அறிந்த மிருகம் அறியாத கதை- மூர்க்கமான முதலைகள் -1

gnanam51

New member


இதை ஒரு இராட்சத பல்லி என்று சொல்லி விடலாமா?
இது ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு என்பதோடு, தவளை போல நீரிலும், நிலத்திலும் இதனால் வாழமுடியும். இதன் வலுவான வால்கள் இரைகளைக் தாக்க உதவுகின்றன. ஆபிரிக்கா, ஆசியா, அமெரி்க்கா, அவுஸ்திரேலியா என்று நான்கு கண்டங்களிலும் தாராளமாகக் காணப்படுகின்றன.
நைல் நதிப் பல்லி
முதலையும் மூர்க்கனும் கொண்ட பிடி விடாதவர்கள் என்கிறார்கள். உண்மைதான் முதலைப் பிடியில் அகப்பட்டு விட்டால் மீள்வது முடியாத விடயந்தான். முதலை என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் புராதன கிரேக்க மொழியிலிருந்தே தோன்றியது என்கிறார்கள். “நைல் நதிப் பல்லி” என்று அவர்கள் இதை வர்ணித்திருக்கின்றார்கள். இந்த முதலைகளை உப்பு நீர் முதலைகள், நன்னீர் முதலைகள் என்று இரு பிரிவாக வகுக்க முடியும். குளங்கள் ஆறுகளில் காணப்படபவைதான் நன்னீர் முதலைகள். கடலில் வாழ்பவை உப்பு நநீர்முதலைகள். நன்னீர் முதலைகள் உப்புநீர் முதலைகளை விட அளவில் பெரியவையாக இருக்கின்றன. நைல் முதலைகளும், உப்பு நீர் முதலைகளும், எருமைகள், மான்கள், காட்டுப் பன்றி போன்றவற்றை பிடித்துண்ணுகின்றன. ஆனால் குளத்து முதலைகள் மீன்களையே உணவாகக் கொள்கின்றன.
சமிபாட்டுக்கு வயிற்றில் அமிலம்.
பார்ப்பதற்கு மெதுவாக அசையும் ஒரு உயிரினம் போல் தெரிந்தாலும், மிருகங்களைத் தாக்கும் சமயங்களில் மிக வேகமாக முதலைகள் செயற்படுகின்றன. சுறாக்கள், புலிகளைக் கூட இவை தாக்கிக் கொன்றிருக்கின்றன. இதன் வயிற்றிலுள்ள அமிலம் , இவை பிடித்துண்ணும் விலங்குகளின் குளம்புகள், எலும்புகளையெல்லாம் மிகச் சுலபமாகச் சமிபாடைடைய வைத்து விடுகின்றது. ஒரு பீ.பீ.சி ஆய்வறிக்கையின் போது நைல் முதலைகள் பற்றிய ஆச்சரியமான ஒரு தகவலை ஒளிபரப்பி இருந்தார்கள். அதாவது இதன் உடலில் நடக்கும் இரசாயண மாற்றங்கள், அதன் உடலில் அதிக அளவு அமிலத்தை உற்பத்தி செய்து, வயிற்றுள் இருக்கும் மிருகத்தின் உணவை இலகுவாக சமிபாடடைய உதவுகின்றது என்பதை இந்த ஒளிபரப்பு மூலம் அறிய முடிந்துள்ளது. முதலைகள் தமது சமிபாட்டு செயற்பாட்டை துரிதப்படுத்த கற்களைக் கூட விழுங்குகின்றன என்பது நமக்குத் தெரியாத ஒரு விநோதமான தகவல்.
