பட்டி மன்றத்தில் பங்கெடுக்க வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி....!!
வெற்றி..தோல்வி... சரி..தவறு... கறுப்பு வெள்ளை... மேடு பள்ளம்... இனிப்பு கசப்பு.. அடுக்கிக் கொண்டே போகலாம்.. இவை ஒன்றுமே இல்லாமலே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்குபவர்களில் ஒருவன் அடியேன் நானும்...
துரதிருஷ்டவசமாக, இயற்கை அப்படிப் படைக்கவில்லையே....!
சின்னப் பிஞ்சுகள் கூட இன்று பட்டிமன்றங்களில் அருமையாக வாதிக்கும் ஒரு பாயிண்ட்... பிறப்பே ஒரு வெற்றி.. விவரிக்கத் தேவை இல்லை என்றே என்று நினைக்கிறேன்... கோடிக்கணக்கான அணுக்களில் ஒன்று எப்படியோ வேகமாக எக்செட்ரா எக்செட்ரா.... .... அதுதான் 'நாம்' என்று பிட்டுப் பிட்டு வைக்கின்றன இன்றைய வாண்டுகள்.
பிறப்பிற்கும் இறப்பிற்கும் (இது தோல்வியா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி...!) நடுவே பல பல ஆயிரக்கணக்காக சின்னச் சின்ன வெற்றிகளையும் தோல்விகளையும் ஒரு சில பெரிய வெற்றி தோல்விகளையும் விரல் விட்டு எண்ணக்கூடிய மாபெரும் வெற்றி அல்லது அகல பாதாள்த் தோல்விகளையும் கடந்து வருகிறோம்...ஒரு சிலர் மூழ்கி விடவும் கூடும்.
எனவே வெற்றி தோல்வி என்று ஒன்று இருக்கிறதா என்ற கேள்வியே சற்று அர்த்தமத்ததோ என்ற ஐயம் எழுகிறது.. இது இல்லையென்றால்..நல்லது-கெட்டது, இனிப்பு-கசப்பு, விருப்பு-வெறுப்பு என்று ஒன்றுமே இல்லாத பிரபஞ்சம் வெற்றிடம் ஆகிவிடும்.. எனது கருத்தில் இது ஆன்மீகத்தில் மட்டுமே சாத்தியம்.
சின்னஞ்சிறிசுகள் கனாக் கண்டு வலம் வந்த ஒரு தொலைக்காட்சி நெடுந்தொடர் ஒன்றை பல மாதங்களுக்கு முன்பாக ரசித்து (ஓரளவுக்கு வேறு வழியில்லாமல்.. சானல்கள் இல்லாததால்) காணுவது உண்டு. அதில் ஒரு காட்சியில் வரும் வசனம் .... என்னை வெகுவாகக் கவர்ந்தது..."பிரச்சினையில் அளவு நாம் பார்க்கும் பார்வையில் தான் உள்ளது" என்று ஓர் இளம் ஆசிரியர் மாணவிக்கு ஆறுதல் கூறுவது.. ஏற்கனவே பலமுறை பல இடங்களில் கேட்டதுதான்.. ஆனாலும் சில காட்சிகளில் வரும்போது மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. எனவே சமீப காலங்களில் நான் பன்னோட்டப் பிரியன்.. (பல் நோட்ட..?) அதாவது பல கோணங்களில் இருந்து ஆராய்வது என்பது பழக்கமாகப் போய் விட்டது.
எனவே பட்டிமன்றத்தில் தலைப்பை மூன்று தரப்பிலும் இருந்து நோட்டம் விட்டபோது, மூன்றுமே ஓரளவுக்கு உண்மை என்பது புலப்பட்டது. எனவே எது அதிக உண்மை என்பதே பட்டிமன்றத்தில் எழுப்பப்பட்டிருக்கும் கேள்விக்கு பதிலாக இருக்க முடியும்.
நண்மர் மதுரை மைந்த அற்புதமான கருத்துக்களைத் தந்திருக்கிறார். அவருக்கு என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்.
