அனுபவ குறள் - புத்தகம்!!

---------------------------------
குறிப்பு: தொடர்ச்சியாக எழுதப்பட்ட இந்த அனுபவ குறளைத் தொகுத்து புத்தக வடிவமாக்கி கீழேயுள்ள சுட்டியில் அமைத்திருக்கிறேன்.

தலைப்பு: யாவர்க்கும் திருக்குறள்

http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=170

நன்றி.
---------------------------------

அனுபவ குறள் -

என் பண்ணிரண்டு வயதில் ஒருநாள் என்னை யாரோ ஒருவர் ?அறிவுகெட்டவனே- என்று திட்டிவிட்டார். அன்று என் மனமே என்னிடமில்லை.

அறிவு கெட்டவன், மதி கெட்டவன் என்றால் என்ன என்று ஆராய்ந்தேன். அறிவு என்றால் என்ன என்ற கேள்வி என்னைக் குடைந்து கொண்டிருந்தது.

அப்போது −
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு


என்று பள்ளிக்கூடத்தில் படித்த்த ஞாபகம் வரவே... திருக்குறள் புத்தகத்தை எடுத்தேன்.

ம்... சரி.. யார் என்ன சொல்வதை நாம் கேட்டாலும் அதில் என்ன உண்மை இருக்கிறது.. அதன் உண்மையான பொருளென்ன என்பதை ஆராய்வது அறிவு... என்ன அருமையான சொற்களைய்யா... அறிவில்லாதவன் யார் சொல்வதையும் அப்படியே கேட்டு நம்பி பின்னர் ஏமாந்திடுவான். அறிவுடையவன் ஏமாற மாட்டான்.

உண்மைதான். அறிவிற்க்கு நல்லதொரு விளக்கம் கிடைத்தது.
ஆனால் அது மட்டுமா அறிவு??. திருக்குறள் புத்தகத்தை மீண்டும் புரட்டினேன். 43வது அதிகாரமான அறிவுடைமை அதிகாரத்தில் என் கண்கள் நிலைத்தன. நான் படித்த அந்தக் குறள்-

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அ?தறி கல்லா தவர்.


இக்குறளை அன்று நான் படித்திருந்தாலும் என்னால் முழு அளவில் புரிந்து கொள்ள முடியவில்லை. அதே குறள் என் மனதினுல் பல ஆண்டுகள் ஓடிக்கொண்டே இருந்த்த. பின்னர் சில ஆண்டுகள் கழித்து இக்குறளை மீண்டும் மீண்டும் படித்து பொருள் விளங்கினேன். அதில் ஒரு குறிப்பு. இக்குறளில் -ஆவ தறிவார்- என்ற சொல் மிகவும் ஆழம் வாய்ந்தது.

ஒருவரால் வரப்போவதை எவ்வாறு முன்னமே அறிய முடியும் ?
நாளை நடக்கப்போவதை... அடுத்த வாரம் நடக்கப்போவதை...
அடுத்த மாதம் நடக்கப்போவதை... அடுத்த ஆண்டு நடக்கப்போவதை... ஐந்தாண்டு கழித்து நடக்கப்போவதை ! இதெல்லாம் ஒருவரால் அறிந்திருக்க வேண்டுமென்றால் அவையெல்லாம் அவரால் சரியாக திட்டமிடபட்டிருக்கப்பட வேண்டும். வரக்கூடிய இன்னல்களை முன்னமே அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு இன்னல் வருங்கால் அவற்றை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டிருக்க வேண்டும்.

இதை ஆங்கில முறையில் கூறலாயின்... Planning, Scheduling, Managing, Risk Identifying, Mitigation developing.. என்ற பற்பல விரிவான அத்தனை துறைகளும் இந்த ஒரே சொல்லான -ஆவ தறிவார்- சொல்லில் அடங்கியிருப்பது புரிந்த்த. அதை நினைத்துப்பார்க்கவே பிரம்மிப்பாக இருந்தது.

இப்போது எனக்கு அறிவு என்ற சொல்லிற்க்கான பொருள் விரிந்து கொண்டே செல்வது போல் தோன்றியது.