காட்டில் ஒரு தோட்டி
சந்தர்ப்பம் கிடைத்தால் இறக்கும் நிலையை எட்டிய யானை, நீர் யானையைக் கூட இவை தாக்கி உண்டமை அவதானிக்கப்பட்டுள்ளது. இறந்த உடல்களை ஒரு கை பார்ப்பதிலும் முதலைகள் பின்னிற்பதில்லை. நகரில் காகங்கள் செய்யும் தோட்டி வேலையை காட்டில் முதலைகள் செ்யகின்றன. அது மாத்திரமல்ல . ஏனைய மிருகங்கள் கொன்றதைக் களவாடி உண்ணும் கில்லாடிகள் முதலைகள். இது பழங்களையும் உண்பதுண்டு என்பது இதன் கழிவுகளில் காணப்பட்ட விதைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இரவு வேட்டைக்காரர்களான இவற்றிற்கு இரவில் நன்றாகவே கண் தெரியும். மோப்ப சக்தியும் அபாரம். இதன் காரணமாக துாரத்திலுள்ள மிருகங்கள் தண்ணீரிலோ அல்லது தரையிலோ நிற்கும்போது, தன் மோப்ப சக்தி கொண்டு இது அறிந்து விடும். இதன் செவிப்புலனும் மிக நன்றாக இருக்கின்றது
அடிவயிற்றால் “ஓடும்” முதலைகள்
சிறு துாரமாயிருந்தால் அது நீரிலோ அல்லது தரையிலோ இதனால் வேகமாக ஓட முடியும். அவுஸ்திரேலியாவின் நன்னீர் வாழ் முதலையொன்று மணிக்கு 17 கி.மீற்றர் வேகத்தில் ஓடுவது பதிவிலுள்ளது. கியூபா முதலைகள், நியூகினி முதலைகள், ஆபிரிக்க குள்ள முதலைகள் உட்பட சில இனங்கள் “பாய்ச்சல்” முறை மூலம் நகர்வதாகச் சொல்லப்படுகின்றது. முதலைகள் வேகமாக ஓடுகின்றன என்று சொல்வது, பாம்பைப் போல அடிவயிற்றால் அசைந்து கால்களை துடுப்புகள் போலப் பரப்பி ஓடுவதுதான்!. இது கால்களை உயர்த்தி நிமிர்ந்து நடக்கும்போது, அதிக பட்சம் மணிக்கு 5 கிலோ மீற்றர் வேகத்தில் இவை நடக்கின்றன. இவை தாம் வாழுமிடத்தை விட்டு வெகுதுாரம் சென்றாலும், தமது இடத்தை சாியாகக் கண்டறிந்து மீண்டும் “தமது வீட்டுக்கு” வந்துவிடுகின்றன. வட அவுஸ்திரேலியாவில் மூன்று முதலைகள் தாம் வழமையாக இருக்கும் இடத்திலிருந்து 400 கி.மீற்றர் துார அளவிற்கு சென்றுவிட்டு, மீண்டும் அதே இடத்திற்குத் திரும்பியுள்ளன. இவற்றின் உடல்களில் ஆய்வாளர்கள் தடயமறியும் கருவிகள் பொருத்தி வைத்திருந்தமையால், இந்த அபூர்வ சிறப்பியலைக் கண்டறிந்துள்ளார்கள்.
கூடிவாழும் குணமுண்டு
இவை தனித்து வாழும். இவை ஒரு குழுவாக வாழாவிட்டாலும், உணவருந்தும்போதோ அல்லது வெயிலில் காயும்போதோ பல முதலைகள் கூடி ஒரு இ்டத்தில் நிற்கின்றன. உப்புநீர் முதலைகள் மூர்க்கத்தனம் அதிகம் கொண்டவை. பிராந்தியரீதியாக வாழும் இனம் இது! ஒரு வளர்ந்த ஆண் முதலை எந்தக் காரணம் கொண்டும் தன் பிராந்தியத்துக்குள் இன்னொரு ஆண்முதலை நுழைய அனுமதி்பபதில்லை. ஆனால் மற்றைய இனங்கள் இப்படி அடம்பிடிப்பதில்லை. முதலைகளுக்குள் ஒரு சர்வதிகார ஆட்சிபீடம் இரு்ககின்றது. தாம் வெயில் காயச் சிறந்த இடமாக இருந்தால், அது முதலில் அதிக எடையும் அளவில் பெரியதுமான ஒரு முதலைக்கே போய்ச் சேருகின்றது. நைல் முதலலைகளிடம் இந்தச் சர்வதிகாரப் போக்கு நிறையவே இருக்கின்றது. இனத்துக்கு இனம் வேறுபாடுகள் இருந்தாலும் “கூடல்” என்று வரும்போதும், ஒரு பெண்ணுக்காக வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதிக்கும்போதும், எல்லாமே ஆக்ரோஷமானவைகளாக மாறிவிடுவதுண்டு. பெண்ணாள நினைத்தால் மனிதனாகட்டும், மிருகமாகட்டும் அடிபாடுகள் தேடி வந்துவிடுகின்றன.
100 வயதுத் தாத்தாவும் இருந்துள்ளார்
நன்கு வளர்ந்த முதலைகள் ஒரு மீட்டர் நீளம் முதல் ஒன்றரை மீட்டர் நீளம் வரை வளர கூடியவை. சில முதலை வகைகள் 4.85(15.9அடி) நீளமும் 1200 கிலோ கிராம் எடையும் கொண்டவையாக பிரமாண்டமாக இருக்கும். முதலைகளில் சராசரி வாழ் நாள் 70 ஆண்டுகள் ஆகும். சில முதலைகள் 100 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. அவுஸ்திரேலிய மிருகக்காட்சிசாலையில் நன்னீர் முதலையில் ஒன்று 130 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து சாதனை படைத்துள்ளது. செம்மூக்கு முதலை அல்லது உவர்நீர் முதலை ஊர்வனவற்றில் மிகப் பெரிய விலங்கினமாகும். இலங்கைளின் இந்த இன முதலைகளைக் காண முடியும். இலங்கையை விட இந்தியாவிலும், தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும், வட அவுஸ்திரேலியாவிலும் இந்த இன முதலைகள் வாழ்கின்றன. இவற்றின் கழுத்துப் பகுதியில், ஏனைய இன முதலைகளை விட குறைவான செதில்கள் காணப்படுவது, இவற்றை இனங்கண்டுகொள்ள உதவுகின்றது.