முதலாவது வெற்றி-தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தொடங்கிய வாதம், அதற்குப் பிறகு வெற்றி பற்றி 25 முறையும் தோல்வி பற்றி 15 முறையும் பேசி தொடரப் பட்டிருக்கிறது. திரும்பத் திரும்ப வாசித்துப் பார்க்கும் போது வெற்றி அல்லது தோல்வியில் பல விஷயங்களிலும் தெளிவு இல்லாதது குறிப்பிடப்பட்டிருக்கிறது. நிர்ணயிக்கும் விதம், தோல்விதான் வெற்றியின் படிக்கட்டு எல்லாமே ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயங்கள்.. ஆனால் இந்த வாதங்கள் வெற்றி தோல்வி என்றவை இருக்கின்றன என்பதையே பறை சாற்றுகின்றன. இல்லையென்றால் ஏன் கவிஞர் "வெற்றி பெற்ற மனிதரெல்லாம் .".. என்று தத்துவக் கவிதை புனையவேண்டும்... ?? அவன் புத்தி சாலியாகவோ முட்டாளாகவோ இருக்கலாம்.. பெற்றது "வெற்றி" என்பது அல்லவா முக்கியம்...? . நண்பர் ம.மை.யின் வாதங்களில் ஒவ்வொரு இடத்திலும் நான் ஒத்துப் போகிறேன்.. ஏன் என்றால் ஒவ்வொரு இடத்திலும் வெற்றி-தோல்வி இருக்கிறது என்ற கருத்து எதிரொலிக்கிறது .... ஆனால் இதில் சில இடங்களில் தெளிவு இல்லை... அளவுகோல்கள் வேறுபடுகின்றன .... என்பதே திரும்பத் திரும்ப வலியுறுத்தப் படுகிறது.
"வெற்றி எது...? தோல்வி எது..?" என்பது ஒரு மிகப் பெரிய கேள்வி... இதைச் சில கோணங்களில் இருந்து ஆராய முயலுவோம்....
நிலா நிலா ஓடி வா என்று கேட்டு வளர்ந்த நாம், அந்த நிலவைச் சுற்றி வர விண்கலம் ஏவி விட்ட நமது அறிவியல் வல்லுனர்களின் சாதனையைப் பாராட்டுகிறோம். இரண்டு வருடம் சுற்ற வேண்டிய கலம், வேறு ஏதாவது கிரகத்தைப் பார்த்து அங்கு சென்று விட்டதா என்று தெரியவில்லை. ஆனாலும் "மிஷன் சக்ஸஸ்" .. சேகரிக்க வேண்டிய தகவல்களைச் சேகரித்தாயிற்று எனவே 'வெற்றி"தான் என்று திருப்திப் பட்டுக்கொள்ளும் குழு.. அவர்களைக் குற்றம் சொல்லுவதற்காகவோ ஏளனப்படுத்துவதற்காகவோ இதை நான் கூறவில்லை... 'அவர்களைப் பொருத்தவரை அது வெற்றி' என்பதைக் கூறுவதற்காகவே சொல்கிறேன்.
வெகு தூரத்தில் ஒரு சிறிய ஊரில் ஓர் அனாதை விடுதி.. அதை நடத்துபவர் தட்டுத்தடுமாறி பண வசதியின்றி அங்கும் இங்கும் புரட்டி ஒவ்வொரு வாரமும் அந்தக் குழந்தைகளுக்கு உணவு உண்ண நிதி சேகரித்தவுடன் விடும் அந்தப் பெருமூச்சு... அது அவரைப் பொருத்தவரை நிச்சயமாக வெற்றிதான் அல்லவா..??
இந்த இரண்டையும் ஒரு மூன்றாவது மனிதரின் கோணத்தில் இருந்து பார்க்கும்போது ....... ஒரு சிலர் தலை சிறந்த அறிவியல் சாதனையை மெச்சக் கூடும்.. உலகத்தில் ஒரு சில நாடுகளே செய்த சாதனையைச் செய்து நம் நாட்டை தலை நிமிர்ந்து நடக்கச் செய்த சாதனை.. உண்மைதான். அதே நேரம் ஒரு சிலர் முணு முணுக்கவும் கூடும்... 'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனின் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்று முழங்கிய பாரதியின் பாரத மண்ணில் கோடிக்கணக்கான மக்கள் வறுமைக் கோட்டின் கீழே இருந்து பசியில் தவிக்கும்போது .....கோடிக்கணக்காக விரயம் (?) செய்து படங்கள் எடுத்தது சாதனையா...? என....!
