அனுபவ குறள் - புத்தகம்!!

சில காலங்களுக்கு முன்னர் நாட்டை ஆளும் பொறுப்பும் சக்தியும் மன்னனிடமும் மற்றும் சிலரிடமும்மட்டுமே இருந்தது. சாராண குடிமகன் தன் வேலைகளை செவ்வனே செய்து விட்டு சந்தோசமாக வாழ்வு நடத்தி வந்தான். இன்றோ எந்த ஒரு வேலை செய்ய வேண்டுமாயினும் பலரின் உதவி தேவைப்படுகிறதே. நம் வீட்டிலிருக்கும் எந்த ஒரு பொருளையும் நாமே செய்ததில்லையே. யாரோ எங்கோ செய்த பொருட்கள் - நாம் காசு கொடுத்து வாங்கி வந்து அனுபவிக்கிறோம். தொலைபேசி வசதி, மின்சார வசதி, வாகனங்கள், மின்சார சாதனங்கள் என்று.... நாம் நம் வாழ்வில் பலரைச் சார்ந்துள்ளோம். நாம் உருப்படியாக எதையும் படைத்தோமா என்று தெரியாது. ஆனால் காசு மட்டும் இருந்தால் எதை வேண்டுமானாலும் வாங்கி அனுபவிக்கலாம். இல்லையா பின்னே.

இப்படி ஒவ்வொரு விசயத்திற்க்கும் பிறரைச் சார்ந்து வாழும் தன்மை மிக மிக அதிகரித்துவிட்டது. இதெல்லாம் இல்லாமல் ஒரு வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்குப் போய்விட்டோம். இவ்வாறு சார்ந்திருப்பதினால் ஒருவரோடு ஒருவர் பேசுவது அதிகரித்துள்ளது. எந்த ஒரு செயலும் அனுபவம் பெற்ற பலரிடம் கேட்டு செய்தோமாயின் மிக சிறப்பாக அமைகிறது. அங்ஙனம் பலரிடம் பேசும் போது விவாதம் வருகிறது. அப்போது அனுபவமும் அறிவும் பெற்றவன் சும்மா உட்கார்ந்திருந்தால் அவனால் பயன் விளையாது. அவன் கண்டவற்றை பிறரிடம் அவர் புரிந்து கொள்ளும் அளவுக்கு தெளிவாகவும் இனிமையாகவும் உரைக்கின், அவர் கூறிய சொல்லை பிறர் எளிதில் ஏற்பர்.

அவ்வாறு அழகாக எடுத்துரைப்பதே ஒரு கலை என்பார்கள். அது எல்லார்க்கும் எளிதாக அமைந்து விடாது. இயற்கையாகவே பெற்றிருப்பின் அது இறைவன் தந்த வரம். இல்லை பலரைப்பார்த்தும் கற்றுக்கொள்ளலாம். பழக பழக வந்து விடும். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது பழமொழி. அவ்வாறு சரியாக பேசும் திறமையும் பெற்று நல்ல அறிவுத்திறனோடு கூடியவரிடம் பிறர் பேசி வெற்றி பெறுதல் என்பது மிக மிக கடினமே.

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.


சொல்வன்மை பெற்று, எதற்க்கும் சோர்ந்திடாது எவர்க்கும், எச்சபைக்கும் அஞ்சாதவனை வெல்வது யார்க்கும் அரியதாகும்.

அங்ஙனம் சொல் திறம் பெற்று, எந்த ஒரு விசயத்தையும் விரைந்து அறிந்து, முடிவெடுத்து இனிமையாக்கக் கூறுபவனின் ஏவலுக்கு இந்த உலகம் பணியும். அவன் சொல்வதைக் கேட்கும்.

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.



இத்தன்மை எந்த ஒரு துறைக்கும் பொருந்துவது வியப்பான இயல்பு. இன்றைய தொழில்உலகில் இத்தன்மை பெற்றிருப்பவன் தொழிலில் கொடிகட்டிப் பறப்பான். அரசியலில் இருப்பவனை உலகம் பின்தொடரும்.
 
