இன்னும் என் மனதைக் கவர்ந்த பல குறள்கள் உள்ளன. ஆனால், அவையெலாம் எழுதுவதற்கு இன்னும் பல காலமாகலாம். இருப்பினும் நான் சொல்ல வந்த கருத்தை தெளிவாக எடுத்துரைத்த திருப்தி இருக்கிறது. இதன் முடிவுரையாக, திருக்குறளை இன்று எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் கொடுக்கிறேன்.
முடிவுரை:
இன்று திருக்குறளைப் பயன்படுத்துவது எப்படி -
காலத்தை வென்ற குறள் ஒவ்வொரு காலத்திலும் அதன் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பொருளைத் தந்து மனிதருக்கு உதவியாயிருப்பது யாவருமறிந்த ஒன்று. இக் குறள் தற்போதைய காலத்திற்கு பொருந்தும் வகையில் பலர் பல வகைகளில் திருக்குறளைக் காண்கிறார்கள். சிலர் ஒரு திருக்குறளை எடுத்துக் கொண்டு பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். ஒரு சில குறள்களின் முழு ஆழத்தினை இன்னும் உணரமுடியவில்லை என்பது ஒரே குறளுக்கு பலர் பலப்பல புது அர்த்தங்கள் கொடுப்பதிலிருந்து தெரிகிறது.
அறிவுரை கேட்பது கடினமானது தான். வாழ்க்கை ஆனந்தமாக செல்லும் போது அறிவுரைகள் தேவைப்படாது. அதே வாழ்க்கையில் புயல் அடித்து தவிக்கும் போது ஆதரவு தோள்களும் அறிவுரைகளும் தேவைப்படும். இதே அறிவுரைகளை முதலிலேயே அறிந்து வாழ்வில் கடைப்பிடித்தால், பின்னால் வரப்போகும் துன்பங்களில் இருந்து தப்பிக்கவும் அதைக் கையாளவும் உறுதுணையாக இருக்கும். அப்போது வாழ்வு தொடர்ந்து இனிக்கும்.
திருக்குறள் உலகப்புகழ் பெற்றது என்பதை யாவருமறிவர். இதனாலேயே இப்போது திருவள்ளுவர் தம் இனத்தவர், தம் மதத்தவர், தம் சாதிக்காரர் என்று பலர் கூறிக் கிளம்பியிருக்கிறார்கள். இவர்கள் வள்ளுவர் கூறியிருக்கும் திருக்குறளிலேயே உதாரணத்தையும் எடுத்துக் கூறுகிறார்கள். இன்னும் சிலர் திருவள்ளுவர் ஒருவரே அல்லர். அவர் பல முனிவர்கள் கூறியதை வெறுமனே தொகுத்தவர் என்றும் புதுப்புது கதைகள் விடுகின்றனர். இது சான்றோர்களுக்கு உகந்த செயல் அல்ல. திருவள்ளுவர் எவராயிருந்தாலும் அவர் கூறிய கருத்துக்களை எடுத்து அவற்றை தம் வாழ்வில் கடைப்பிடித்து வருவதுதான் தகுந்த செயலாகும்.
திருக்குறள் நமது பொக்கிஷம். திருக்குறளை நன்றாக ஆராய்ந்து ஒவ்வொரு துறைக்கும் எப்படி இது பொருந்தும் என்பதையும் நல்ல நூற்களாக உருவாக்கி, அதன் பெயரில் நல்ல பாடத்திட்டங்களும்(Courses) உருவாக்கி சான்றிதழ்களும்(Certification, Just like Project Management Courses in the west) வழங்கிட வேண்டும். இந்த சான்றிதழ்கள் வேலை பார்க்கும் இடங்களில் பெருமை மிக்கதாக கருதப்பட வேண்டும்.
சிவகாசியில் இருக்கும் நீங்கள் சென்னைக்கு செல்வது எப்படி என்று என்னைக் கேட்பீர்களேயானால், என்னால் வரைபடம் கொடுத்தும், செல்வதற்கான வழிமுறைகள் கொடுத்தும் உதவமுடியும். ஆனால், நீங்கள் தான் அதைப் பயன்படுத்தி தலைநகர் சென்னைக்கு செல்ல வேண்டும். அதே போல் தான், நான் திருக்குறளில் இருந்து பத்து சதவிகித குறட்களை எடுத்து எப்படி நமது வாழ்வில் பயன்படுத்தலாம் என்பதை இங்கே அனுபவ குறளாக கொடுத்திருக்கிறேன். திருக்குறள் கடலில் சில மீன்களை உங்களுக்கு பிடித்து கொடுத்து அதை மேலும் எப்படி பிடிக்க வேண்டும் என்பதையும் கூறிவிட்டேன். நீங்கள் திருக்குறளை பயன்படுத்தி உங்கள் வாழ்வில் வெற்றியும் இன்பமும் காண எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
முற்றும்.
நன்றி,
ஆக்கம்: மீனாகுமார்.