அனுபவக்குறளும் குறளின் போற்றுதலும் தொடரும்.....
 
Last edited:
மீனாகுமார்! திட்டமிட்டுச்செய்தால் ஆவது அறியலாம் என்பதை அழகாக சொல்லியுள்ளார் வள்ளுவர். அதை எமக்குத் தந்த உங்களுக்கு நன்றி. தொடர்ந்து இதே போன்று தாருங்கள்
 
இதை தானே அவ்வையும் அனுவை துளைத்து அதனுள் ஏழு கடலையும் புகுத்தியது போல குறுகத் தறித்த குறள் என்று பாடியுள்ளார்.
 
சுவாரசியமான திரி தொடங்கியமைக்கு பாராட்டுக்கள்...
குறள்களை குறிப்பிடும்போது, இரண்டாவது குறளைக் குறிப்பிட்டதைப் போல,
குறள் வடிவிலேயே தொடர்ந்தும் தாருங்கள்...
ஆமாம்,
நீங்கள் ஆசிரியரா?
ஆசிரியர் அல்லாது போனால், சிறு வருத்தம்.
ஏனென்றால், உங்கள் விளக்கும் முறை எளிமையாக, விளங்குவதோடு, ஒன்றித்து வாசிக்கவும் விளங்கவும் வைக்கிறது.

மீண்டும் பாராட்டுக்கள்... தொடருங்கள்...
 
சபாஷ் மீனாகுமார்...

உலக பொதுமொழி என்ன பொது நூல்தானே குறள்...
அதை அனுபவ நீதியாக சொல்லும் போது.. ஆகா ஆகா.. தொடருங்கள்..
 
அறிவு இன்னும் வேறு என்னவெல்லாம் தன்மை கொண்டது என்று ஆராய்ந்து பார்த்த போது அறிவு அற்றங்காக்குங்கருவி என்றாரே வள்ளுவர் பெருமான்....

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.


மனிதன் கடந்த காலத்தையே தான் அறிவான். ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறியாவண்ணம் அமைந்துள்ள இவ்வுலகில்... அதை எப்படி கையாள்வது என்று ஆராயும் போதுதான்
அறிவின் துணை நமக்குத் தேவைப்படுகிறது. மிக முக்கியமாக பின்நாளில் வரப்போகும் துன்பத்தை உணர, உணர்ந்துபின் அதைத் தவிப்பதற்கான திட்டமிடல் போன்றவை செய்ய அறிவின் துணை
அவசியமே. அதனாலே அறிவு அற்றங் காக்கும் கருவி.

இளமையிலே பார்க்கும் பொருள் எல்லாம் பசுமையாகத் தோன்றும் என்பார்கள். அது இளமைக்கே உரிய அழகு. அந்த இளமையின் வேகம்.. மிக விரைவான வேகம். அதே வேகத்தில் மனதும் சென்று கொண்டுதான் இருக்கும். மனதும் இளமையும் ஒரு வேகத்தில் செல்ல, படிப்படியாக வாழ்வில் பிரச்சனைகளைச் சந்திக்க ஆரம்பித்த பின்னர்.. மனதின் வேகம் மெதுவாக குறையும். சரியாக சொல்ல வேண்டுமாயின்... மனது பக்குவப்படும். பின்னர் எது சரி, எது தவறு என்று எளிதாக விளங்கும். அனுபவத்தினால் பெறும் அறிவின் அளவும் பெருகும். அப்போது மனம் சென்ற இடமெல்லாம் செல்லாமல் சரியான திசையிலே மட்டும் பறந்தோடும். காலப்போக்கில் மனது
பக்குவப்படும் வேளையில் மனத்தை ஒரு நிலைப்படுத்தி நன்மை தரும் செயல்களில் மட்டுமே செலுத்தும் போது, வாழ்வு இனிக்கும்.

சென்ற இடத்தில் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.


இன்னும் அறிவு பற்றி சிறு ஆராய்ச்சி முடித்து விட்டு பின்னர் வீரம் விளைஞ்ச மண்ணு நம்ம மண்ணு...
 