யாரிடம் பேசுகிறோம். எதற்காக பேசுகிறோம். என்ன பேசப்போகிறோம் என்பதனை நம் பார்வையில் உணர்கிறோம். அதே போல் கேட்பவர் நம்மிடம் என்ன கேட்கப்போகிறார், அவருக்கு என்னவெல்லாம் தெரியும், அவர் நம்மிடம் எதை எதிர் பார்க்கிறார் என்பதையும் உணர்ந்து அதற்க்கு ஏற்றாற்போல் வார்த்தைகளையடக்கி வாக்கியங்களை உருவாக்கி பேசுவதை விட மேலானது எதுவுமில்லை.

பேசுவதற்க்குத் தேவையானவை-

1. யார் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றறிவது.
2. நம்மிடமுள்ள அனுவபமும் அறிவும் அதற்க்கு பொருந்துமா என்றறிவது. பொருந்தாவிட்டால் பேசவே பேசாதீர்கள்.
3. சரியான கருத்தை வடிவமைப்பது.
4. சரியான சொற்களைத் தேர்ந்தெடுப்பது. - இது மிக முக்கியம். தேவைக்கு குறைவான-அதிகமான சொற்கள் சந்தேகங்களை உண்டு பண்ணும். அதிகமான சொற்கள் பிரச்சனைகளுக்கு அழைப்பு.
5. சொற்களை வாக்கியங்களை இனிமையாக பேசுவது.

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கும் இல்.

கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.
 
மிக அருமை அனுபவக்குறள்கள்...
படம்போல தெளிவாகத் தெரிகிறது வாசிக்கையிலேயே... உண்ர்கின்றேன் மனதில்...
எளிய விளக்கங்கள், சுவையாக, இன்னும் குறள்களில் தொடர, வாழ்த்துகின்றேன்...
 
மிக அருமை மீனாகுமார் அவர்களே..

மேலாண்மை வகுப்புகளில் வரும் தொடர்பாற்றல், பேரம் பேசும் ஆற்றல் இவற்றுடனும், அன்றாட வாழ்வியல் அனுபவங்களுடனும் குறளைச் சட்டென பொருத்திப்பார்க்க உதவும் உங்கள் சரளாமன எழுத்து நடை அருமை!

உங்கள் ரசிகனாக்கிவிட்டீர்கள்.. தொடருங்கள்!
 
ஆமாம் அண்ணா..,
பாடசாலை நாட்களில், திருக்குறள் போட்டி என்று வைத்து, திருகுவார்கள்...
பாடமாக்கி ஒப்புவித்து பரிசில்கள் பெற்றிருந்தாலும்,
அர்த்தங்கள் தெரியாமல் பாடமாக்கியதாக மட்டுமே போனது...
ஆனால்,
மீனாகுமார் அவர்கள் போன்று அன்று கற்பித்திருந்தால் ஆசையாக அறிந்திருப்போம் என்று மனதில் பட்டதால்தான்,
ஆசிரியரா நீங்கள் என்று மீனாகுமார் அவர்களைக் கேட்டிருந்தேன்...
 
உண்மைதான் தோழர்களே... கற்பிக்கும் விதம் மிக முக்கியம். எதையும் புரிந்து படித்து விட்டால் அது மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விடும். நம் பள்ளிக்கூடங்களில் அவ்வாறு படிப்பதற்க்கு பெரும்பாலும் நேரம் அமைவதில்லை. அதனாலேயே நானும் பள்ளிக்கூட கல்வியில் மிகவும் குன்றிய மதிப்பெண்களையே பெற்றேன். ஆனால் கல்லூரியில் நாம் நம் விருப்பம் போல் படிப்பதற்க்கு சந்தர்ப்பம் கிடைக்கும். நானும் என் கல்லூரி படிப்பில் விளாசி விட்டேன்...

