்பிக் கொண்டே போகலாம்... ஆனால் இங்கு பட்டி மன்றத்தின் தலைப்பு "வெற்றி தோல்வி என்று ஒன்று இருக்கிறதா இல்லையா??" இருக்குது என்றால் நம் உள்ளேயா .?. வெளியேவா.??. (சூழல்).. என்பதே.. அப்படிப் பார்க்கும்போது "இல்லாத' ஒன்றைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட அல்லது வாதித்துக் கொண்டிருக்க வேண்டும்..??
இல்லாத வாதிகள் கூறிக் கொண்டிருப்பது .... "இருக்குது.. ஆனால் அது அநியாயம் ....அதனால் அது இல்லை..." என்ன லாஜிக் சார் இது..? இது இங்கு மட்டும் இல்லை.. பல இடங்களிலும் நான் கண்கூடாக கண்டுகொண்டிருக்கும் ஒரு வாதம்.. "வெற்றி எது ..? தோல்வி எது..." என்று கேட்டு ஸேம் ஸைட் கோல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது.. அலெக்சாண்டர், ராஜபக்ஷே, அமெரிக்கா-இராக், இந்தியா-பாக்கிஸ்தான்.. எல்லாமே சரித்திர நிகழ்வுகள்.. உலகத்தில் எங்கோ எந்த மூலையிலோ நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள்...
ஒரு புலியின் வெற்றி மான் குட்டியின் தோல்வியாகலாம்...! எனது வெற்றி எனது நண்பனின் தோல்வி ஆகக் கூடும்..! நான் விட்டுக் கொடுத்தால் அவன் வெற்றி ஆகக் கூடும்.. விட்டுக் கொடுத்ததால் எனது வெற்றியாகவும் கருதலாம்.. நான் சாப்பிடும் பிரியாணி ஆட்டுக் குட்டியின் அல்லது கோழியின் தோல்வி.. ?? இவை எல்லாம் காட்டுவது ஒருவருக்கு வெற்றி என்பது மற்ற கோணத்தில் தோல்வியாகப் படலாம் என்பது.
இங்கு வெற்றி என்பது ஒருவனை முந்துவது அல்லது ஒரு இலக்கு என்பதை அடைவது என்ற குறுகிய கண்ணோட்டத்தில் வெற்றி - தோல்வியைப் பார்ப்பதால் தோன்றும் குழப்பமே.
நான் பேசிக்கொண்டிருக்கும் வெற்றி எனும் மன நிலை ... "எனது வெற்றி..." அது என் கையில்.. ஊரான் வீட்டுக் கையில் அல்லது நெய்யில் அல்ல .... அதாவது மற்றவர்களிடமோ சூழ்நிலையிலுமோ அல்ல என்பதே..
நாம் பிறந்தது வெற்றி.. அதன் பின்னர் விடும் ஒவ்வொரு மூச்சும் வெற்றி... மூச்சுப் போச்சு என்ற பின்னர் மரணமும் வெற்றி... எதற்காக வெளியே தேடவேண்டும்...? அல்லது மாயை என்று நினைக்க வேண்டும்...?? எல்லாமே நம் ஒவ்வொருவரின் 'உள்ளில்' அல்லவா இருக்கிறது...?
வெற்றி தோல்வி பற்றி எனது முதல் வாதத்தில் நான் குறிப்பிட்டிருந்ததை மீண்டும் ஒரு முறை நினைவு கூற விரும்புகிறேன்... வெற்றி தோல்வி என்பது இல்லாமல் இருந்திருந்தால் .இந்த சொற்களே புழக்கத்தில் இருக்காது.. வெற்றி தோல்வி என்பவை தூசுக்கு சமானம் என்று கருதும் மன நிலை.. ஆன்மீகத்தில் ... ஒரு வித நிர்வாண நிலையில் மட்டுமே சாத்தியம் என்று குறிப்பிட்டிருந்தேன்.. ஒரு விஷயத்தை அப்போது கூற விட்டு விட்டேன்.. ஆன்மீகம் என்பது infinity level என்ற நிலையாக இருக்கும் பட்சத்தில் சூன்யம்.. அல்லது வெற்றிடம்.. என்னும் ஒரு zero level-இலும் வெற்றி தோல்வியைப் பற்றி மறக்கும் அல்லது மரத்துப் போகும் நிலை உருவாகலாம்... உதாரணம்.. போதை, மயக்கம், புத்தி சுவாதீனம்...