ஒரே சமயத்தில் 100 முட்டைகள்
பெண் முதலை அழுகிய இலைதழைகள், மண் ஆகியவற்றைக் குவித்து கரையோரத்தில் கூடுகட்டுகிறது. அதில. ஒரே சமயத்தில் 100 முட்டைகள் வரை இடுகின்றது. முட்டைகள் நீள் உருண்டை வடிவத்தில், கடினமான ஓட்டுடன் காணப்படுகின்றன. பெண் முதலை அவற்றை மூடிவைத்து எதிரிகளிடமிருந்து பாதுகாக்கின்றது. பிறகு கூட்டை மூடியிருக்கும் இலைதழைகளை மக்கிப் போகச் செய்ய, அதன் மேல் தண்ணீர் தெளிக்கின்றது. இதன் மூலம் முட்டைகளை அடைகாக்கத் தேவையான வெப்பம் உண்டாகின்றது.
அடைகாக்கப்படும் முட்டைகளிலிருந்து பெண் முதலைகள் ஏறத்தாழ 100 நாட்களில் வெளிவருகின்றனமுட்டைகளிலிருந்து ஆண், பெண் ஆகிய இரண்டு முதலைகளுமே வெளிவருகின்றன. ஒரு பக்கம் தண்ணீர் ஓரமாகவும் மறுபக்கம் சூரியனைப் பார்த்தபடியாகவும் கூடு அமைக்கப்பட்டிருந்தால், வெப்பமான பகுதியிலுள்ள முட்டைகள் ஆணாகவும், குளிரான பகுதியிலுள்ள முட்டைகள் பெண்ணாகவும் பொரிந்து வரும்.
அக்கறையான அம்மா அப்பா
முட்டையிலிருந்து சத்தம் கேட்கையில் தாய் அந்தக் கூட்டை கலைத்துவிடுகிறது. குஞ்சுகள் அவற்றின் பிரத்தியேக பல்லால் முட்டையின் ஓட்டை உடைக்கவில்லையென்றால், தாய் அந்த வேலையைச் செய்கிறது. தாய் முதலை தன்னுடைய பெரிய தாடையில் குஞ்சுகளை மெதுவாக வெளியே எடுத்து, அதன் நாக்கின் கீழிருக்கும் பை போன்ற குழிவில் அவற்றைப் போட்டு தண்ணீருக்கு அருகே கொண்டு செல்கிறது. பிறந்த உடனே குஞ்சுகள் தன்னிச்சையாகச் செயல்பட ஆரம்பிக்கின்றன. பூச்சிகள், தவளைகள், சிறு மீன்கள் போன்றவற்றை உடனே வேட்டையாட ஆரம்பிக்கின்றன. பாதுகாப்புணர்வுள்ள சில அம்மா முதலைகள், சில மாதங்களுக்கு அவற்றினருகே இருந்து, அந்தச் சதுப்பு நிலத்தில் அவற்றைப் பராமரிப்பதற்கான இடங்களை ஏற்படுத்துகின்றன. அங்கே முதலைத் தகப்பனும் தன் பங்கிற்குக் குஞ்சுகளைக் கவனித்து பாதுகாக்கிறது.
போலிகளை நம்பாதீர்கள்
‘முதலைக் கண்ணீர் வடிக்கிறார்’ என்று யாரையாவது பற்றிச் சொல்லப்பட்டதைக் கேட்டிருக்கிறீர்களா? அந்தக் கண்ணீரும் வருத்தமும் உண்மையானதோ உள்ளப்பூர்வமானதோ அல்ல என்பதே அதன் அர்த்தம். உண்மையில் முதலை, தன் உடம்பில் சேரும் அதிகப்படியான உப்பை வெளியேற்றுவதற்காகவே கண்ணீர் வடிக்கிறது. போலிகளை நம்பாதீர்கள் என்பது நீங்கள் முதலைகளிடமிருந்து கற்கும் பாடம்!!!
-ஏ.ஜே.ஞானேந்திரன்-
05.10.18
 
Last edited:
Back
Top