மீனாகுமார், திருகுறள் நீங்கள் தந்த விளக்கம் உன்மையானதாக புதுமையானதாக் இருகிறது.
உங்கள் அவதாரை பார்த்தவாரே குறளை படிக்கும் போது நன்றாக புரிகிறது
நண்றி, தொடருங்கள்
 
அக்னி;226936 said:
சுவாரசியமான திரி தொடங்கியமைக்கு பாராட்டுக்கள்...
குறள்களை குறிப்பிடும்போது, இரண்டாவது குறளைக் குறிப்பிட்டதைப் போல,
குறள் வடிவிலேயே தொடர்ந்தும் தாருங்கள்...
ஆமாம்,
நீங்கள் ஆசிரியரா?
ஆசிரியர் அல்லாது போனால், சிறு வருத்தம்.
ஏனென்றால், உங்கள் விளக்கும் முறை எளிமையாக, விளங்குவதோடு, ஒன்றித்து வாசிக்கவும் விளங்கவும் வைக்கிறது.

மீண்டும் பாராட்டுக்கள்... தொடருங்கள்...

நன்றி அக்னி. குறளை குறள் வடிவிலேயே தருகிறேன். நான் ஆசிரியர் இல்லை. மென்பொருள் பொறியில் துறையில் பொறியாளராகவும், இயக்குனராகவும் (Director) பணிபுரிகிறேன். தமிழில் Master of Arts (M.A.) படிக்க விரும்புகிறேன் இன்னும் சில ஆண்டுகளில்...
 
இத் தொடரை வாசிப்பவர்களுக்கு ஒன்றை விளக்க கடமைப்பட்டிருக்கிறேன். திருக்குறளுக்கு பலர் விரிவுரை எழுதியுள்ளனர். நான் இங்கு திருக்குறளுக்கு விளக்கமோ, விரிவுரையோ எழுத முயலவில்லை. என் அனுபவத்தில் திருக்குறள் எனக்கு எவ்வாறு துணை நின்றது என்பதையும் நான் திருக்குறளில் புரிந்து கொண்ட சில நுணுக்கங்களையும் மட்டுமே வெளிப்படுத்த முயல்கிறேன்.

அனைத்து குறளையும் கொடுப்பதென்பது இயலாத காரியம். என்னை முக்கியமாக பாதித்த குறள்களை மட்டுமே சான்றுக்கு எடுத்துக் கொள்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிழையேதும் இருப்பின் உடனே சுட்டிக்காட்டவும் உங்கள் அனுவங்களையும் பகிர்ந்து கொள்ளவு தயங்க வேண்டாமென்றும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் எனக்கு நேரம் கிடைப்பதைப் பொறுத்தே இத்தொடரின் வேகமும் இருக்கும் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இன்றைய நவீன இயந்திர உலகில் தகவல் தொடர்புகள் (Communication) பன்மடங்கு பெருகிவிட்டது. இயந்திரங்கள் பேசிக்கொள்வது ஒரு புறம் இருந்தாலும், ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றமும் முன்பில்லாத அளவுக்கு இப்போது பெருகியுள்ளது. அவ்வாறு தகவல் பரிமாறிக் கொள்ளும் வேளையிலே பற்பல தவறுகள் நிகழ வாய்ப்பிருக்கிறது.
எழுத்துப் பிழைகளை எளிதில் கண்டுபிடித்திடலாம். முக்கியமாக அவை கருத்தையும் பொருளையும் பெரும்பாலும் பாதிப்பதில்லை. ஆனால் முக்கியமாக ஒரு பொருளை சொல்பவரும் அதை பெறுபவரும் ஒரே பொருளைத்தான் கொள்கிறார்களா என்பதில்தான் பற்பல சிக்கல்கள் வருகின்றன.

ஒரு விசயத்தைச் சொல்பவர் அவர் மனதினுள் ஒரு கருப்பொருளோடு (Context) சுருக்கமாக சொல்வார். அப்போது கூட இருக்கும் சில தகவல்களையும் சேர்த்து சொல்ல மறந்திடுவார். ஆனால் அதைப் பெறுபவர் வேறு விதங்களில் பொருள் கொள்ள வாய்ப்பிருக்கிறது.இங்கு தான் பல சிக்கல்கள் இயற்கையாகவே தோன்றுகின்றன. இது இன்றைய நவீன உலகில் அன்றாடம் நிகழும் நிகழ்வாகும்.