நம்மைப் போன்ற சாதாரண மானுடர்கள் இந்த இரண்டு எல்லைகளுக்கு நடுவே அன்றாடம் பயணம் செய்து கொண்டிருக்கிறோம்.. இந்த நிலைகளில் வெற்றி தோல்விகள் நமது மன நிலையைப் பொறுத்தும் ஓரளவுக்கும் சூழ்நிலையைப் பொறுத்தும் அமைகின்றன.. எனவே வெற்றி தோல்வி அறவே இல்லை என்னும் வாதத்தில் சற்றும் அர்த்தம் இருப்பதாகப் படவில்லை .. அப்படி இருப்பதுபோன்ற தோற்றம் ஆன்மீகத்தின் உச்சியில் அல்லது சூன்யநிலையின் பாதாளத்திலே மட்டுமே என்று கூறி "இல்லாத வாதிகள்" இல்லாமல் போய்விட்டதால் அடுத்ததாக ....சூழல் கோட்டையைத் தாக்க முயல்வோம்.
=============================================================================
'பொய்மையும் வாய்மை இடத்த..." என்று வள்ளுவர் கூறுகிறார் என்பதறாக எல்லோரும் அளவில்லாமல் புளுகத் தொடங்கி விடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. இந்த உலகம் தாங்குமா...?? அதாவது 'புரை தீர்த்த நன்மை பயக்குமெனின்" என்ற அடை மொழியை மறந்து விட்டு....??
வள்ளுவர் கூற முயல்வது ஒரு விதி விலக்கு... Exception..... and Exceptions can not be made as Rules.. விதி விலக்குகள் விதிமுறைகள் ஆவதற்கு சற்று வாய்ப்பில்லை... பல இடங்களிலும் விதிமுறைகளையும் விதி விலக்குகளையையும் வைத்துக் கொண்டு 'சின்னப் புள்ளத்தனமா இல்ல இருக்கு..' என்ற விதத்தில் வியாக்கியனங்களையும் பார்க்கவும் அனுபவிக்கவும் நேர்ந்திருக்கிறது.. நிறுவனங்களில்....குடும்பங்களில்.....மன்றங்களில்.... எனவே அன்றாடம் நிகழும் செயல்பாடுகளை வைத்தே இம்மாதிரி விஷயங்களை ஆராய்வது சிறப்பாக இருக்கும்.
எனவேதான் துணுக்குறுகிறேன்... எப்போதாவது நிகழும் ஒரு சுனாமி.. அல்லது புயல்... நில நடுக்கம்.. (சில நாட்களுக்கு முன்பு எங்களுக்கும் அனுபவப்பட்டது..).. இவைகளை மட்டும் வைத்துக் கொண்டு சூழ்நிலைதான் நமது வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கின்றன என்று வாதாடுவது சுத்த அபத்தம்.. அப்படி என்றால் இன்றைக்கும் கடற்கரைக்கு யாரும் போக மாட்டார்கள்... தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி பேட்டிங் பௌலிங் செய்வதை விட்டு விட்டு வருண பகவானுக்கு யாகம் செய்வதையே குறிக்கோளாக வைத்துக் கொள்ள நேரிடும்.
எனவே முதலாவது சூழ்நிலை என்பது நாம் அன்றாடம் நேரிடும் சூழல்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்..
