ஆதவா
New member

அமானுஷ்யமற்ற சாதாரண வாழ்வில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். தீடீரென உங்கள் இரவுகள், உங்களுக்கேயுண்டான இரவுகள் அசாதாரணமாகிவிட்டால் உங்களால் என்ன செய்யமுடியும்? அதனோடு போராடுவதைத் தவிர? இரவு எப்பொழுதும் தன் கண்ணை மூடியிருப்பதால் வெளிச்சப் பூச்சிகளான நமக்கு இரவைக் கண்டதும் பயமாகிவிடுகிறது. இருட்டுக்குள் பேய்களும் ஆவிகளும் ஒளிந்து கொண்டிருக்கலாம் என்று தோணுகிறது. ஒரு அமானுஷ்ய சக்தி நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கக் கூடும் என்று வீணாக யோசிக்கிறீர்கள். உண்மை அதுவல்ல. ஆனால் அது உண்மையானால்?
மிக்காவுக்கும் கெய்ட்டிக்கும் அப்படித்தான் நடந்தது. இன்னும் சொல்லப் போனால் கெய்ட்டிக்குத்தான் தானொரு சக்தியால் சூழப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு சிறுவயதிலிருந்தே தோன்றியிருக்கிறது. அறிவியல்படி இதனை மெண்டலி டிஸ்ஸார்டர் (ஒழுங்கற்ற நடவடிக்கை) என்று சொல்லலாம். அறிவியல் சாராத அயல்புக்கு (Paranormal) எந்த மருத்துவம் இருக்கிறது? கெய்ட்டியின் எட்டுவயதில் ஆரம்பித்த அந்த அமானுஷ்யம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பின் மிக்காவை காதல் செய்து தனியாக ஒரு வீட்டில் குடி போகிறார்கள். மிக்காவிடம் தன்னைப் பற்றி சொல்லுகிறாள். ஆனால் மிக்கா ஒரு கேமரா பிரியன், அவனது அழகு காதலியை படம்பிடிக்கிறான்... ஒருமணி நேரம் இரண்டு மணி நேரமல்ல, நாள் முழுக்கவும். அவளைச் சுற்றி வரும் அமானுஷ்யத்தை அவனது கேமரா ஒவ்வொரு இரவிலும் சொல்லிவிடுகிறது. ஆனால் அந்த அமானுஷ்யம் அருவமாக இருக்கிறது. அந்த வீட்டில் இரவு முழுக்க அயல்பு சக்திகள் நிறைந்திருப்பதாக உணரும் மிக்காவும் கெய்ட்டியும் ஒரு ஹோட்டலில் தங்கிவிட முடிவு செய்து தயாராகிறார்கள். ஆனால் தன்னைச் சூழ்ந்திருக்கும் சக்தியின் ஆக்கிரமிப்பால் கெய்ட்டி வராமல் போகவே, அந்த இரவு என்னானது என்பதுதான் முடிவு.
Paranormal Activity என்ற இப்படம் 2007 ல் வெளியான ஹாலிவுட் திரைப்படம். சாதாரண வீடியோ கேமராவில் படம் பிடிக்கப்பட்டு, இந்திய பணத்தில் சுமார் 70000 ரூபாயில் உருவாக்கப்பட்டிருக்கும் படம். நம்புவதற்கு ஆச்சரியமான விஷயம் இது. இரண்டே நடிகர்கள் (மற்றும் இரண்டு பேர் இரண்டு காட்சிகள் மட்டுமே) ஒரு வீடு மட்டுமே படத்தில் காட்டப்படுகிறது. படத்தின் உண்மைத் தன்மைக்காக டாகுமெண்டரி முறையில் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. அதனால் படத்தில் இசைக்கு வேலையே இல்லை, ஒரு திகில் படத்திற்குண்டான விறுவிறுப்பு சற்றும் குறையாமல் செல்கிறது. படம் முழுக்க பேசப்படும் வசனங்கள் மிக இயல்பாக இருக்கிறது. கெய்ட்டி, மிக்காவோடு இரவு மட்டும் வாழும் அந்த இன்னொரு அருவம் என்ன எனும் சிந்தனை படத்தின் கடைசி வரையிலும் நம்மை உறையவைத்து கொண்டுவந்துவிடுகிறது. படம் பார்த்த இரவு சற்று பயத்தோடுதான் கழிந்தது என்றால் படத்தின் வீரியத்தை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.
நமக்கு மீறிய சக்தி உண்டு என்று சொல்லும் நாம், அந்த சக்தி நம் முன்னே நின்றால் நாம் வணங்கப் போவதில்லை, மாறாக பயந்துதான் போவோம். பயம் என்பது கோழைத்தனமானதல்ல, ஆனால் பயமும் கோழைத்தனமானதுதான். இருட்டு, நிலவு, அதீதி (Mutant) அவ்வளவு ஏன், சிலசமயம் நம் நிழல்கள் கூட பயத்தின் அடையாளங்களே. நான் சிறுவயதில் அப்படிப்பட்ட அமானுஷ்யங்களுக்கு ஆளாகியிருக்கிறேன். அதை முன்பே இங்கே எழுதியிருக்கிறேன். ஆனால் பின்நாட்களில் அவை எதுவும் என்னைத் தொடர்ந்ததில்லை. உலகம் முழுக்க இப்படிப்பட்ட மாயசக்திகள் இருப்பதாக உணரும் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் பயத்தை படம் பிடித்தது போல இருந்தது Paranormal Activity. இரவில், தனிமையில், அதிரும் ஒலியமைப்பில் ஒருநாள் கண்டுவிட்டு கூறுங்கள் அந்த இரவில் நீங்கள் பட்ட அவஸ்தைகளை...