வலிமை என்பதை போர்களத்தில் வீரமாகவும் கற்றோர் நிறைந்திருக்கும் அவையில் அறிவின் வலிமையாகும் மேலும் விளையாட்டில் வீரர்கள் மற்றும் அணியின் வலிமையாகவும் பொருள் கொள்ளலாம். வணிகத்தில் தம் கொள்ளளவு (Capacity) யாக கருதலாம். இப்படி இடத்திற்க்கேற்ப வலிமை என்ற அருமையான சொல்லின் பொருள் மாறும். இவ்வாறு பல் வேறு சூழ்நிலைகளுக்கு ஒரே தத்துவமாக பொருந்துவது குறளின் தனிச்சிறப்பு.
கீழே உள்ள குறளைப் படியுங்கள். நான் கூறுவது விளங்கும்.
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
வினைவலி - செய்யக்கூடிய செயலின் வலி. இது எந்த செயலாகவும் இருக்கலாம். போர், விளையாட்டு, வணிகம், பேச்சுப்போட்டி என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். செயலின் வலிமை, தன்னுடைய வலிமை, மாற்றான், எதிரி போன்றவர்களின் வலிமை, தனக்கும் எதிரிக்கும் துணை நிற்பவர்களின் (சகஊழியர்கள்) வலிமை, ஆகிய யாவற்றையும் ஆராய்ந்த பின்பே அச் செயலை செய்ய விளைய வேண்டும்.