கறார்.. அல்லது காண்ட்ராக்ட்ஸ்.. எல்லாவற்றிலும் ஒரு முக்கியமான அம்சம் (?) .. Force majeure Clause என்று சொல்லப்படும் ஒரு பாரா ஹி ஹி நான் இல்லை.. Para .. அல்லது பத்தி...பக்கம் பக்கமாக எழுதி வைத்திருக்கும் கறார்களில் எங்கோ ஒரு மூலையில் சின்ன எழுத்துக்களில் பொறித்து இருக்கும் இந்த விஷயம் ...நமது பாதுகாப்புக்காக.. இந்தப் பதங்களின் அர்த்தங்களை மட்டும் வைத்துக் கொண்டு காண்ட்ராக்டுகளை நடைமுறையில் செயல்பட நினைத்தால் ஒரு மண்ணும் நடக்காது.. அது ஒரு இன்ஸுரன்ஸ் போன்றது.. இதுபோன்ற கெட்ட சூழ்நிலைகள் அன்றாட நடைமுறையில் நடக்காது என்ற ஆக்ககரமான நம்பிக்கையில் செயல்பட்டாலேயே காரியங்களை சுமூகமாகக் கொண்டு செல்ல முடியும்..
ஸோ.. அன்றாட வாழ்க்கையில் சூழ்நிலையா ... நான் எனும் நானா.??
சூழ்நிலைதான் தீர்வு என்றால் 'நான்' ஏன் இருக்கிறேன்... ??
கொஞ்சம் ஆழமாகச் சென்று குழப்பி கிளர முயலுவோம்...
அழகான பச்சை நிற ஊர்தி... வாட்69 புட்டி கலரில் உள்ள பாட்டில் க்ரீன் கலர் கார்.. அற்புதமான ஹார்ஸ் பவர்.. தொழில் நுட்ப ரீதியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.. பெட்ரோல் ஃபுல் டாங்க்... குளிர்சாதன அமைப்பு... மெல்லிசை தரும் ம்யூசிக் சிஸ்டம்... வெளியே.... நல்ல சாலைகள்.. சாலைப் போக்குவரத்து விளக்குகள்.. இரண்டு பக்கமும் கடைகள்.. அலுவலகங்கள்... எங்கு செல்வது என்பதை அறிவிக்கும் ஜிபிஎஸ் அல்லது மாப்பு... (வடிவேலுவின் "மாப்பு" அல்ல... Map...).. மிக்க அழகான சூழ்நிலை... என்ன வேண்டும் இதற்கு மேல்...??
இத்தனையும் ... (அதாவது இவ்வளவு அழகான சூழ்நிலையும் ) போதுமா...? இன்னும் கொஞ்சம் வேண்டுமா...??
ஆனால் இதை எல்லாம் வைத்துக் கொண்டிருந்தால் போதுமா.. நாம் நினைக்கும் இடத்திற்குச் செல்ல ஒரு ஓட்டுனர்.. ட்ரைவர் ... வேண்டாமா...??
கார் தானாக ஓடுமா?? அதன் இலக்கைத் தான் அடைந்து விடுமா??
வாழ்க்கைப் பயணத்தில் அற்புதமான அந்த ஓட்டுனர்தான் நமது ஒவ்வொருவர் உள்ளேயும் அமைந்துள்ள "உள் மனம்" நம்மை அன்றாடம் இயக்கிக் கொண்டிருக்கும் இஞ்ஜின்... தூங்கும்போதும் விழித்திருக்கும் போதும் ... கோபத்தில் இருக்கும் போதும் போதையில் இருக்கும் போதும்.. சில வேளைகளில் ஆட்டோ பைலட் போல இயங்கும் ... சில வேளைகளில் வெளியே வந்து அந்நியன் போல தாண்டவமாடும்...
காரை ஓட்டும்போது சாலை வளைவு வரும்போது (சூழல்) ஸ்டீரிங் வீலை சுழற்றுவது, வேண்டிய நேரத்தில் (சூழல்) கியர் மாற்றுவது, ட்ராஃபிக் சிக்னல் சிவப்பு விளக்கு காண்பிக்கும்போது (சூழல்) ப்ரேக் போட்டு நிறுத்துவது, இருட்டும்போது (சூழல்) ஹெட்லைட்ஸ் ஆன் செய்வது, மழை வரும்போது (சூழல்) வைப்பர் போடுவது... அடுக்கிக் கொண்டே போகலாம்.. இதை எல்லாம் செய்வது யார் சார்...??
