பெய்ஜிங்: வில்வித்தையில் இந்திய வீரர்
மங்கள் சம்பியா ஒரு புள்ளி வித்தியாசத்தில், ரஷ்ய வீரரிடம் தோல்வியுற்றார்.
ஆடவர் தனி நபர் பிரிவு வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் மங்கள் சம்பியா இன்று ரஷ்யாவின் பயர் படெனோவுடன் மோதினார்.
மிகவும் விறுவிறுப்பாக இருந்த இந்தப் போட்டியில் இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்தனர். யார் வெல்வார்கள் என்பதில் இழுபறி தோன்றியது. ஆனால் அதிர்ஷ்டம் ரஷ்யாவுக்கு சாதகமாக இருந்தது. இறுதியில், 108-109 என்ற புள்ளிகள் கணக்கில் சம்பியா துரதிர்ஷ்டவசமாக தோல்வியைத் தழுவினார்.
இந்தத் தோல்வியுடன் வில்வித்தைப் பிரிவில் இந்தியாவின் வாய்ப்புகள் முடிந்து போய் விட்டன.
இதற்கு முன்பு இந்த ஆண்டு நடந்த மூன்று உலகக் கோப்பை போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார் சம்பியா. பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் தகுதிச்சுற்றுகளிலும் சிறப்பான நிலையில் இருந்தார். இருப்பினும் அதிர்ஷ்டம் துணை நிற்காததால் தோல்வியைத் தழுவ நேரிட்டு விட்டது.