எண்பொருள் வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.


நாம் பிறருக்குச் சொல்ல வேண்டியதை தெளிவாகவும் முழுமையாகவும் குறிப்பாகவும் பிறரிடம்
சொல்லி நாம் பிறர் கூறுவதைக் கேட்கும் போது கவனமாக் கேட்டு கூறியவரின் கருத்தை அவர் வழியிலேயே புரிந்து கொண்டிருக்கின்றோமா என்பதையும் சரிபார்த்துக் கொள்வது
அறிவுடையவரின் செயல்.

இந்த தகவல் பரிமாற்றத்தில் சொல்வன்மை என்ற அதிகாரமும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதை பின்னர் பார்க்கலாம்.

மேலும் உலகத்தோடு ஒட்ட வாழ்வது அறிவு. அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவது அறிவுடையார் செயல் என்பது வள்ளுவர் வாக்கு.

எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு.

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்.


அறிவு பற்றி எனக்கு நல்ல கருத்து பிறந்து ஆழப் பதிந்தும் விட்டது.

அடுத்து வீரம் பற்றி சில அனுபவம்.
 
நல்ல புதுமையான முயற்சி, தொடர்ந்து கொடுங்கள், விகடன் போன்ற நிறுவனங்கள் பார்த்தால் புத்தகமாகவும் வரலாம்.
 
நம் நாடுகளில் போர் என்றால் அக்காலத்தில் சில சட்டதிட்டங்களும் நியாய தர்மங்களும் இருந்தன. சில சமயங்களில் சிலர் அதை மீறியிருந்தாலும் பெரும்பாலும் அவை கடைப்பிடிக்கப்பட்டன. எதிரி என்றாலும் நேருக்கு நேர் மோதுவதையே வீரம் என்று
கருதினர். உன் வித்தையெல்லாம் வீரத்தையெல்லாம் முகத்தின் முன்னே காட்டுவதே வீரமாக இருந்தது. மறைந்திருந்து தாக்குவது, தூங்கும் போது போர் புரிவதோ, இல்லை எதிரி தூங்கும் போது கல்லைப் போட்டு கொல்வதோ வீரமாக கருதப்படவில்லை.

அதே போல் இரவில் போர் புரிவது, அதாவது ஆதவன் மறைந்தபின் போர் புரிவது வீரமாக கருதப்படவில்லை. வீரப்புண் என்பது முன்னால் நெஞ்சிலே வாங்கியிருக்க வேண்டும். குருதி வழிந்தாலும் முன் மார்பிலிருந்து வழிய வேண்டும். புறமுதுகு காட்டுவது கேவலமாக கருதப்பட்டது. நெஞ்சில் துணிவிருந்தால் அது நேருக்கு நேராய் வரட்டும் என்றிருந்தது.

ஆனால் அதே கால கட்டங்களில் புவியின் பிற பகுதிகளில் போர் வேறு முறையில் புரியப்பட்டது. எந்த முறை கையாள்கிறோம் என்பதில் அவர்களிடம் ஒரு வரைமுறையில்லை. ஆனால் வெற்றி தோல்வி மட்டுமே குறியாக இருந்தது. அதனால் போர் என்றால் இரவு 2 மணிக்கு எல்லோரும் தூங்கிய பின்னரே ஆரம்பிப்பார்கள். இருளில்
எதிரியின் கண்ணில் படாது சென்று தாக்குவது ஒரு முறையாக இருந்தது. நம் மண்ணில் அவையெல்லாம் கோழைத்தனமாக கருதப்பட்டது.