விமானப் பயணங்களில் ஆக்ஸிஜன் மாஸ்க் டெமான்ஸ்ட்ரேஷன் செய்யும்போது ஏர்ஹாஸ்டஸ்ஸை சற்று உன்னிப்பாக பார்க்கும் தருணமாகக் கருதினாலும், பின்னணியில் அந்தக் குரலில்.. "உங்களுடன் குழந்தை இருந்தால் முதல் உங்களைக் கவனித்துக் கொண்டு பின்னர் குழந்தைக்கு மாஸ்க் மாட்டி விடவும்...; படிப்பினை:::: --> நான் வெற்றிகரமாக செயல்பட்டால்தான் என்னைச் சுற்றி உள்ளவர்களைக் காப்பாற்ற முடியும்.. நான் நன்றாக இருந்தால் என்னைச் சார்ந்தவர்கள், என் ஊர், என் நாடு நன்றாக இருக்கும்.
ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்து விட்டால் எல்லாம் முடிந்தது என்றால்.... ஹாஹ் ஹாஹ் ஹாஹ் என்பதை தவிர என்ன சொல்வது என்று விழி பிதுங்கி முழிக்கிறேன்..
வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர் நீச்சல்
என்று ஏன் பாடவேண்டும்.. ??
பேசாமல் சூழல் அங்கிழுக்குகிறது.. போனால் போகட்டும் போடா என்று கடலுக்குள் சென்று மூழ்கி விடுவோமா??
நாதஸ்வர ஓசை.. வள வள என்று கூறாமல் ஒரு திருமண வைபவத்தை மனதுக்குள் கொண்டு வரவும்.. பேரும் பதினாறும் பெற்று வாழுங்கள் என்று எல்லோருடைய ஆசிகள்... பின்னர் .. ஊதுபத்தி.. பால் பழம்... அற்புதமான சூழ்நிலை.. அதிகம் கூறவேண்டியதில்லை.. ஆனாலும் சம்பந்தப் பட்டவர்கள் மனதுக்குள் ஊக்கம் பிறந்து 'செயல்'பட வில்லை என்றால் இதற்கெல்லாம் அர்த்தம் ஏதாவது இருக்கிறதா??
அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட நினைத்து விட்டால்.. தொடங்கி விட்டால்.. இது ஒன்றும் இல்லாமலேயே நடக்க வேண்டியது நடந்தே தீரும் அல்லவா?? ஏன் இதைக் கூறுகிறேன் என்றால் ஜாதகம் பொருத்தம் நேரம் எல்லாம் பார்த்து செய்யப் படுகிற திருமணங்கள் பல வெற்றிகரமாகாத நிலையில் ஒன்றுமே இல்லாமல் இரண்டு + இரண்டு கையெழுத்துக்களில் நடந்த ஒன்றிணைப்புகள் நல்ல விதமாக சுமூகமாக நடக்கின்றன.. (ஹி ஹி..) இதுவும் மனதின் உள்ளில் இருந்து வரும் வெற்றிதான்... சூழல்களை எதிர் கொண்டு வெற்றி பெருபவர்களுக்கு வாழ்த்துக்கள்...
குதிரையைத் தண்ணீர் தொட்டி வரை கொண்டு போகவே முடியும்... இது சூழ்நிலையை அமைத்துக் கொடுப்பது..
அது தண்ணீர் குடிப்பதும் குடிக்காமல் இருப்பது குதிரையின் மனம் படியே நடக்கும்.. இதுதான் செயல்பாடு..
எந்த ஒரு நல்ல ஆசிரியரையும் கேட்டுப் பாருங்கள்... .. Learning is an Active Process... என்று கூறுவார்கள் ... அதாவாது... You can never teach a person.. one can only be helped to Learn..."
அதாவது
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக...
என்று சொன்னாலும் கற்பிப்பது என்பதின் இலக்கணம்.. கற்க உதவுவது என்பதே....!