எனவே நான் வலியுறுத்த விரும்புவது, வெற்றி தோல்வி என்பது எங்கும் இருக்கவே செய்கிறது.. ஆனால் ஒருவருக்கு வெற்றியாகத் தெரிவது இன்னொருவருக்கு தோல்வியாகப் புலப்படக் கூடும். ஏன் ... ஒரு நாள் எனக்கு வெற்றியாகத் தோன்றியது இன்னொரு நாள் தோல்வியாகப் படலாம்.. இது மனம் சம்பந்தப் பட்ட விஷயம்.. அதற்காக வெற்றி தோல்வி என்பதே கிடையாது என்று நினைத்தால் சரியா என்பது கேள்விக் குறியாகவே தெரிகிறது.
இனி "ஒருவரின் வாழ்க்கை" என்ற விஷயத்துக்குள் நுழைவோம்... பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியிலும்கூட ஆயிரக்கணக்கான வெற்றிகளைச் சந்திக்கிறோம்..இயல்பாக வருவதால் அவைகளை நாம் வெற்றியாகக் கருதுவதில்லை.. ஏன் நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சும் கூட வெற்றி அல்லவா..? அது இல்லையென்றால் உயிர் போச்சு..அல்லவா?? நம் எதிர்ப்பார்ப்புக்கள் சில நிறைவேறாத போது 'தோல்வி' என்று துவண்டு விடத் தூண்டுகிறது நமக்குள் உறங்கிக் கிடக்கும் உள்மனம்..
சின்னச் சின்ன வெற்றிகள் கூட மனதுக்கு ஒரு மகிழ்ச்சி, திருப்தி, நிறைவு போன்ற உணர்வுகளைத் தந்து நமக்குள் இருக்கும் படைப்புத் திறன்களை ஊக்குவிக்கின்றன. நமது பழைய வெற்றிகள்...மனதுக்குள் புதைந்து கிடக்கும் புத்துணர்வு மூலம் ... இன்னும் பல பல வெற்றிகளைப் பெற்றிட வழிவகுக்கின்றன... இதைத்தான் வெற்றியைப் போல் வெற்றிகரமான ஒன்று இல்லை... Nothing suceeds like Sucess ..என்று கூறப்படுகிறதோ என்னவோ..?
மிகப் பெரிய வெற்றிகள் சற்றே ஆபத்தானவை... ஒவ்வொருவரும் அதை அணுகுவது அல்லது ஏற்றுக் கொள்ளுவதைப் பொறுத்து இருக்கக் கூடும்.. Managing Sucess ..கொஞ்சம் நுட்பமாக ஆராய வேண்டியது. திடீர் என்று செல்வந்தர் ஆவது, வேகமான பதவி உயர்வு சிலர் வாழ்க்கையில் விபரீத விளைவுகளை ஏற்படுத்துவதை பலரும் அன்றாட வாழ்க்கையில் சந்தித்திருப்போம். எனவே ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் வெற்றிகளைக் கவனமாகக் கையாளுவது அவசியும்.. இதுவும் அவரவர் மனம் சம்பந்தப் பட்டதே.. வெற்றிகள் தலைக்கனத்தைக் கொடுத்தால் வாழ்க்கையைக் கெடுக்கும், எவ்வளவு உயரத்தில் செல்லுகிறோமோ அவ்வளவு உயரத்தில் இருந்து விழ் வாய்ப்பு இருக்கிறது என்பது மனதில் பதிந்து விட்டால் பின்னர் அனாயாசமாக இதைச் சமாளித்து விடலாம். மைக்கேல் ஜாக்சன் விஷயத்தில் இது ஓரளவுக்கு சம்பவித்திருக்கலாம்.. ஆனால் அவர் மரணம் தோல்வியா?? அல்லது விடுதலை என்ற வெற்றியாகவும் இருக்கலாம் என்பதும் வேறொரு கோணத்தில் இருந்து அலசும் போது புலப்படும்.
நண்பர் ம.மை. பின்னர் அளித்த குட்டிக் கதையில் கூட, வெற்றியைத் தோல்வியாகப் பாவித்து அழும் அந்த மாணவியின் மனோபாவம் திருத்தவேண்டியது என்பதைக் குறிக்கலாம் அல்லது அந்த ஒரு சில கண்ணிர்த்துளிகள் அடுத்த முறை முதல் மாணவியாக வரத்தூண்டும் உதவுகோலாகவும் இருக்கக் கூடும். அந்த மாணவியின் மனோபலத்தைப் பொறுத்தே அவளது எதிர்காலம் திகழும்.