வேறு வழியின்றி நாமும் இன்று அம்முறைக்கு மாற வேண்டியதாகி விட்டது. சீனாவை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஓர் மன்னன் ஒரே நாடாக இணைத்து விட்டான். முக்கியமாக பின்னால் வந்த மன்னர்களும் அதே ராஜ்ஜியத்தை பின்பற்றி ஆண்டார்கள். ஆனால் இந்தியாவில் அவ்வாறு இல்லாததால் பற்பல குறுநில
மன்னர்கள் ஆண்டார்கள். அவர்களிடம் ஒற்றுமையும் இல்லை. ஆனால் அப்படி ஒரு ஒற்றுமைக்கான தேவையும் இல்லாதிருந்தது. ஏனெனில் இந்தியாவே ஒரு தனி உலகம் போல் இயங்கிக் கொண்டிருந்தது. பின்னர் பற்பல தாக்குதல்கள் நிகழ்ந்ததெல்லாம் வரலாறு.

சரி. நம் காட்சிக்கு வருவோம். அந்த கடுமையான போர்க்களத்தில் ஆண் யானையானது எதிரிகளால் தன் உடல் முழுக்க அம்புகளால் துளைக்கப்பட்டிருந்தும், மிகுந்த மன வலிமையோடும் ஊக்கத்தோடும் தன் இறுதி மூச்சு வரை பகைவர்களை எதிர்த்து போராடும். அதன் வலிமைக்கும் ஊக்கத்திற்க்கும் ஈடு இணையே இல்லை.

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றும் களிறு.


இது வீரம் வலிமை ஊக்கம் ஆகிய மூன்றும் இணைந்த உச்சத்தின் மாபெரும் சான்று.

இக்குறள் என் மனதைக் கொள்ளை கொண்டு பசுமரத்தாணி போல் பதிந்த குறள்.
 
பொருட்செல்வம் அழியும் தன்மையுடையது. பணம் இன்று வரும்
நாளை போகும் என்பார்கள். ஒருவனுடைய வாழ்வில் எது நிலையாக
நிற்கிறது ? அவன் கற்ற பாடங்களும் அந்த பாடத்தினால் அவன்
உள்ளம் பெரும் வலிமையும்.

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.


ஒருவன் தன் குழந்தைகட்கு பொருள் சேர்க்கின்றானா இல்லையா
என்பது முக்கியமில்லை. ஆனால் அவன் வாழ்வு முழுதும் நிலைத்து நிற்கும் வலிமையான உள்ளத்தைப் பெறுவது எப்படி என்று அவன் குழந்தைகட்கு கற்றுக்கொடுப்பதுதான் மிக முக்கியம். அது அவன் கொடுக்கப்போகும் பொருட்களின் மதிப்பை விட பன்மடங்கு அதிகமாகும்.
 
ஊக்கம் இல்லாத உடல் பிணம். ஊக்கமில்லாதவனால் எந்த ஒரு பிரயோஜனமுமில்லை. ஒருவன் எது வைத்திருந்தாலும் அவன் அது வைத்திருப்பதாக கருதப்பட மாட்டாது. ஒருவனிடம் ஊக்கமிருந்தால் அவனிடம் எது இருந்தாலும் இல்லையென்றாலும் அவன் அனைத்தும் கொண்டதாகவே கருதப்படுவான்.

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.
 
ஊக்கமுடைமை பற்றிய அத்தனை குறள்களும் அற்புதம். எல்லா குறள்களுமே ஊக்கத்தின் முக்கியத்துவத்தையும் அதன் சிறப்பையும் அழகாக எடுத்துரைக்கின்றன.

இந்த குறளைப்பாருங்கள் -

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்
.

உருவத்தில் பெரியதாக இருந்தாலும் ஊக்கம் கொண்ட புலி தாக்கினால் யானை பயந்து மிகக் கவனமாக கையாளும். ஊக்கமுடையவர்களிடம் வெகு ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும்.

அதே போல் உருவம் எப்படி இருக்கிறது என்பது முக்கியமில்லை. ஊக்கம் இருந்தால் எந்த உலகையும் ஆளலாம்.

ஊக்கமுடையவரிடம் மட்டும் ஆக்கம் நிறைந்து இருக்கும். ஒருவர் வாழ்வின் உயர்வும் அவர் கொண்ட ஊக்கத்தின் அளவைப் பொறுத்தே இருக்கும்.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.



அறிவும் பெற்று ஊக்கமும் பெற்றாகி விட்டது. நம் பயணத்தைத் தொடர்வோம்.
 
