உலக கோப்பை கால்பந்து திருவிழா
தென்ஆப்ரிக்காவில் நாளை தொடக்கம்
ஜோகன்னஸ்பர்க், ஜூன் 10
உலக கோப்பை கால்பந்து திருவிழா தென் ஆப்ரிக்காவில் நாளை கோலகலமாக தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்ரிக்கா & மெக்சிகோ (இந்திய நேரப்படி இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.
உலகிலேயே அதிக நாடுகள் பங்கேற்கும், அதிகமான ரசிகர்கள் பார்த்து ரசிக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி தென்ஆப்ரிக்காவில் நாளை தொடங்கி வரும் ஜூலை மாதம் 11ம் தேதி வரை நடக்கிறது. உலக கோப்பை போட்டி முதல் முறையாக தென்ஆப்ரிக்காவில் நடக்கிறது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், பிரேசில், அர்ஜென்டினா உட்பட 32 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 32 அணிகள் 8 பரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 அணிகள் இடம்பெற்றுள்ளன.
போட்டிகள் முதலில் லீக் முறையில் நடக்கிறது. லீக் சுற்றின் முடிவில் 8 பிரிவிலும் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடத்தைப் பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முந்திய சுற்றில் விளையாட தகுதி பெறும். இந்த சுற்று முதல் போட்டிகள் நாக்&அவுட் முறையில் நடக்கும்.
போட்டி நடக்கவுள்ள தென் ஆப்ரிக்காவில் எங்கு திரும்பினாலும் உலக கோப்பை போஸ்டர்களும் பிரமாண்ட பேனர்களும் தான் கண்களை நிறைக்கின்றன. ஜோகன்னஸ்பர்க், டர்பன், கேப் டவுன்...என்று 9 நகரங்களில் 10 புத்தம் புது ஸ்டேடியங்கள் போட்டிகளை நடத்துவதற்கு தயாராக உள்ளது.
உலகம் முழுவதும் இருந்து லட்சக் கணக்கான ரசிகர்களின் படையெடுப்பில் தென் ஆப்ரிக்கா திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது. இவர்கள் தங்குவதற்காக ஓட்டல்கள், பிரத்யேக உணவகங்கள், மதுபான பார்கள், உற்சாகமூட்டும் அழகிகள், தீவிரவாத தாக்குதலை சமாளிக்க அதிரடி பாதுகாப்பு என்று எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டி போல தங்களுக்குப் பிடித்தமான வீரர் அல்லது அணியை ஆதரிக்க இந்திய ரசிகர்கள் தயாராகிவிட்டனர். உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரே விளையாட்டு கால்பந்துதான். ரசிகர்களை விட வெறியர்கள் எண்ணிக்கை அதிகம். சேம் சைடு கோல் போட்ட வீரரை சுட்டுத் தள்ளிய கொடூரம் எல்லாம் அரங்கேறி இருக்கிறது.
கிளப் போட்டியில் அபிமான அணி தோற்றாலே மைதானத்தை அதகளமாக்கி விடுவார்கள் இந்த ரவுடி ரசிகர்கள். இது வரை நடந்துள்ள 18 உலக கோப்பை போட்டியில் 7 நாடுகள் கோப்பையை வென்றுள்ளன.
பிரேசில் அணி 5 முறை கோப்பையை கொள்ளை அடித்துள்ளது. எல்லா போட்டியிலும் விளையாடிய ஒரே அணி என்ற பெருமையும் அதற்குத்தான். நடப்பு சாம்பியன் இத்தாலி 4 முறையும், ஜெர்மனி 3 முறையும் சாம்பியனாகி உள்ளன.
வழக்கம் போல இந்த முறையும் பிரேசில் அணிதான் பேவரைட். இந்த அணியின் நட்சத்திர வீரர்கள் மைகான், கபு, கார்லோஸ் ஆகியோரின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் இப்போதே சீட் போட்டு காத்திருக்கிறார்கள். எனினும், நட்சித்திர வீரர் ரொனால்டினோ விளையாடாதது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
மரடோனா பயிற்சியில் அர்ஜென்டினாவும் உறுமிக் கொண்டிருக்கிறது. இந்த அணியின் லயனல் மெஸ்ஸி பெயரைக் கேட்டாலே எதிரணி கோல் கீப்பர்களுக்கு கண்கள் கிறு கிறுக்கும். உலகின் தலைசிறந்த வீரருக்கான பிபா விருதை தொடர்ந்து 2வது முறையாக தட்டிச் சென்றவர்.
பார்சிலோனா அணிக்காக கடந்த சீசனில் 47 கோல் போட்டு அசத்தியிருக்கிறார். கிளப் அணிக்காக காட்டும் சாகசம், தாய்நாட்டு அணிக்காக விளையாடும்போது மிஸ் ஆவது மெஸ்ஸிக்கு பெரிய சாபக் கேடாக இருந்து வருகிறது. இந்த உலக கோப்பையில் அதற்கு விமோசனம் கிடைக்க வேண்டும் என்று அர்ஜென்டினா ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர்.
இங்கிலாந்தின் வேய்ன் ரூனி, போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, டேவிட் வில்லா (ஸ்பெயின்), டிடியர் ட்ரோக்பா (ஐவரி கோஸ்ட்), மலோவ்டா (பிரான்ஸ்), பாஸ்டியன் (ஜெர்மனி) என்று அணிக்கு ஒரு அசகாய சூரர் இருப்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை.
சில சாதா அணிகள் தாதா அணிகளுக்கு தண்ணி காட்டுவதுதான் கால்பந்து உலக கோப்பையில் கவர்ச்சியான அம்சம்.
கேமரூன், கானா, நைஜீரியா அணிகளுடன் மோதும் போது எவ்வளவு பெரிய அணியாக இருந்தாலும் உள்ளூர ஒரு நடுக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
நள்ளிரவு போட்டி தவிர மாலை 5 மணி, இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டிகளை இந்திய ரசிகர்கள் ரிலாக்சாக பார்க்கலாம். எல்சிடி டிவி, நண்பர்கள், பீர் பாட்டில் என்று கனகச்சிதமாக திட்டமிடும் பார்ட்டிகளும் திருவிழாக் கொண்டாட்டத்துக்கு தயாராகி விட்டனர்.
நன்றி - தினகரன்