தோல்விகள் ... யாருக்கும் பொதுவாகவே பிடிப்பதில்லை... துக்கம், துயரம், ஏமாற்றம், மற்றும் பல எதிர்மறைச் சிந்தைகளை மனதில் விதைத்து விட்டுச் சென்று விடுகின்றன.. சாதிக்கக் கூடிய வெற்றிகளைக் கூட தடை செய்யும் பழைய எண்ணங்களை களையும் திண்ணமும் ஒவ்வொருவர் மனதிலேயே இருக்கிறது.
ஒரு குழந்தை எழுந்து நடப்பதற்குள் எத்தனை முறை தவழ்ந்து எழுந்து விழுந்து பின்னர் தட்டு தடுமாறி ஒவ்வொரு நடையாக நடக்கத் தொடங்குகிறது..?? குழந்தைகளிடத்திருந்து படிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.. unconditioned mind.. நாம் வளரும்போது பல எண்ணங்கள் மனதில் விதைக்கப் படுவதாலோ என்னவோ பல இடங்களிலும் சிறு தோல்விகளில் கூட சோர்வடையச் செய்கிறது.. எனவே நல்லெண்ணங்களை வளர்த்துக் கொண்டவர் ஒவ்வொருவர் மனதிலும் நண்பர் ம.மை. கூறியது போல் "தோல்விகளே வெற்றிக்குப் படிக்கல்" என்ற எண்ணத்தை பதியச் செய்து விட்டால் "விழுந்த போதெல்லாம் எழ ஏதுவாக இருக்கும்.. இதுவும் அவரவர் மனதிலேயே இருக்கின்றது. "மனதில் உறுதி வேண்டும்" என்று கவி சும்மாவா சொன்னார்..??
ஏ ஆர் ரஹ்மான் சாதாரணமாகக் கூறுவது "எல்லா புகழும் இறைவனுக்கு" என்றே... அட் லீஸ்ட் நான் கேட்டவரை.. தோல்வியை இறைவனுக்கு சமர்ப்பிப்பதை விட தோல்வியில் இறைவன் ஊன்றுகோலாக நம்மைத் தாங்குவதே இயல்பு..
அடுத்தது ...... வெற்றி தோல்வியும்... சுற்றுச் சூழலும்
சுற்று சூழல் ஒரு மிக முக்கியமான அம்சம்.. ஒரு விதத்தில் எப்பொழுதும் கூறப்படும் ஒரு வார்த்தை "வெற்றி வாய்ப்பு" .. Probability of Sucess in a given situation.. பல இடங்களிலும் சூழல் வெற்றியில் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது என்பது கண்கூடாகக் காணும் உண்மை.. ஒரு ஏழை செல்வம் தீட்டுவதை விட ஒரு செல்வந்தன் தன் செல்வத்தை பன் மடங்காற்றுவது, கிரிக்கெட்டில் நல்ல பேட்டிங் பிட்ச் கிடைத்தால் சென்சுரி போடுவது, இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் நல்ல சூழ்நிலையில் மட்டும் வெற்றி பெற முடிவது சோம்பேறித்தனத்தை வளர்க்கும்.. ஒரு சிலர் எல்லாவற்றையும் சூழ்நிலைக்கே விட்டுவிட்டு முயற்சியே செய்யாமல் இருக்கும் நிலையையும் வளர்க்கும்.
காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்தது என்ற பழமொழிக்கேற்ப சில வெற்றிகளை நாம் சந்தித்திருக்கக் கூடும்.. மற்றவர்கள் சூழ்நிலைகளால் பதவி உயர்வு போன்றவைப் பெற்றதையும் கண்டிருக்கலாம். இது குறுகிய கால லாபமாகவே இருக்கும். எனவே கடின உழைப்பு, முயற்சி உதவுவது போல சூழ்நிலை மட்டும் உதவாது. நல்ல சூழ்நிலையாக இருந்தாலும் சற்றே எதிர்மறையான சூழ்நிலையாக இருந்தாலும் ஒவ்வொருவர் வெற்றியை அடையத் தூண்டுவது அவரவர் முயற்சியே.. தெளிவான இலக்கு (முழு வாழ்க்கைக்கும் இலக்கு வைப்பது கடினமாக இருக்கலாம்.. சின்னச் சின்ன அன்றாடைய குறிக்கோள்கள் micro goals. அல்லது குறுங்கால இலக்குகள் short term targets), செயல்முறைத் திட்டங்கள் (action plan), அவ்வப்போது பின்னோக்கிப் பார்த்து (monitoring) வேண்டிய மாற்றங்களை அமைத்துக் கொள்வது எல்லாமே அவரவர் கையில்தான் இருக்கிறது.