சரி. அனுபவக்குறள் தொடரும்....
 
அறிவு பற்றி முன்பு ஆழ ஆராய்ந்தோம். அந்த அறிவைப் பெறுவது எப்படி ? நாம் இப்பூமியில் தோன்றிய நாளில் சிறிய வேலைகளைச் மட்டுமே செய்யத் தெரிந்தவராக வந்தோம். அதில் எந்த வித ஏற்ற தாழ்வு இல்லை. எல்லோருமே ஒரே அளவு அறிவைப் பெற்றிருந்தோம் என்றும் சொல்லலாம். ஆனால் வளர்ந்துவிட்ட பின் வெவ்வேறு திறனளவு கொண்டுள்ளோம். அறிவை நாம் பல வழிகளில் பெறுகிறோம்.

புத்தியின் வழியே அறிவு வெகுவாகவோ மெதுவாகவோ வளரும். புத்தியை மூன்று வகையாக பிரிப்பர். கற்பூர புத்தி. வாழை மட்டை புத்தி. கரித்துண்டு வகை புத்தி. ஒருவர் ஒரு விசயத்தை சொல்ல வருவதற்க்கு முன்பாகவே சட்டெனவும் சரியாகவும் புரிந்து கொள்ளும் தன்மை இந்த கற்பூர புத்தி. சட்டென பத்திக்கும். அடுத்தது கரித்துண்டு. கொஞ்சம் சூடேற்றி வகைப்படுத்திக் கொடுத்தால் பத்திக்கும். அதாவது ஒரு விசயத்தை விளக்கிச் சொன்னால் சரியாக புரிந்து கொள்ளும் தன்மை. வாழை மட்டை என்னதான் பத்த வைத்தாலும் பத்திக் கொள்ள வெகு நேரம் பிடிக்கும். இந்த வகையை நாம் இங்கு பார்க்கப் போவதில்லை.

கற்பூரமாக இருந்தாலும் கரியாக இருந்தாலும் இந்த உலகம் நடக்கும் விதத்தை இந்த உலகத்தைப் பார்த்துத்தான் கற்றுக் கொள்ள முடியும். வேறு வழியில்லை. வேறு உலகில் எப்படி இருக்கிறதோ நமக்குத் தெரியாது. இந்த உலகம் இப்படித்தான் இயங்குகிறது. அதனால் நாம் நம் அறிவை வளர்க்க வேண்டுமானால் முதலில் கவனிக்க வேண்டும். இங்கு என்ன நடக்கிறது என்பதை உணர வேண்டும். அப்படி உணர்வதற்க்கான வழிகள் யாவை ??
 
நாம் ஒரு முறை செய்தித்தாள் படித்தால் நாம் உண்மையில் எவ்வளவு செய்தி படித்திருக்கிறோம் ? ஒரு செய்தித்தாளில் 100 செய்திகள் இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் ஒரு முறை படித்த பின் எத்தனை செய்திகளை படித்திருப்பீர்கள். ஒருவர் 24, மற்றொருவர் 40, இன்னுமொருவர் 65. செய்தித்தாளை வரிகள் விடாமல் படிப்பவர்களைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். அவர்கள் வேண்டுமானால் 95-100 வரை படிப்பர். உண்மையில் 100 செய்திகள் இருந்தாலும் நாம் பாதி செய்திகளையே படிக்கிறோம் என்பது யதார்த்தமான உண்மை. நாம் அவ்வளவு தான் கவனிக்கிறோம்.

செய்தித்தாளும் உடனடிச் செய்திகளும் (breaking news) வராத காலத்திலே செவிகளால் கேட்டு உணர்வதே முக்கியமான வழியாக இருந்திருக்க வேண்டும். இன்றும் செவிகளால் கேட்டு அறிவது நிறையவே இருக்கிறது. 4.50 பேரூந்து வந்து விட்டதான்னு தெரியலையே. யாரிடமாவது கேட்போமான்னு நினைத்துக் கொண்டிருக்கும் போதே பக்கத்திலொருவர் இன்னொருவரிடம் அதே கேள்வியைக் கேட்பார். அவரும் -இல்ல சார்.. இன்னைக்கு இன்னும் காணல... லேட்டு போல...- ன்னு சொல்லும் போது நாம் ஏதும் செய்யாமலேயே நமக்குத் தேவையான தகவல் காற்றில் பறந்து வந்து கொண்டிருந்ததைக் கேட்டிருந்தோமேயானால்........

