ஓவியா அக்கா பற்றி தனிக் கட்டுரையே எழுதினாலும் பற்றாது.
ஆரம்பம் முதல் இன்றுவரை, அக்காவும் தம்பியுமாக, லூட்டி அடித்து, கடித்து, குதறி, பிதற்றி, அரற்றி, இன்னும் என்னென்ன உணர்வுகள் இருக்கிறதோ அத்தனையும் பகிர்ந்து.... மன்றத்தில் நான் அதிகம் பேசிய நபர் என்றால் அது ஓவியா தான். மன்றத்தில் நான் அதிகம் சண்டையிட்டது யாரிடம் என்றால் அதுவும் ஓவியாதான்.
மிகச்சிறந்த கவிஞர், கதாசிரியர், பாடகி, நாட்டியக்கலையரசி, ரசனையாளர், நகைச்சுவையாளர், அன்பானவர், பழகுவதற்கு இனிமையானவர், தன்னைச் சுற்றியுள்ள சமூகம், மரியாதையுடனும் கண்டிப்புடனும் அமைதியுடனும் விளங்கவேண்டும் என்ற எண்ணம் உடையவர். எந்த ஒரு விடயத்திலும் ஆழ்ந்து இறங்கி படித்து அதன்படி நடப்பவர். ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் விதிமுறைகள் அமைத்து வாழ்க்கையை ஒரு அர்த்தத்தோடு வாழும் மிகச்சிலருள் ஓவியாவும் ஒருவர்.
திறந்த மனது, புதுமைப் பெண்களுக்கே உண்டான மிடுக்கு, பெண்மைக்குள் ஆண்மையை இருத்திப் பார்க்கும் அழகு, சமூக அக்கறை, சில நேரம் குழந்தையாக இருக்கும் வரம், என்று பல்வேறு நிலைகளுக்குள் சஞ்சரிக்கும் இவர், எண்ணத்தாலும், செயல்களாலும் கண்ணீராலும், பாசத்தாலும் அழகு வாய்ந்தவர்... ஒரு சராசரி பெண்ணுக்குள் அடங்காமல் திமிருபவர்...
பல்வேறு திறமைகள் ஒருங்கே அமையப்பெற்ற இந்த நாட்டியச்சிலை தற்போது மவுனத்தைக் கட்டியாளுவது அவரது திறமைக்கும் நம் மன்றத்திற்கும் விளைந்திருக்கும் கேடு.... சில சமயங்களில் மவுனம் கூட நமக்கு விரக்தியை ஏற்படுத்தும்..
ஓவியாவுக்கும் எனக்கும் ஒரு சிறு வித்தியாசம்தான்... எங்கள் இருவருக்கும் தாய் வேறு.. ஆனால் பாசம் ஒன்று. உயிர் வேறு, ஆனால் எண்ணம் ஒன்று.
ஒரு மனிதனால் தனது அன்னையை என்றென்றும் மறக்க இயலாது.... அதைப் போல ஓவியா எனக்கு....