நீங்கள் முதன்முதலில் பங்குபெற்ற கூட்டம் (Meeting/Conference) உங்களுக்கு நன்றாக ஞாபகம் இருக்கும். அது அலுவலக கூட்டமாக இருக்கலாம் இல்லை வேறு எந்த கூட்டமாக இருந்தாலும் நீங்கள் பெரும்பாலும் அமைதியாக பிறர் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்திருப்பீர்கள். ஒவ்வொருவர் பேசுவதையும் கவனமாகவும் வியப்பாகவும் கூட பார்த்திருக்கலாம். நாம் முதன்முதலில் சிலர்முன்போ பலர்முன்போ பேசும் போது சிறிது பயமும் அதிக கவனமும் இருக்கும். தவறுகள் கண்டிப்பாக வந்திருக்கும். பிறகு நாமே திருத்திக்கொண்டு நமக்கென்று ஒரு ஸ்டைலையும் உருவாக்கியிருக்கலாம். போரில் கூட எளிதில் பங்குபெற்றிடலாம். ஆனால் கற்றவர் உள்ள அவையில் ஒரு சொல்லை சொல்லிப்பாருங்களேன். அவ்வளவு ஏன் ? இந்த தமிழ்மன்றத்திலேயே தவறான ஒரு செய்தியைச் சொல்லிப்பாருங்களேன். அதன் விளைவு எப்படியிருக்குமென்று.

அதனாலே ஆராயாமலும் நன்றாக யோசிக்காமலும் தான் சொல்லப்போகும் சொல்லினால் விளையப் போகும் விளைவுகளையும் சிந்திக்காமல் ஒருவர் பேச முற்படுவாராயின் அவர் படும் துன்பம் நாம் பலமுறை பார்த்திருப்போம். எனவே நாம் சொல்லப்போகும் சொல்லை கவனமாக கூற வேண்டும். நமக்கு வரும் துன்பமும் இன்பமும் நாம் சொல்லும் சொல்லினாலேயே அமைகிறது.

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.



யோசிப்பதற்க்கு எவ்வளவு நேரம் கூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சொல்வதை சுருக்கமாக தெளிவாக செயலூட்டம் (effective) மிக்கதாக கூற வேண்டும். நாம் சொல்லும் சொல் எவ்வாறு எத்தகைய தன்மை பெற்றிருக் வேண்டும் ?

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.



நாம் ஒரு சொல்லைச் சொன்னால், அதைச் சொன்ன பின்பு யாரும் பேசக்கூடாது. அதை எதிர்த்து ஒரு குரலும் வரக்கூடாது. அவ்வண்ணம் யோசித்து சரியான சொல்லைத் தேர்வு செய்து சொல்ல வேண்டும்.

இந்தக் குறள் என் சொல்வன்மையை மிக வெகுவாக உருமாற்றிக் கொடுத்தது. இது என் மனதைக் கொள்ளை கொண்ட மற்றுமொரு குறள். சிந்தித்து பேசுபவன் மனிதன். பேசிவிட்டு சிந்திப்பவன் முட்டாள் என்றும் கூற கேட்டிருக்கிறேன்.
 
மிக மிக மிக பாராட்டுக்குரிய திரி..

நன்றியும் வாழ்த்துகளும் − மீனாகுமார்..


மேலாண்மை, தகவல் தொடர்பு, சொல்லாற்றல் பற்றி இக்காலச் சூழல்களில்
நம் குறள்களைப் பொருத்தி, சுயமேம்பாடு, ரசனையைச் சொல்லி
மிக சுவாரசியமாய்க் கொண்டுபோகிறீர்கள்..

அருமையான இப்பணிக்கு என் ஊக்கமும் பாராட்டும்... தொடருங்கள்!
 
அனுபவக்குறள்கள் அசத்தல்...
வித்தியாசமாக ஒன்றிக்கின்றது மனதில்...
பாராட்டுக்கள்...
உங்கள் நேரம் கிடைக்கையில், தவறாமல் தாருங்கள்...

பி.கு:− தாங்கள் விரும்பியபடியே M.A. படித்து முடிக்க வாழ்த்துகின்றேன்...
 
Back
Top