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.
 
ஆங்கில புத்தகங்களில் கவனித்தல் (Listening) பற்றி எக்கச்சக்க பாடங்கள் உள்ளன. செயலூட்டம் மிக்கவர்கள் (Effective people) வளவள கொழகொழ என்று பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள். கூர்மையாக கவனிப்பார்கள். யாரும் பேசாதிருக்கும் போதுதான் அவர்கள் பேசுவார்கள். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது வேறு யாராவது பேச ஆரம்பித்தாலும் கூட பேச்சை நிறுத்தி கவனிக்க ஆரம்பித்து விடுவார்கள். இதைத்தான் வள்ளுவர் கூறியது-

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.


இந்த கேட்கும், கவனிக்கும் திறனை ஒரு செல்வம் என்றே கூறுகிறார். அதுவும் இது அறிவுத் திறனை வளர்க்கும் செல்வம் அல்லவா... எனவே இது செல்வத்திற்ககெல்லாம் தலையாய செல்வம் என்கிறார் திருவள்ளுவர்.

செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.
 
Last edited:
சில சமயங்களில் நாம் கேட்பது உடனடியாகவே உதவிவிடும். பலசமயங்களில் இன்று கவனித்த செய்திகள் இன்னொருநாள் பயன் கொடுக்கும். ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்து வரும் பெரியவர்களில் சொற்களை நாம் கூர்ந்து கவனித்திருந்தால் அது கண்டிப்பாக நமக்கு பின்னொருநாளில் நாம் துன்பப்படும் வேளையில் ஊன்றுகோலாக உதவி செய்யும்.

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.


சரி. யார் எதைச் சொன்னாலும் கேட்டு விடலாமா ? இங்கு தான் அறிவையும் கேள்வி ஞானத்தையும் இயைந்து பயன்படுத்த வேண்டும். எவ்வளவு அளவாக இருந்தாலும் அது நல்ல விசயங்களையே கேட்க வேண்டும். நமக்கோ மற்றவர்க்கோ தீங்கு விளைவிக்கும் விசயமென்றால் உடனடியாக நிறுத்திவிட வேண்டும். இன்றைய உலகில் தேவையில்லாத விசயங்கள் தேவையின் அளவுக்கு வெகு அதிகமாக கிடக்கின்றன. அவையெல்லாம் கவனிக்காது பார்க்காது உணராது விட்டு விட வேண்டும். உதாரணமாக, இணையத்தில் தேவையில்லாத செய்திகளும் மனத்தை அலக்கழிக்கும் விசயங்களும் ஏராளமாக கொள்ளளவில் உள்ளன. அவைகளில் நம் பொன்னான நேரத்தை செலவு செய்வதை தவிர்க்க வேண்டும்.

நல்ல விசயங்களைக் கேட்கும் போது தான், நம் மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றும். நல்ல எண்ணங்கள் தோன்றினால் தான் நல்ல செயல்கள் உருவாகும். நல்லவைகளே நடக்கும். எனவே... கெட்டவைகளிலிருந்து சற்றும் யோசிக்காமல் உடனே விலகுவது அவசியம்.

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.


அன்று பேசுவதற்க்கோ, பாடுவதற்க்கோ, நடனமாடுவதற்க்கோ மேடைகள் இருந்தன. ரசிகர்கள் ஏராளமானோர் இருந்தார்கள். மேடையில் ஏறுபவர்கள் அவ்வளவு சாதாரணமாக ஏறிவிட முடியாது. உண்மையான திறமை இருந்தால் மட்டுமே இடம் பிடிக்க முடியும். மேடையில் ஏற்றுபவர்களைத் தேர்வு செய்யும் குழுக்கள் பல விதி முறைகளையும் தேர்வுகளையும் கையாளும். ஆனால் இன்று...