கசடறக் கற்பவன் மனதில் இருந்தே அந்த ஊக்கம் கற்பதன் ஆசை அல்லது வெறி ...அதன் பயனாக ... வெற்றி உருவாகுகிறது... யாராலும் எதையும் கற்பிக்க முடியாது...சூழல் உற்பட... எல்லோரும் அனுபவிக்கிற சூழல்களில் இருந்து சிலர் மட்டும் கற்க அல்லது வெற்றியைக் காண்பதுவே இதன் சாட்சி.
சூழ்நிலைகள் அற்புதமானவை... இல்லை என்று சொல்வதில் அர்த்தமே இல்லை...
ஆனால் சூழ்நிலைகள் மட்டுமே... அல்லது பெரும்பான்மையாக நம்மை ஆட்டிப் படைக்கின்றன என்று கூறுவது... லாஜிக் பயங்கரமாக இடிக்கிறது.
அப்படி என்றால் ஒரே சூழ்நிலையில் எல்லோரும் ஒரே இலக்கு அல்லது தீர்வுக்குச் சென்றிருக்க வேண்டும்... அல்லவா...?
கண்மணி அக்காவின் சில வாதங்களைக் கடன் வாங்கிக் கொள்வோம்
எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
இப்போ "
நீ எடுத்து கொண்டாயோ"... "(நீ) கொடுத்தாயோ"...?? என்பதை நன்றாக உச்சரிக்கவும்.. இப்போ தெளிவா இல்லை...??
அது அங்கிருந்தது.......... நீ எடுக்கா விட்டால் யாருக்கும் உதவாமல் அங்கேயே இருந்திருக்கும்.....
எனவே "எடுத்து கொண்ட நீ" பாராட்டுப்பட வேண்டியவன்/ள்.
"கொடுத்தாயோ'...??? டிட்டோ.... ஸேம்...
வேறு ஒரு இடத்தில் .... கட் அண்ட் பேஸ்ட்...."அதாவது சூழலுக்கு ஏற்ப உயிரினங்கள்
தம்மை மாற்றிக் கொள்கின்றன." .. ஸோ தம்மை மாற்றி கொள்ளாத உயிரினங்கள் அழிகின்றன... யாரைப் பாராட்ட வேண்டும்?? சூழலையா?? மாற்றிக் கொண்ட உயிரினங்களையா..??
அடுத்தது....Quote: "100 மீட்டர் தூரத்தை 10 நொடியில் கடந்தார். இது வெற்றியா தோல்வியா? ....சிலர் 9 வினாடிகளில் ஓடி இருந்தால் அவர் தோற்றவர் ஆகிறார்.... etc " unquote. இப்போது சூழ்நிலையை ஆராய முயல்வோம்.. பெரிய ஸ்டேடியம்..ஆயிரக்கணக்கானவர்கள் இருந்து ஆர்ப்பரிக்கிறார்கள்.. நடத்துனர் ஒரு துப்பாக்கியை மேலே குறி பார்த்தபடி.. 'ஆன் யுவர் மார்க்... " என்றெல்லாம் சொல்லிவிட்டு "டுமீல்" என்று சுடுகிறார். எட்டுபேர் ஓடினால் அவர்கள் எல்லோருக்குமே ஒரே சூழ்நிலை.. ஆனால் காமெராவை Zoom செய்து கொண்டு முதல் வருபவரை உன்னிப்பாக கவனியுங்கள்.. ஓட்டப் பந்தயம் தொடங்கும் முன்பே மனதை ஒருநிலைப் படுத்திக் கொண்டு ஒரு தீவிர நிலைக்கு வந்திருப்பார்.. செவிகளைத் தீட்டிக் கொண்டு நடத்துனரின் ஒவ்வொரு உச்சரிப்பையும் அணு அளவில் கேட்டு அந்த சத்தம் கேட்டதும் தனது உடலின் ஒவ்வொரு உறுப்பிற்கும் அவர் மனதில் இருந்து போகும் தந்திச் செய்திகள்.. அதை செயல்படுத்தி தசைகள் புடைத்து முன்னேறும் அந்த வேகம்.. ஓரக் கண்ணால் தனது பக்கம் ஓடுபவரைப் பார்த்து இன்னும் அதிகமாக்கும் அந்த வேகம்.. கடைசியில் அந்த நூல் தனது நெஞ்சில் படும்போது கிடைக்கிற அந்த வெற்றியின் சுகம்... இது எல்லாம் அவரை உள்ளே இருந்து ஊக்குவிக்கும் அவர் மனதில் இருந்து ஏற்படுபவைதானே...?? இல்லை என்றால் எட்டுபேரும் அதே வேகத்தில் அல்லவா ஓடி இருக்க வேண்டும்...??
