இசையுடன் லயம் சேரும்போது தான் இசையை ரசிக்கமுடிகிறது.... மனமும் நிறைந்துவிடுகிறது.... ஆதியின் கவிதைகளை படிக்கும்போது சிந்தனாவாதியோ இவன் என்று நினைத்து வியக்கவைக்கும் வரிகள்.... படித்ததும் இத்தனை ஞானம் நிறைந்த தம்பியின் கவிதைக்கு என் பின்னூட்டம் சரியாக இருக்குமோ என்ற பதட்டம் சேரும் என் மனதில்.... தமிழை அழகாய் கவிதை வரிகளாய் எளிதாய் எல்லோரும் அறியும் விதமாய் படைக்கும் ஆதியின் எழுத்துகள் பிடிக்கும்.... மனமும் அப்படியே... அன்பை நிறைத்துவைத்திருக்கும் அற்புத தம்பியிவன்...... வாழ்வில் எல்லா நலன்களும் ஒருசேரக்கிடைக்கட்டும் இந்தப்பிள்ளைக்கு....
இவரது விரல்களில் தமிழன்னை நிரந்தரமாகத் தங்கியிருக்கிறாளோ என வியந்து, வியந்து நோக்க வைக்கும் வார்த்தை சித்தர். கவிதைகள் இவரின் குழந்தைகளாகப் பிறக்கவேண்டுமென கடவுளை பிரார்த்திக்கும். எல்லாவற்றுக்கும் மேல் என் பாசமிகு அன்புத்தம்பி.
இலக்கிய வளமும் மொழிச்செறிவும் கருத்தாழமும் கொண்ட கவிதைவரிகளுக்கு சொந்தகாரர்..!! சமூக நேயமிக்க இளைஞன்... சமூக நெருடல்களை சிறிதும் சமரசமின்றி சாடுவதில் ஆதிக்கு நிகர் ஆதியே...!! எதிர்காலத்தில் இலக்கிய உலகில் நீங்காது நிற்கும் இவரது பெயர் என்பது எனது கணிப்பு... அதற்கான முழுதிறமைகளையும் ஒருங்கே உள்ளடக்கி வைத்திருப்பவர்...!!
இளைஞர்கள் தறிகெட்டு செல்வதற்கு எத்தனையோ வழித்தடங்கள் இன்றைய காலத்தின் சாபக் கேடு.
தவறியும் அதன் பாதிப்பை ஆதி எங்கும் எதிலும் தன் எழுத்தில் காட்டாத அவருடைய படைப்புக்கள் அவருடைய இயல்பான நன்நெறி வாழ்க்கைக்குச் சான்று பகர்க்கும் . வந்த சில நாட்களிலேயே நெடிய பாதிப்பை அவருடைய கவிதைவரிகள் ஏற்படுத்தியது. இந்திய நாட்டின் பாரம்பரியப் பெருமை ஆதியைப் போன்ற இளைஞர்களால்தான் இன்று கட்டிக் காக்கப் படுகிறது என்று சொல்லவைக்கும் அளவிற்கு அவருடைய படைப்புக்கள் இருப்பது நமது மன்றத்தின் பலம். ஆச்சிரியப் பட வைத்த இளைஞர்.
சொல்லிலும் எழுத்திலும் தன் அதி தீவிர சிந்தனையின் தாக்கத்தைக் காட்டு்ம் அமைதிக்கடலின் ஆர்ப்பரிக்கும் பேரலை என் அன்புத் தம்பி திரு ஆதி. என் மனங்கவர் மன்ற முத்துக்களில் முதல் இடம் ஆதிக்குத்தான். காதலின் மென்மையும், புரையோடிப்போன சமூக அவலங்களைத் தோலுரிக்கும் பாங்கும் வித்தியாசமான நிகழ்வுகளை ஒருங்கே சமநோக்கோடு பார்க்கும் பக்குவமும் அவரை ஒரு கர்ம யோகி என்று என்னை அடிக்கடி எண்ணவைக்கும்.
எதைப் பற்றிப் பேசினாலும் அதைப் பற்றி அறியாத அரிய தகவல்களை புதுக் கோணத்தில் தந்து அசத்தும் மித்திரன். தமிழுக்காக இவனா இவனுக்காக தமிழா என்ற கேள்வியின் சொந்தக்காரன். இன்னும் இன்னும் புகட்டும் வண்ணம் வாழட்டும் இவன் மன்றத்திலும் அவனியிலும்.