இந்த வலைப்பூக்களும் (blogs) விவாத மேடைகளும் (forums) யார் வேண்டுமானாலும் எல்லோருக்கும் தம் எண்ணங்களைச் செய்யலாம் என்று முன்பிருந்த மேடை வழக்கங்களைத் தகர்த்தெறிகின்றன. அது நல்ல விசயமாக இருந்தாலும் கூடவே நம் தேர்வு செய்யும் குழுக்களின் விதிகளும், தேர்வுகளும் இப்போது எல்லோர் மீதும் செய்விக்கப்படும். அவ்வளவுதான்.
 
கேள்வி பற்றியும் அதன் தன்மை பற்றியும் ஆய்ந்தோம். அடுத்து....

துன்பம். நீர் போன்று வழிந்தோடும் வாழ்வில் அவ்வப்போது வந்து போகும் துன்பம். துன்பமில்லாத வாழ்வு சுவையாக இருக்காதென்பர். சில துன்பங்கள் உடனே நீங்கி விடும். சில துன்பங்கள் நீங்க சில காலமாகும். இன்னும் சில துன்பங்கள் போகிற போக்கில் சுவடுகளை ஏற்படுத்தி விட்டுச் செல்லும். சரி. எது எப்படியாயினும், என்னைத் துன்பம் தொற்றிக் கொள்ளும் போது நான் முதலில் என்னைக் கேட்கும் கேள்வி.... இவ்வுலகிலேயே முதன்முதலில் நான் தான் இத்துன்பத்தை அனுபவிக்கப் போறேனா ?? என்றுதான். அங்கேயே எனக்கு சில விடைகள் கிடைத்து விடுகிறது. அப்போ எனக்கு முன்னர் அதே துன்பத்தை அனுபவித்தவர்கள் அதிலிருந்து எப்படி மீண்டார்கள் என்று. அதை அறிந்து கொண்டும் நம் சூழ்நிலையையும் பொறுத்து சரியான முடிவெடுத்து துன்பத்தைக் கையாள்வது பழகிப் போய்விடும்.

சரி. அவ்வாறு துன்பம் வரப் பெறின் நம் ஞானத்திற்க்கும் எட்டாத அளவு சென்று விட்ட பின் என்ன செய்வது என்று தெரியாமல் பல முறை விழித்திருக்கலாம். அப்போது தான் பெரியவர்களின் துணை நமக்கு மிகவும் ஊன்றுகோலாக இருக்கும். பெரியவர்களின் வார்த்தைகள் நமக்கு மிகவும் மருந்தாக அமையும். நான் சில முறைகள் சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் போது என் மனநிலையை உணர்ந்து என்னவென்பதை அறிந்து என்ன செய்யலாம் என்று பல யோசனைகளைத் தெரிவிப்பார் என் தாயும் என் தந்தையுமாகிய என் அம்மா. அவர்களிடம் பேசிவிட்ட பின்னர் மனது லேசாகிவிடும். மனதில் என்ன செய்யலாம் என்ற திட்டமும் உருவாகிவிடும். இதே போல் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் நம்மைச் சுற்றி இருக்கும் பெரியவர்கள் நமக்குத் துன்பம் ஏற்படும் போது மிகவும் உதவியாக இருப்பார்கள். பல சமயங்களில் -ஆஹா அவர்கள் இருக்கிறார்கள்.. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்- என்று எண்ணும் போது கலக்கமுற்ற மனது விடுதலை பெற்ற பறவையாக சிறகடிக்கும்.
 
கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு நான் கூறுவது அனுபவமாய்ப் புரியும். கூட்டுக் குடும்பங்கள் என்று சிதைந்து விட்டதோ அப்போதே பல துன்பங்களும் தொற்றிக்கொண்டு விட்டன. சரி. விசயத்துக்கு வருவோம். இவ்வாறு துன்பம் நம்மை வாட்டும் போது பெரியவர்களின் துணை நமக்கு மிகவும் ஆறுதலாக இருக்கும். அவர்களின் சொற்கள் நமக்கு மருந்தாக அமையும். ஆகையால் எப்பாடு பட்டும் மூத்தவர்களின் பெரியவர்களின் துணையை நட்பினை ஆராய்ந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல்.
 
பெரியவர் என்றால் யாரை குறிப்பிடுகிறார் வள்ளுவர் என்று பல முறை சிந்தித்திருக்கிறேன். வயதில் மூத்தவர் மட்டும் பெரியவரா. சரி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கிரிக்கெட் விளையாடுவாரா ? அவர்தான் நாட்டிற்க்கே முதல்வராச்சே.... சிரிசாந்த் பந்து வீச, ஆறு பந்துகளையும் ஆறு ஆறுகளாக மாற்றுவாரா... இல்லை. எய்ட்ஸ் நோய்க்குத் தான் அவரே மருந்து கண்டு பிடித்துவிடுவாரா ??? முடியுமா.... கண்டிப்பாக முடியும். ஆனால் இன்றே செய்யச் சொன்னால் அவர்களால் முடியாது. சில காலங்கள் பயிற்சி கொடுத்தால் கண்டிப்பாக முடியலாம்.

இங்கு கீழே இருக்கும் செய்தி என்ன.... அந்தந்த துறையில் அனுபவம் பெற்றவர் அந்தந்த துறையில் மூத்தவராகிறார்.. பெரியவராகிறார். எனவே பெரியவர் என்று கூறும் போது வயதை மட்டும் குறிக்கவில்லை.. அனுபவத்தையும் அறிவையும் சேர்த்து குறிப்பது தெளிவாகிறது.

அப்படிப்பட்ட பெரியவர்கள் நம் கூட இருக்கும் போது நமக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கும். நாம் தவறு செய்யும் போது நம்மைக் கடிந்து நாம் செய்யும் தவறைச் சுட்டிக்காட்டுவார்கள் அவர்கள். அப்படிப்பட்ட பெரியவர்களைச் சபையில் கொள்ளாத மன்னன் வெளியிலிருந்து கெடுப்பவர்கள் இல்லையென்றாலும் தானாக முட்டாள்தனமான காரியத்தைச் செய்து கெட்டுவிடுவான்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.


இது மன்னருக்கு மட்டுமல்ல.. இன்று யாவர்க்கும் பொருந்தும். இடித்து அறிவுரை கூறும் பெரியவர்களோ, நண்பனோ.. உறவினர்களோ இல்லாது போனால் நாமே கெட்டுவிடுவோம்.
 
அரசியல் தொடங்கி வலைப்பூவரை இக்காலச் சூழல்களில் பொருத்தி
நீங்கள் எழுதிவரும் இக்குறள் தொடர்..

இம்மன்றத்தின் பெரும் பெருமைக்குரிய பதிவுகளில் ஒன்று..

என் வாழ்த்துகளும் ஊக்கமும்..மீனாகுமார் அவர்களே..
தொடருங்கள்..நன்றி!
 
நீங்களே இரு முறை வாழ்ந்து பாருங்கள். ஒரு முறை எந்தப் பெரியவரின் உதவியும் இல்லாது. மறுமுறை உங்கள் மனதை வென்ற பெரியவர்களின் துணையோடும் வாழ்ந்து பாருங்கள்.