இது போகட்டும்...இதே தூரத்தை நான் எட்டே செகண்டில் ஓடக்கூடும்...ஒரு வெறி நாய் என்னைத் துரத்தும் பட்சத்தில்...!! இதன் க்ரெடிட் அந்த நாய்க்கா?? நிச்சயமாக இல்லை... எனது மனதில் தோன்றும் அந்த மரண பயத்துக்கு அல்லவா...?? அதே நாயை எனது நண்பன் ஒரு முறைத்துப் பார்த்து ஒரு கல்லை எடுத்து ஓங்கினால் வடிவேலு சௌண்டுடன் வாலை மடக்கி வைத்த்டுக் கொண்டு ஓடும். ஒரே சூழ்நிலையில் வேறுபட்ட செயல்பாடுகள்...
அடுத்தது...."காந்தி அவமதிக்கப்படாமல் இருந்திருந்தால், அவரின் சூழலில் இருந்த அடிமைத்தனம் அவருக்குத் தெரியாமல் இருந்திருந்தால் அவரும் சாதாரணமாக இருந்து இறந்திருக்கலாம். அடிமைப்பாடு இல்லையென்றால் சுதந்திரப் போராட்டம் எதுக்கு?." தென் ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கானவர்கள் அவமாதிக்கப் பட்டிருக்கிறார்கள்... ஏன் ஆயிரம் காந்திகள் உருவாக வில்லை?? அந்த உள் மனம் ஒரு மோகன்லால் கரம்சந்திடம்தானே இருந்தது..??
"ஆப்பிள் கீழே விழுந்திருக்காவிட்டால் நியூட்டன் ஈர்ப்பு விசையைப் பற்றிச் சிந்தித்து இருக்கவே மாட்டார்.... " ஆப்பிள் மட்டுமா கீழே விழுகிறது?? எல்லா பொருட்களும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கீழே விழுந்து கொண்டுதான் இருக்கின்றன.... நியூட்டன் மனதில் மட்டும் தோன்றியது ஏன்..?? அவர் மனம் அவரை "உள்ளே" இருந்து தூண்டியதனால் தானே??
நாம் எல்லோரும் குளத்தில் ஸ்விம்மிங் பூலில் பல முறை குளித்திருக்கிறோம். காலாகாலமாக கோடிக்கணக்கான மக்கள் இதுபோன்றே குளித்த சூழ்நிலையில் ஒருவன் மட்டும் திடீர் என்று யுரேக்கா என்று கத்திக் கொண்டு ஏன் ஓட வேண்டும்?? அவனது உள்ளில் தோன்றிய அந்த எண்ணப் பொறி அல்லவா?
எல்லா சிற்றரசர்களும் கப்பம் கட்டும் "சூழ்நிலை"யில் இருந்தார்கள்.. ஆங்கிலேயனுக்கு.. எங்கள் எட்டயபுரத்து கட்டபொம்மன் மட்டும் அதை எதிர்த்து பலருடைய மனதிலும் சுதந்திர எண்ணத்தை விதை விதைத்தானே... அவன் மனதின் உள்ளே இருந்த வீரமும் தைரியமும் தானே அதற்குக் காரணம்??
10 விழுக்காடு பெற்ற மாணவன் சிரித்தபோது, அவன் மனதில் இந்த ஏட்டுச் சுரைக்காய் எனக்கு உதவாது.. எனது வேறு திறன்களை அடையாளம் கண்டு வெல்லப் போகிறேன் என்ற அர்த்தம் இருந்தால் நிச்சயமாக அவன் வெற்றி பெறுவான்.