எனவே சூழ்நிலைகள் .. வெற்றி தோல்விக்கு ஓரளவு காரணமாக இருக்கலாம்.. ஆனால் அதை நம்பியே இருப்பது அபாயமானது. அவரவர் முயற்சியும் உழைப்புமே சிறந்த வெற்றி அல்லது எதிர்மறைச் சூழ்நிலைகளை எதிர் நோக்கும் சக்தியாக விளங்கும்.
வெற்றியோ தோல்வியோ ஒரு முடிவு அல்ல... காலச் சக்கரம் சுழலும்போது ஒவ்வொருவர் வாழ்விலும் அவ்வப்போது இவை மாறி மாறி வரக்கூடும்.
இவைகளை... வெற்றியாக இருந்தாலும் சரி தோல்வியாக இருந்தாலும் சரி.. சமாளிக்கும் திறன் அவரவர் கையிலேயே.. அல்லது மனதிலேயே இருக்கிறது.
எனது நண்பர் ஒருவர் அடிக்கடி ஸெட் தியரி Set Theory-யை மேற்கோள் காட்டிப் பேசுவது சுவாரசியமாக இருக்கும்.. அவரது பாணியில் சில பாயிண்ட்-களைக் கூறி புராணத்தை முடிக்கிறேன்...
ஒவ்வொருவர் வாழ்வில் ஏற்படும் குட்டிக் குட்டி வெற்றி தோல்விகளை குட்டி குட்டி வட்டங்களாக வரைந்து கொள்வோம். பெரிய வெற்றி தோல்விகளை சற்று பெரிதாகவும்.
இப்போது ஒரு Dotted Line இல் வரையும் ஒரு சற்றே பெரிய வட்டம்.. இது நமது சமாளிப்புத் திறனை அடையாளம் காட்டும் வட்டமாகக் கருதவும்.
சூழ்நிலைவாதிகளின் (அதாவது சூழ்நிலைகளை மட்டுமே நம்பியிருப்பவர்கள்) இந்த வட்டம் ஒவ்வொரு வெற்றி தோல்வியைச் சுற்றி அவ்வப்போது ஜம்ப் பண்ணிக் கொண்டே இருக்கும்.
ஆன்மீகவாதிகளின் வட்டம் மிகப் பெரியது almost infinity radius ...அந்த வட்டத்துக்குள் இந்தச் சின்னஞ்சிறு வட்டங்கள் குட்டி நட்சத்திரங்களைப்போல புள்ளிகளாகத் தெரியக் கூடும்.. அதாவது வெற்றி தோல்விகள் மிகச் சிறியதாக ... அப்படி ஒன்றே இல்லை என்னும் அளவுக்கு...!! ஆனால் அந்த அளவு ஆன்மீகவாதிகள் உலகில் இருக்கிறார்களா என்பது சந்தேகமே.. விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் இருக்கக் கூடும்... ஏறக் குறைய "நான் கடவுள்" நிலை..!
நம்ம கட்சி 'தன்னிலைவாதிகள்' ... நமது மனதை ஒருநிலைப் படுத்திக் கொண்டு எத்தனை வெற்றி தோல்வி வட்டங்களை சமாளிக்கிறோமோ அவ்வளவு பெரிதாக மட்டும் இருக்கும்.. அவ்வப்போது நமது வட்டத்தின் வெளியே இருக்கும் வெற்றியையோ தோல்வியையோ தழுவ நேரிடும்போது மனம் சற்றே தடுமாறக் கூடும்.
இந்த வெற்றி நிலை எவ்வளவு பெரிதாக இருக்க முடியும் என்பது ஒவ்வொருவர் மனதிலேயே இருக்கிறது.
அதை அடைய ... அந்த நிலையில் தொடர ... ஒவ்வொருவரும் தமது மனநிலையை பக்குவப்படுத்தி தோல்விகளை அனாயாசமாக நேரிட்டு வெற்றிகளையும் கவனத்துடன் கையாண்டு வெற்றிகரமான அல்லது திருப்திகரமான வாழ்க்கையை அமைத்து வாழ்வதற்கு வாழ்த்துக்கள் கூறி வாய்ப்புத் தந்தமைக்கு மீண்டும் நன்றி கூறி விடை பெறுகிறேன். (எனது தமிழ் அறிவு குறைவு எனவே குறைகளைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.)