சரி. இப்படி எல்லவற்றுக்குமே பெரியவர்களை சார்ந்து இருக்கலாமா... எல்லாவற்றிற்க்குமே பெரியவர்களைச் சார்ந்திருப்போமேயானால் நாம் நம் சொந்த புத்தியைப் பயன்படுத்துவதையே நிறுத்திவிடுவோம். ஆகையினாலே.. பிரச்சனைகளை முடிந்த மட்டில் நாமே சமாளிக்க பார்க்க வேண்டும். நம்மை அது வெகுவாக பாதிக்கும் போது பெரியவர்களை அணுக வேண்டும். நம் நாடுகளில் பெரியவர்களிடம் கேட்டு கேட்டு பழகியே முற்காலத்தில் நிறையப் பேர் சொந்தமாக யோசிப்பதேயில்லை. மேலை நாடுகளில் இப்படி பெரியவர்களின் துணை கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் வாலிப வயதிலிருந்தே யோசிப்பதற்க்கு நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள்.
 
இன்னொரு முக்கியமான விசயம் இங்கு கவனிக்க வேண்டும். அனுபவ அறிவு பெரியதா.. இல்லை... பிறர் சொல் கேட்டு நடப்பது பெரியதா... இங்கு குழப்பம் பலமுறை வந்திருக்கிறது...

சிறு குழந்தையிடம் -ஏய் அந்த தீயைத் தொடாதே.. சுடும்- என்று கூறினால்.. முதலில் தன் அம்மாவோ அப்பாவோ கூறுகிறார்களே என்ற காரணத்திற்க்காக தொடாமல் இருக்கும். சில முறைகள்... பின்னர் ஒரு சமயம் அது தன் அவா தாங்காது ஒரு முறை தொட்டுவிடும். சூடு எப்படி இருக்கும் என்பது இப்போது அதன் மூளையில் தெளிவாக எழுதப்படுகிறது... வேறு ஒருமுறை அது தீயைத் தொடவே தொடாது.... அது அனுபவ அறிவு. அதனால் எந்த அறிவு சிறந்தது என்றால் அனுபவ அறிவே என்பது புலப்படுகிறது.

ஆனால் எல்லாவற்றையும் அனுபவித்தே உணர முடியுமா.... இல்லை... இறந்தால் எப்படி இருக்கும் என்பதையும்.. எயிட்ஸ் வந்தால் எப்படி இருக்கும் என்பதையும் சொந்த அனுபவத்தினால் உணர முடியாது. பிறரைப் பார்த்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

பெரியவர்கள் சொல்வதைக் கேட்பதே.. நமக்குப் பின்னால் வரும் இன்னல்களிலிருந்து தப்பிப்தற்க்காகவே...

ஆகவே.. சொந்த புத்தியை எங்கு பயன்படுத்த வேண்டும், சொல் புத்தியை எங்கு பயன்படுத்த வேண்டும் என்பதே தெளிவாக உணர வேண்டும்.
 
குறள் பற்றி குரல் கொடுக்க பலர் இருக்க, அனுபவ ரீதியாக, புரியக்கூடிய முறையில் குரல் கொடுக்கும் மீனாகுமாருக்கு வாழ்த்துகள் பல.
 
மீனாக்குமார்.. கலக்குறீங்க...

தனி உரையே வெளியிடலாம் போல...

இது மாதிரி சம்பவங்களை இணைத்து திருக்குறள் உரைகளை சேர்த்து வையுங்கள்.. பிற்காலத்தில் உதவும்.
 
பெரியாரைத் துணைகோடல் அதிகாரத்தில் பெரியவர்களின் துணையின் தன்மை எப்படிப்பட்டது, அது எவ்வளவு வலிமை வாய்ந்தது, அதை எப்படி பேணி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார் வள்ளுவர் பெருமான்.

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.


பெரியவர்களின் நட்பைப் பெறுதல் அரிய வாய்ப்பாகும். அதை எவ்வாறாயினும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை.


பெரியவர்களை தம்மோடு பெற்றுக் கொள்ளுதல் நமக்குரிய வலிமையில் எல்லாம் தலை.

பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.


நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுதல் பலரோடு செய்யும் பகைமையை விடக் கொடியதாகும்.
 
Back
Top