பாம்பு கருடனுக்கு சவால் விடுகிறது என்றால், கிடைத்த சூழ்நிலையை அந்த பாதுகாப்பை மனதில் வைத்து அந்த நிலையிலேயே தக்க வைத்துக் கொண்டதால்தான்.. கழுத்தில் சுற்றிக் கொண்டிருப்பது கஷ்டமாக இருக்கிறது.. நமது புற்றுக்கே போய்விடுவோம் என்று நினைத்திருந்தான், வழியிலேயே கருடன் ஒரே தூக்கு தூக்கியிருக்கும்...??
மகாபாரதம் முன்பு தொலைக் காட்சியில் காண்பிக்கப் பட்டபோது அந்தக் காட்சி இன்றும் பசுமையாக நினைவில் நிற்கிறது.. ஒரே சூழல்.. வில் போட்டியில் ஒரே சூழல்.. ஆனால் 'க்யா தேக் ரஹா ஹை??" .. எதைப் பார்க்கிறாய் என்ற கேள்விக்கு ஒருவர் வானத்தை பார்க்கிறேன் (ஆஸ்மான் தேக் ரஹா ஹூ).. மரத்தைப் பார்க்கிறேன் (பேட் கோ தே ரஹா ஹு) என்று பதில் அளித்தனர்.. அர்ஜுனன் மட்டுமே "பக்ஷி தேக் ரஹா ஹூ.. உஸ்கா ஆங்க் தேக் ரஹா ஹூ).. "பறவையைப் பார்க்கிறேன் அதன் கண்ணைப் பார்க்கிறேன்" என்ற தெளிவு இலக்குடன் பதில் கூறியதிலேயே வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று புரிந்திருக்கும்.. மீண்டும் வலியுறுத்த விரும்புவது.. ஒரே சூழல்.. கண்ணோட்டங்கள் வேறு வேறு...அவரவர் மனதைப் பொறுத்தது.. என்பதே.
எனவே பெரும்பாலான சூழ்நிலைகள் பொதுவாக நாம் எல்லோருக்கும் பல வாய்ப்புக்களை அளிக்கின்றன... அவற்றை 'கண்டு' கொள்வதும்... உபயோகிப்பதும்... செயல்படுத்துவதும்.. நமது உள்ளே இருந்து வரும் உள் மனதின் கட்டளைகள்... ஒரு சில சூழ்நிலைகளை உருவாக்குவதும் நமது கையில் இருக்கிறது.. எப்போவாவது ஒரு சில சூழ்நிலைகள் (பேரிடர்கள்) நம்மையே விழுங்கி விடக் கூடும்... எனவே முன்னெச்சரிக்கை என்ற உணர்வையும் நமது மனது பதிவு செய்து வைத்திருக்கிறது.. அதை நினைத்து சூழ்நிலையே எல்லாம் என்று நாம் ஹாய் யாக இருந்து விட்டால் 'அம்போ'தான்..
அம்பியின் மனதுக்குள் ரெமோவும் அந்நியனும் இருந்ததுபோல். நமது ஒவ்வொருவருக்குள்ளேயும் கொஞ்சம் சூன்யவாதி, கொஞ்சம் சூழ்நிலைவாதி, கொஞ்சம் தன்னிலைவாதி தம்மாத்தூண்டு ஆன்மீகவாதி எல்லோருமேயே குடியிருக்கிறார்கள் .. அவ்வப்போது நமது உணர்வுகளைப் பொறுத்து ஒவ்வொருவர் தலைதூக்கக் கூடும். சில உணர்வுகளை சூழ்நிலைகள் தூண்டக்கூடும் ஆனால் அவற்றை ஒரு நிலைக்குள் வைத்திருப்பது நமது மனதே.. மனப் பயிற்சியே..
காலையில் குளிர் நேரத்தில் போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்கிறோம்.. கோழி கூவவில்லை அல்லது அலாரம் அடிக்கவில்லை என்ற சூழ்நிலைக்காக அடிமடி முட்டிக்கொண்டிருப்பதை படுக்கையிலேயே செய்யமுடியுமா என்ன?? நமது மனம் கட்டளையிட்டு நம்மை எழுப்பி அதற்கேற்ற சூழ்நிலையைத் தேடிப் போய் வேண்டிய விதத்தில் செயல்பட வைக்கிறது.
ஒரு வகையில் பார்க்கும்போது 'சூழ்நிலை' என்பது ஒரு மாயை...
மற்றவர்கள் வெற்றிக்கும் நமது சொந்த தோல்விகளுக்கும் நாம் ஒவ்வொருவரும் 'கண்டு பிடித்து'க் கொண்டிருக்கும் ஒரு சாக்குப் போக்கு...
வெற்றி கிடைத்தது என்றால் அது சூழ்நிலையைப் பொறுத்து இருக்கலாம்... ஆனால் வெற்றி பெற்றேன் என்றால் அது 'நான்' முயன்று பெற்றது....
'வாழும் கலை'ப் பயிற்சியில் 'நான்' கற்றது... கருவில் இருந்து பிறந்த நொடியில் இருந்து இறக்கும் நொடி வரை நான் தொடர்ந்து செய்வது.."சுவாசிப்பது"..
சூழலில் காற்று இருந்தாலும் மூச்சு இழுப்பதும் நான்.. வெளி விடுவதும் நான்..ஆனால் ஆட்டோமேட்டிக் ஆக செய்து வருவதால் அதை நாம் .. அதாவது நமது உள்மனம் அதை சூழல் என்ற பதத்துக்கு விட்டு விடுகிறது.. என்றைக்காவது சளி பிடித்து மூக்கு அடைத்துக் கொண்டால் தான் மூக்கு என்ற உறுப்பு இருப்பதையே உணர்கிறோம்..
கூற முனைவது என்ன என்றால் பல வெற்றிகளும் நாம் பெற்றவை... ஆனால் 'கிடைத்தவை' என்று சூழலுக்கு க்ரெடிட் கொடுப்பது ஒரு வழக்கமாகி விட்டது .. அதுவும் ஒரு வகையில் ஒரு மாயைதான்.. வெற்றி தோல்வி இல்லை என்று கூறுவது போலவே...
வெற்றியும் தோல்வியும் நமக்கு உள்ளேதான் என்பதில் ஏதாவது ஐயம் இருந்தால் உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்...
இது எல்லாவற்றிற்கும் மேலாக நான் இங்கு வெற்றி தோல்வி என்று கூற முனைந்து கொண்டிருப்பது ...தேர்விலோ.. தேர்தலிலோ.. போட்டியிலோ.. பதவியிலோ ... அல்ல.. வாழ்க்கையில்..; அது செல்வம், பொருள் அல்ல......: நமது மன நிலை.. அதைக் கட்டுப்படுத்துவது நமது உள்ளே இருந்து வருவதுதான்.. அதை நாம் அடையாளம் கண்டு கொண்டு காரை ஓட்டும் ஓட்டுனர் போன்று ஓட்ட பயின்று கொண்டோமானால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.. இதுதான் 'நானும் ஓகே நீயும் ஓகே" நிலை.
இந்த வெற்றி நிலையை அடைய உள் நோட்டம் ..Introspection தேவை.. நம் மனதை ஆராய நம்மை விட்டால் யார் இருக்கிறார்கள்...
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
எந்த சூழ்நிலையையும் தற்காலிகத் தொய்வுகளையும் சமாளித்து மேற்கொண்டு அமைதி நிலையுடன் (contented state of mind) வெற்றியுடன் நமது உள்ளத்தின் மூலமாய் எதிர்கொள்ள இறைவன் எல்லோரையும் வழி நடத்த வாழ்த்துக்கள் என்று கூறி வெற்றிகரமாக இதுவரை வாதிட்ட .. வாதிடப் போகிற நண்பர்களுக்கும் வாழ்த்துக் கூறி, வாய்ப்பளித்தமைக்கு மீண்டும் நன்றி கூறி வெற்றியுடன் விடை பெறுகிறேன்.